ஞாயிறு, 1 ஜனவரி, 2012





சென்னை: "சித்திரைத் திங்கள் முதல் நாளில் விழா கொண்டாடுவோரை, நாம் வேண்டாமென்று தடுக்கவில்லை. அதே நேரத்தில், நம்மைப் பொறுத்தவரை, தைத் திங்கள் முதல் நாள் தான், தமிழ்ப்புத்தாண்டு தொடங்கும் நாள்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றது முதல், தி.மு.க., அரசின் முக்கிய திட்டங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களுக்கு வழங்கப்பட்ட அலுவலகங்களைக் கூட, மீண்டும் கைப்பற்றக் கூடிய அளவுக்கு இது சென்றிருக்கிறது. வாழ்க அவர்களுடைய பரந்த, சிறந்த உள்ளம். அந்த வரிசையில், தை முதல் நாள் தான் தமிழ்ப்புத்தாண்டு என, தி.மு.க., ஆட்சியில் சட்டம் இயற்றியதை மாற்றி, சித்திரை முதல் நாள் தான் புத்தாண்டு என, சட்டசபையில் மசோதா நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவித்து, அ.தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதன் மூலம், தி.மு.க.,வுக்கோ, அது நடத்திய ஆட்சிக்கோ, அவமானமில்லை.

மறைமலை அடிகள் தலைமையில், திரு.வி.க., சுப்பிரமணிய பிள்ளை, சச்சிதானந்த பிள்ளை, வெங்கசாமி நாட்டார், சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதம் உள்ளிட்ட அறிஞர்கள், 1921ம் ஆண்டு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்று கூடினர்.அந்தக் கூட்டத்தில் அவர்கள் எடுத்த முடிவுகள் மூன்று. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டாகப் பின்பற்றுவது. அதையே, தமிழாண்டாகக் கொண்டாடுவது. வழக்கத்தில், திருவள்ளுவர் காலம் கி.மு., 31ஐக் கூட்டினால், திருவள்ளுவராண்டு வரும் என்பதை மேற்கொள்வது என்பன. கடந்த 1939ல், திருச்சியில் அகில இந்திய தமிழர் மாநாடு, சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில், ஈ.வெ.ரா., கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர் உமா மகேஸ்வரன், கா.சுப்பிரமணியம், தெ.பொ. மீனாட்சிசுந்தரம், திரு.வி.க., மறைமலை அடிகள், பி.டி.ராஜன், ஆற்காடு ராமசாமி முதலியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

அந்த மாநாடும், தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு; பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்று தீர்மானித்தது. தற்போது, அ.தி.மு.க., பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், தமிழகத்தில் உலவிய அந்தத் தமிழறிஞருக்கெல்லாம் இழைக்கப்படும் அவமானம்.அவர்கள் எப்படி வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகட்டும். நம்மைப் பொறுத்தவரை, தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள் தான். அதே நேரத்தில், சித்திரைத் திங்கள் முதல் நாளில் விழா கொண்டாடுவோரை, நாம் வேண்டாமென்று தடுக்கவும் இல்லை. இதை அப்போதே அறிவித்துள்ளோம்.இவ்வாறு, கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக