ஞாயிறு, 1 ஜனவரி, 2012

Change for differntly abled persons: மாற்றுத் திறனாளிகளுக்கு மாற்றம் தரும்! & வளர வேண்டும் கூத்துக் கலை!

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆட்டோவை வடிவமைத்த உதவிப் பேராசிரியர் கமலக்கண்ணன்: "இரண்டு காலும் இல்லை; என்னால் எதுவும் செய்ய முடியாது. என்னை எப்படி மாற்றுத் திறனாளின்னு சொல்றே?' என, நண்பன் ஒருவன் போகிற போக்கில் எழுப்பிய கேள்வி, மாற்றுத் திறனாளிகளுக்கான ஆட்டோவை உருவாக்க காரணமாக அமைந்தது. இந்துஸ்தான் பல்கலைக்கழக ஆட் டோ மொபைல் துறையில் உதவிப் பேராசிரியராக இருப்பதால், என் மாணவர்கள் உதவியுடன் இந்த ஆட்டோவை வடிவமைத்தேன். ஆட்டோவில் டிரைவர் இருக்கையை முழுவதுமாக மாற்றி, டிரைவர் இருக்கைக்குப் பதிலாக, சிறிய நாற்காலி ஒன்றைப் பொருத்தினேன். அந்த சக்கர நாற்காலியின் இயக்கத்தை, "ஜாய் ஸ்டிக்' மூலம் கட்டுப்படுத்த முடியும். இதேபோல், ஆட்டோவுக்குள் சக்கர நாற்காலியை ஏற்றுவதற்கு வசதியாக, "லிப்ட்'டும் பொருத்தப்பட்டுள்ளது. இது, பி.எம்.டி.சி., எனும் மின் மோட்டார் மூலம் இயங்குவது போல் வடிவமைத்து இருக்கிறேன். அதிகபட்சமாக 400 கிலோ வரை தாங்கும் திறன் கொண்டது. "லிப்டில்' பொருத்தப்பட்டுள்ள, "பேட்டரி'யை ஒருமுறை, "சார்ஜ்' செய்தால், 40 முறை ஏறி இறங்க முடியும். வழக்கமான ஆட்டோக்களில், "ஆக்சிலரேட்டர்' மற்றும் "கிளட்ச்'சை கை களாலும், "பிரேக்'கை கால்களாலும் இயக்க வேண்டியிருக்கும். நான் வடிவமைத்த ஆட்டோவில் அனைத்தையுமே கைகளால் இயக்கலாம். சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில், டீசல் ஆட்டோக்களை இயக்க அனுமதி கிடையாது. அரசின் இந்த முடிவை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் ஆட்டோக்களுக்கு மட்டும் தளர்த்தி, டீசல் ஆட்டோக்களை இயக்க அனுமதி அளிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் ஓட்டுனர் உரிமம் பெற, சென்னை, கே.கே. நகர், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் பரிந்துரை சான்றிதழ் வழங்கப்படுகிறது.

"வளர வேண்டும் கூத்துக் கலை!' 
பிரபல கூத்துக் கலைஞர் புரிசை கண்ணப்ப தம்பிரானின் பேத்தி கவுரி: பரம்பரையாக, கூத்துக் கலையைச் செய்பவர்களில் ஒரு சிலர், தம் பிள்ளைகள் இத்துறைக்கு வருவதை விரும்ப மாட்டார்கள். தாம் அனுபவித்த துயரத்தை, தங்கள் வாரிசு அனுபவிக்கக் கூடாது என்பது தான் காரணம். ஆனால், என் குடும்பம் இதற்கு நேர் எதிர். இயற்கையாகவே, கூத்தின் மீதிருந்த என் ஆர்வத்தை, என் தாத்தா கண்ணப்ப தம்பிரானும், என் அப்பா சம்பந்தன் தம்பிரானும் உற்சாகப்படுத்தினர். பள்ளி நாட்களிலேயே, வேஷம் போட்டு, தாத்தா, அப்பாவுடன் மேடையேறி விட்டேன். கஷ்டமான பொருளாதாரச் சூழலில் கூட, என் குடும்பத்தினர் இந்தக் கலையை விட்டு விடவில்லை. இந்த வைராக்கியம் தான் எனக்கு ஆதார சக்தி. கூத்தில் நாங்கள் பயன்படுத்தும் வடிவம், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தது. இது போல், தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டத்திற்கும், தனியாகக் கூத்து வடிவம் உள்ளது. பாரம்பரியம் மிக்க கூத்தை, பலர் மோசமான விஷயத்துடன் ஒப்பிட்டுப் பேசுகின்றனர். இது போன்ற செயல்கள், எங்களைப் போன்ற கலைஞர்களின் மனத்தைப் புண்படுத்துகின்றன. என் அப்பா சம்பந்தன் தம்பிரான், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம், புதுச்சேரி பல்கலைக் கழகம் உட்பட, பல கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்களுக்கு, கூத்துப் பயிற்சி தருகிறார். இம்மாணவர்கள், இன்னும் 20 ஆண்டுகளில், குருவாக மாறி, பலருக்கு இக்கலையைக் கற்றுத் தருவர். சாஸ்திரீய இசையும், கூத்தும் இணைவது ஆரோக்கியமான விஷயம். இன்றைய பெற்றோர் பலர், தங்கள் குழந்தைகள், "டிவி'யைப் பார்த்துக் கெட்டுப் போவதாக வருத்தப்படுகின்றனர். அவர்களை கூத்து பார்க்க அழைத்து வந்தால், குழந்தைகள் மனம் பண்பட்டு, ஆரோக்கியமான சமூகம் கண்டிப்பாக உருவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக