சனி, 15 அக்டோபர், 2011

மெய்யாலுமா...?

மெய்யாலுமா...?

First Published : 15 Oct 2011 01:31:11 AM IST


அரசு தேர்வாணையத்தின் தேர்வு முறைதான் கண்துடைப்பு என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது என்றால், இப்போது தேர்வாணைய உறுப்பினர்களின் வீட்டில் நடந்த ஊழல் கண்காணிப்புத் துறையின் அதிரடி சோதனைகளும் கண்துடைப்புதான் என்று பரவலாகக் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை காலையில் சோதனை நடைபெறப் போவதாகவும், முக்கியமான தகவல்களைப் பத்திரப்படுத்தும்படியும், தேவையான தஸ்தாவேஜுகளையும், தொலைபேசி எண்கள் போன்ற அன்றாடத் தேவைகளையும் பாதுகாத்துக் கொள்ளும்படியும் வியாழக்கிழமை மாலை நான்கு மணிக்குக் கூட்டம்போட்டு உறுப்பினர்களை எச்சரித்துவிட்டார் தலைவர் என்று சொல்கிறார்கள்.  ÷இந்த அதிரடி சோதனை கண்துடைப்பு என்பதற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. இதெல்லாம் "தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதைதானே சாமி' என்று தேர்வாணையத்தின் கடைநிலை ஊழியர் ஒருவர் அங்கலாய்த்தார்.  ÷தேர்வாணையத்தில் நடந்த அத்தனை குளறுபடிகளுக்கும், முறைகேடுகளுக்கும் காரணமாவனர் தொடர்ந்து ஏழு வருடங்கள் பதவியில் தொடர்ந்த முன்னாள் செயலர். அவரோ "மீனே மீனே மீனம்மா' - என்று ஜாலியாகப் பாட்டுப் பாடியபடி வலம்வந்து கொண்டிருக்கிறார். முறைகேடுகளுக்குக் காரணமான முந்தைய தலைவர் காசியில் இருக்கிறாரா, ராமேஸ்வரத்தில் இருக்கிறாரா என்றுகூடத் தெரியாது. இந்த நிலையில் புதிதாக வந்தவர்கள் வீட்டில் சோதனை போட்டால், தேர்வாணைய முறைகேடுகள் எப்படித் தெரியவரும் என்று எழுப்பப்படும் கேள்வியில் நியாயம் இருக்கிறதுதானே?  ÷அதிகாரிகள் ஒன்றுக்கொன்றாகி ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் கொள்வதில் ஒற்றுமை நிலவுவதாகவும், ஆட்சி மாற்றத்தால் நடத்தப்படும் எல்லா சோதனைகளும் கண்துடைப்பு சோதனைகள்தான் என்றும் சொல்லப்படுகிறதே, மெய்யாலுமா...?    சாதாரணமாக ஜீன்ஸ் பேண்டும், டீ ஷர்ட்டுமாக குடும்பத்துடன் லட்சத் தீவுகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விடுமுறையைக் கழிக்கப் பயணமாகும் "நார்த் பிளாக்' நாயகன், இப்போதெல்லாம் கேஷத்திராடனத்தில் இறங்கிவிட்டது பலரை வியப்பிலாழ்த்தி இருக்கிறது. அதுமட்டுமல்ல, பார்க்காத ஜோசியர் இல்லை, போகாத பரிகாரத் தலங்களில்லை என்று கிரகங்களை நம்பத் தொடங்கிவிட்டாரே பொருளாதார மேதை என்று அவரது ஆதரவாளர்களே ஆச்சரியத்தில் சமைந்து விட்டிருக்கிறார்கள்.  ÷சனிப்பெயர்ச்சியால் 2ஜி தன்னைப் பிடித்துக்கொண்டு விட்டதோ என்று சனி பகவானுக்குப் பரிகாரம் செய்யக் கிளம்பி விட்டிருக்கிறாரோ என்று நினைத்தால் தவறு. இதில் சிதம்பர ரகசியம் எதுவும் கிடையாதாம். இவருக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் மக்களவைத் தேர்தல் வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவர இருக்கிறதாம். அது பாதகமாகப் போய்விட்டால் என்ன செய்வது என்கிற கவலைதான், கார்ப்பரேட் நிறுவனங்களையும் நீதிமன்றங்களையும் மட்டுமே பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தவரைக் கடவுளைப் பற்றியும் நினைக்க வைத்திருக்கிறது என்கிறார்கள். மெய்யாலுமா...?    தேர்தல் வழக்கு என்று சொன்னதும், வழக்குத் தொடுத்தவர் பற்றிய ஒரு செய்தி. ஒன்றன் பின் ஒன்றாக வந்த தேர்தல் தோல்விகளால் துவண்டு விடவில்லை அந்த 63 நாயன்மார்களில் ஒருவர் பெயர் கொண்ட அந்த முன்னாள் அமைச்சர். அம்மையாரின் முதல் ஐந்தாண்டு ஆட்சியில் மிக அதிகமாக சம்பாதித்து சரித்திரம் படைத்தவர் என்கிற பெருமைக்குரிய இவர், பொதுப்பணியில் மட்டுமல்ல அடுத்தவர்களைக் கவிழ்க்கும் களப்பணியிலும் கெட்டிக்காரர் என்கிறார்கள்.  ÷அதிகார மையத்தின் முக்கியஸ்தர்கள் ஒருவரைத் தனது பணபலத்தால் ராவணனை வாலி தனது வாலால் கட்டிப் போட்டதுபோல இவர் கட்டிப்போட்டிருப்பதாகவும், எப்படியும் மீண்டும் இழந்த இடத்தையும், தொலைத்த பணத்தையும் திரும்பப் பெற்றுவிடுவேன் என்று சபதம் போட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். சிவகங்கைச் சீமானுக்கே தண்ணி காட்டியவர் இப்போது குறிவைத்திருப்பது யாருக்குத் தெரியுமா? அம்மாவின் அருளாசியுடன் அமைச்சரவையில் இடம்பெற்றுவிட்ட பெண்மணிக்கு. கண்ணனை மீறிய கோகுலமா என்று கொதிக்கிறாராம் மனிதர்.  ÷"எனக்கு ரெண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை, அவளை ஓரம் கட்டி ஒழித்துக் கட்டாமல் விடப்போவதில்லை. அதற்காக எனது சொத்தெல்லாம் அழிந்தாலும் பரவாயில்லை'' என்று நெருங்கிய நண்பர்களிடம் சூளுரைத்திருக்கிறாராம்.  ÷பாவம் அந்த அம்மணி. "அண்ணா' என்று அழைத்துப் பார்த்தார். நகர்ப்புறத்துக்கு அம்மாவால் நகர்த்தவும் செய்யப்பட்டார். பயனில்லை. இப்போது, என்ன செய்வாரோ, எப்படி காயை நகர்த்துவாரோ என்கிற பயத்திலேயே உலவுகிறாராம் அம்மணி. "அம்மா என்னைக் கைவிட்டுவிட மாட்டார்' என்கிற நம்பிக்கையில் உழன்று கொண்டிருப்பவருக்குத் தெரியாது அவருக்கு எதிராக ஒரு கூட்டணி வளர்ந்து வருவது.  ÷ஆயிரம் வாட்ஸ் விளக்கின் வெளிச்சத்தில் பார்த்தாலும் தெரியாத அளவுக்கு ரகசியமாகக் கண்ணும் கண்ணும் வைத்தாற்போல வளர்கிறதாம் மதியாலோசனை, மன்னிக்கவும், சதியாலோசனை. என்னுடைய இடத்தில் இன்னொருத்தியா என்று அவரும், எனக்கு எதிராகப் பெண்ணொருத்தியா என்று இவரும் கைகோத்துச் செயல்படுகிறார்களாமே, மெய்யாலுமா...?    மாவீரன், அஞ்சாநெஞ்சன் என்றெல்லாம் பெயர் வைத்துக் கொண்டவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் அந்தப் பெயருக்கு ஏற்றபடி நடந்துகொள்கிறார்கள். மதுரைக்காரரையே எடுத்துக் கொள்வோம். தலைநகர் பக்கம் போவதையோ, தனது அலுவல்களை கவனிப்பதிலோ அக்கறையே இல்லாமல் இருந்தவர், இப்போதெல்லாம் தமிழகத்துக்கு வருவதையே தவிர்க்கிறாராமே, தெரியுமா?  ÷எப்போதாவது காதும் காதும் வைத்தாற்போல வந்து போகிறாரே தவிர, நாலு பேர் பார்ப்பதுபோல நடமாடுவதைக்கூடத் தவிர்க்கிறாராம். அதுமட்டுமா, இவரது தொண்டர் வட்டம், மூடப்பட்ட வழக்குகள் தோண்டப்படுமோ என்று பயந்து தமிழகத்திலிருந்தே எஸ்கேப்பாகித் தலைநகரைத் தஞ்சம் அடைந்திருக்கிறதாமே, மெய்யாலுமா...?    அமைச்சர் மலைவாழ் இனத்தைச் சேர்ந்தவர். குளுகுளு வாசஸ்தலத்தைச் சேர்ந்தவர். ஊட்டியில் விளையும் உருளைக்கிழங்கையும், முட்டைக் கோசையும் எல்லோரும்தான் சாப்பிடுகிறார்கள். ஊட்டிக்காரர்கள் மட்டும்தானா சாப்பிடுகிறார்கள்? அதுபோலத்தானே அமைச்சர்களின் பதவியும்? எல்லோருக்கும் அமைச்சராக இருக்க வேண்டாமோ? தனது சொந்த ஜாதிக்காரர்களுக்கு மட்டும்தான் அமைச்சர் என்று நினைத்துக் கொண்டால் எப்படி?  ÷இவரைப் பற்றி ஒரு ஜோக். யாராவது சிபாரிசுக்கு வந்தால் எஸ்.சி.யா என்று விசாரித்துத் தெரிந்துதான் உதவுகிறாராம். மலைவாழ் இனத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் எஸ்.டி. அல்லவா, பிறகு ஏன் இவருக்கு எஸ்.சி. மீது கரிசனம் என்று கேட்டுவிடாதீர்கள். எஸ்.சி.என்றால் ஷெட்யூல் கேஸ்ட் (நஸ்ரீட்ங்க்ன்ப்ங்க் ஸ்ரீஹள்ற்ங்) அல்ல. சேம் கேஸ்ட் (நஹம்ங் ஸ்ரீஹள்ற்ங்). இப்போது புரிகிறதா அவரது பரிபாஷை?  ÷ஜாதிப்பற்று இருக்க வேண்டியதுதான். அதற்காக ஒருவர் தனது ஜாதிக்காரர்களுடன்தான் பேசுவது பழகுவது என்றா இருக்க முடியும்? ""இவரோட புத்திபோற போக்கப்பாரு'' என்று கூறி கட்சிக்காரர்களே சிரிக்கிறார்களாமே, மெய்யாலுமா...?    ஆளும் கட்சி சார்பில் சென்னை மாநகராட்சிக்கான தேர்தலில் போட்டியிடும் கவுன்சிலர்கள் அத்தனை பேரும் வெளியில் சொல்ல முடியாமல் ஒருவரை மனதாரத் திட்டுகிறார்கள் என்பது அந்த மனித நேயருக்குத் தெரியாமலா இருக்கும்? அவரிடம் "துரை', "துரை' என்று கெஞ்சிப் பார்த்தும், சாமி, சாமி என்று கும்பிட்டுப் பார்த்தும் எந்தவித பயனுமில்லை என்று குமுறுகிறார்கள் ஆளும்கட்சி வேட்பாளர்கள்.  ÷விஷயம் வேறொன்றுமில்லை. மொத்தம் 200 டிவிஷன்களில் போட்டிபோடும் வேட்பாளர்களைத் தங்களுக்கும் செலவு செய்து கொண்டு அவருக்கும் சேர்த்து இலவசமாகப் பிரசாரம் செய்யச் சொன்னால் அவர்களுக்குக் கோபம் வரத்தானே செய்யும்? வேறு கட்சியாக இருந்தால் ஆட்சிக்கு வந்த பிறகு தண்ணி காட்டலாம். அம்மா கட்சியில் அடக்கித்தானே வாசிக்க வேண்டும்.  ÷அவரிடம் கேட்டால் என்ன சொல்கிறாராம் தெரியுமா? ""இவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கினால் கொடுத்து மாளாது... கடைசி இரண்டு மூன்று நாள்களில் எதாவது கொடுத்து சமாதானப்படுத்திக்கொண்டு விடலாம்'' என்று சமாளிக்கிறாராம். பலவீனமான முப்பது நாற்பது பேருக்கு மட்டும் ஏதோ கொஞ்சம் கொடுத்துத் தனது வெற்றியை உறுதி செய்துகொள்ள முயற்சிக்கிறாராம்.  ÷""வேட்பாளர்கள் கிடக்கட்டும். ஆளும்கட்சித் தொண்டர்கள் ஆளுக்கு ஆள் காசு, காசு என்று ஆலாய் பறக்கிறார்களே. அவர்களை யார் சமாளிப்பது? இவர் வெறும் கையில் முழம்போட நினைத்தால் நாங்களும், வேட்பாளர்களும் நினைத்தாலும் வட்டமும் பகுதியும் காலைவாரிவிட்டுவிடுமே. கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றும் அவரை ஜெயிக்க வைக்க முடியாமல் போனால் அம்மாவுக்கு யார் பதில் சொல்வது?'' என்று மாவட்டங்களும் எம்.எல்.ஏ.க்களும் புலம்புகிறார்களாமே, மெய்யாலுமா...?

1 கருத்து:

  1. முன்னால் டி.ஜி.பி அமரர் திரு பொன் பரமகுரு. ஐ பி.எஸ்.அவர்கள் தேர்வாணயத்தின் தலைவராக இருந்து பல நன்மைகள் எழைகட்குசசெய்திருக்கிறார். ஒரு சிறு விசிடிங் கார்டு பின்புறம் ஒரு வரி எழுதி தருவார் அது மந்திரக்கோல் போல வேலை செய்து உடனே வேலை கிடைக்கும்.அது போன்ற கரை [படியாத கரங்கள் கொண்ட உத்தமர்கள் நடமாடிய இடம் தான் தேர்வாணையம் .

    பதிலளிநீக்கு