செவ்வாய், 11 அக்டோபர், 2011

Thamizhk katamaikal 6-10: தமிழ்க்கடமைகள் (6 – 10) திராவிடன் எனச் சொல்வதா? தமிழன் என்று சொல்லுக

தமிழ்க்கடமைகள் (6 – 10) திராவிடன் எனச் சொல்வதா? தமிழன் என்று சொல்லுக

தமிழ்க்கடமைகள் 6 :
திராவிடன் எனச் சொல்வதா?
தமிழன் என்று சொல்லுக

தமிழன், தன்னைத் தமிழனென்று கூறிக்கொள்ளவும வெட்கப்பட்டுத் “திராவிடன், திராவிடன்” என்று தோள் குலுக்குவதா? திராவிடன் என்ற பெயர் சங்க நூலிலே ஏது? “சுயமரியாதை சுயமரியாதை” என்று, ஆரிய மொழி பேசினார்கள். நான் சொல்லிச் சொல்லி, இப்போதுதான் ‘தன்மானம்’ என்று தமிழாகப் பேசுகிறார்கள். நீங்கள் அண்ணாதுரை பேசும்போது, அவர் பேச்சை அங்கீகரித்தும், அகமகிழ்ந்தும் அடிக்கடி கை தட்டினீர்கள். எனக்கு அதுபோல் கை தட்டாவிட்டாலும் மனத்தையாவது திறந்து வைத்துக் கேளுங்கள். நோய் தீர மருந்து தர முடியாமல் நஞ்சுகொடுத்து ஆளையே இழிவுபடுத்தித் தமிழ்க் கலையை அழிக்க வேண்டா. மக்களுக்கு அறிவூட்டுங்கள். ஆரிய ஆபாசத்தை எடுத்துக் கூறுங்கள். அதுதான் தக்கவழி!
-நாவலர் சோமசுந்தர பாரதியார்
+++++++++++++
தமிழ்க்கடமைகள் 7 : 
தமிழ்மொழி ஆக்கத்திற்கு வழிவகைக் காண்க
மொழிவளத்தால் ஒரு நாடு நன்னிலை பெறும். மொழி வளங்குன்றின் வீழ்ச்சியுறும். தமிழ்மொழி பழமையானது. இலக்கண இலக்கியச் செறிவு மிக்கது. அரசரும் குடிகளும் தமிழைப் போற்றிப் புரந்தனர்; அதுகாறும் அவர்கள் வெற்றிக்கு வீழ்ச்சியில்லை. பின்னர் அடிமைவாழ்வில் அகப்பட்டு மொழியை மறந்தனர்; மீளும் வகையின்றி ஆளாத் துயரில் உழல்கின்றனர். எனவே, இவ்விழிநிலைமாறத் தமிழ் இலக்கியங்களையும் பிற நாட்டாரின் கலைத்திறனையும் கற்று முன்னேற வேண்டும். பட்டம் பெற்ற பட்டதாரிகளிற் பலர், தாம் கற்ற கலைத்திறனை,  ஆங்கிலம் அறியாத கோடிக்கணக்கான மக்களுக்குப் பயன்படுமாறு செய்வதில்லை. நமது நாட்டு மக்கள் கல்வியில் முன்னேற வேண்டுமாயின், தம் நாட்டு மொழியிலே அனைத்தையும் கற்றல் வேண்டும். மேனாட்டினரும் வியக்கும் வண்ணம், சப்பானியர், மிகக் குறுகிய காலத்திற்குள்ளாக­வே, மதி நலமும், படைநலமும், பொருள் நலமும் பெற்றுத் திகழ்வது, அவர்தம் நாட்டுமொழி அளித்த மதுகையாலேயாம். தாய்மொழிப் பயிற்சியால் ஆங்கில மொழித்திறன் குன்றிவிடுமென்று கூறுவது தவறுடைத்து. இசுலாமியர் பல்கலைக் கழகத்தினர் தோன்றிய காலம்முதல் அருங்கலையனைத்தையும் நாட்டு மொழியாகிய ‘உருது’­வில்­மாணவர்க்குக் கற்றுத் தரும் தனிச்சிறப்பைப் பெற்றுள்ளனர். மற்றொரு சாரார், கலை நூற்களைக் கற்றுத் தரத் தாய்மொழியில் கருவிநூற்கள், மரபுச் சொற்கள், வாய்பாடுகள் இல்லையென்கின்றனர். ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமை மிக்க தமிழறிஞர் சிலரை ஒன்று சேர்த்துப் பணவுதவி புரிந்தால் இக்குறைபாடு மிக எளிதில் நீங்கிவிடும். கலைநூற்களைத் தமிழ்மொழியில் எழுதுவோர்க்குச் சிறந்த பரிசுகள் வழங்கப்படுமென விளம்பரம் செய்யின் எத்துணை நூல்கள் வெளிவரும் தெரியுமா? எனவே, குறைபாடுகளை நீக்கிவிட்டுத் தமிழ்மொழி ஆக்கம் பெறுவதற்குரிய வழிவகைகளைக் காணவேண்டுவது தமிழர்களின் தலையாய கடமையாகும்.
-தமிழ்வேள் த.வே.உமாமகேசுவரனார்:
தமிழர் மாநாட்டுப் பேருரை (7.8.32):
தரவு: தமிழ்வேள் த.வே.உமாமகேசுவரனார் வாழ்வும் பணிகளும் (கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடு) : பக்கம்.97-98
++++++++
தமிழ்க்கடமைகள் 8
தமிழா நீ எழுச்சி கொள்வாய்

தமிழரிங்கு தமிழ்நாட்டில் ஒன்றி உள்ளம்
தான்குரலே கொடுத்திட்டால் என்றோ அங்கு
தமிழர்க்குத் தமிழ்ஈழம் மலர்ந்திருக்கும்
தமிழன்தான் இனமொழி நல்உணர்வே இன்றி
தமிழன்தான் வாழுகின்றான் இலங்கை தன்னின்
தமிழர் வரலாற்றறியாப் பேதையாக
தமிழா நீ எழுச்சி கொள்வாய் எனிலோ நன்றே
தரணிவாழ் தமிழரெலாம் மகிழ்ச்சி கொள்வார்.
- புலவர் புஞ்சையரசன்: தமிழ் எழுச்சிப் பாடல்கள் : பக்கம் 6
++++++++++++++++

தமிழ்க்கடமைகள் 9
அறிவியல் மொழியாய் தமிழே துலங்குக

மூத்தமொழி இலக்கணத்தால் முதிர்ந்து நிற்கும்
            உலகமொழி தமிழென்று மொழிதல் மட்டும்
மாற்றுவழி யாகாது விஞ்ஞா னத்தின்
            மருந்துமொழி விருந்துமொழி தமிழ்தான் என்று
போற்றுவதும் உலகத்தார் நாட்டார் எல்லாம்
            புரிந்துகொள வைப்பதுவும் ஆகும். இந்த
மாற்றத்தை உடனேநாம் மேற்கொண் டால்தான்
            மடிநீங்கிக் களிபொங்கித் தமிழ்த்தேர் ஓடும்
- தீப்பொறி பொன்னுசாமி, மலேசியா: உங்கள் குரல்
தமிழ்ச்செம்மொழிச் சிறப்பு மலர்: பக் 36
++++++++++++++++++++++++
தமிழ்க்கடமைகள் 10
தமிழர் பெயர் தமிழில்தான் இருத்தல் வேண்டும்
உலகத்தில் பெயரைப்பற்றிக் கவலைப்படாதவர்கள் உண்டா? பெயர்க்காகவே, பெயரை நிலைநிறுத்தவே உழைப்பவர்கள் பலரைக் காண்கின்றோமே. ஆதலின் உங்கள் பெயரைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாவா? தமிழராகப் பிறந்த உங்கள் பெயர் தமிழில் அல்லவா இருத்தல் வேண்டும். கிருத்துவராய் இருப்பினும், மகம்மதியராய் இருப்பினும், வேறு எச்சமயத்தினராய் இருப்பினும், தமிழர் பெயர் தமிழில்தான் இருத்தல் வேண்டும்.
தமிழ்ப்பெயர்க்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. பெயரைக் கொண்டே பெயரையுடையவர் ஆணா பெண்ணா என்று கூறி­விடலாம். ஆடவர் பெயர் னகார ஒற்றில்(ன்)தான் முடியவேண்டும்.
சங்க இலக்கியக் காலத்தில் சாதிகள் கிடையா. சாதியைக் குறிக்கும் தேவர், நாடார், பிள்ளை, ஐயங்கார் முதலிய பட்டப் பெயர்கள் கிடையா. ‘ன்’ ஓடு ‘அர்’ அல்லது ‘ஆர்’ விகுதி சேர்த்து அழைப்பர்; நக்கீரன்-நக்கீரர்; இறையன்- இறையனார்.
சங்க இலக்கிய காலத்திற்குப் பிறகு தமிழர் பெயர்கள் தமிழில் இல்லாது வேறு மொழிகளில் தோன்றத் தொடங்கிவிட்டன. தமிழன், பெயரில் கூடத் தமிழனாக இல்லை. இன்று ஓர் எழுச்சி- தமிழ், தமிழ், என்ற முழக்கம். நல்ல காலம் பிறக்கின்றது. தமிழன் தமிழ்ப் பெயரை விரும்புகின்றான். அவ்விருப்பம் எங்கும் பரவுக.
-       செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார் :
-       சங்க இலக்கியம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக