வியாழன், 13 அக்டோபர், 2011

Ramanujan award to american prof. : அமெரிக்க கணிதப் பேராசிரியருக்குச் சாத்திரா இராமானுசன் விருது


அமெரிக்க கணிதப் பேராசிரியருக்கு சாஸ்த்ரா ராமானுஜன் விருது

First Published : 13 Oct 2011 02:25:15 AM IST

Last Updated : 13 Oct 2011 02:31:12 AM IST

தஞ்சாவூர், அக். 12: சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் 2011-ஆம் ஆண்டுக்கான ராமானுஜன் விருது, அமெரிக்காவின் ஓஹியோ மாநிலப் பல்கலைக்கழக கணிதத் துறை உதவிப் பேராசிரியர் ரோமன் ஹோலோவின்ஸ்க்கிக்கு வழங்கப்படவுள்ளது.  இதுகுறித்து சாஸ்த்ரா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர். சேதுராமன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் 2005 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படும் இவ் விருது, கணித மேதை ராமானுஜத்தின் கணித சமன்பாடுகளில் தங்கள் தனித்திறனை வெளிப்படுத்தும் 32 வயதுக்குள்பட்ட இளம் கணிதவியல் வல்லுநர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  தன் 32 வயதிற்குள்ளேயே ராமானுஜன் அரிய சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.  10,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள இவ்விருது சீனிவாச ராமானுஜத்தின் பிறந்த நாளான டிச. 22 ஆம் தேதி அவரது சொந்த ஊரான கும்பகோணத்தில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழக வளாகத்தில் வழங்கப்படவுள்ளது.  அன்று நடைபெறும் எண்ணியல் கோட்பாடு, புள்ளிவிவரயியல் முறைமைக் கோட்பாடு மற்றும் இயக்கவியல் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கின் போது ரோமன் ஹோலோவின்ஸ்க்கிக்கு இவ்விருது வழங்கப்படவுள்ளது.  32 வயதிலேயே டாக்டர் ஹோலோவின்ஸ்கி பகுப்பாய்வு எண்ணியல் கோட்பாட்டிலும், எடுத்துக்காட்டு முன்மாதிரிப் படிவங்களிலும் தனித்து விளங்கி வருவதால், ராமானுஜன் விருதுக் குழுவின் தலைவரான ஃப்ளோரிடா பல்கலைக்கழகப் பேராசிரியர் கிருஷ்ணசுவாமி அல்லாடி, உட்ரெக்ட் பல்கலை. பேராசிரியர் ஃப்ரிட்ஸ் பாக்கர்ஸ், ஹார்வர்டு பல்கலை. பேராசிரியர் பெனிடிக்ட் க்ராஸ், வியன்னா பல்கலை. பேராசிரியர் கிரிஸ்டியன் கிராடென்தாலர், மெரி பல்கலை. பேராசிரியர் கென் ஓனோ, பென்சில்வேனியா மாநிலப் பல்கலை. பேராசிரியர் ராபர்ட் வாகன் மற்றும் ஸ்டேன்ஃபோர்ட் பல்கலை. பேராசிரியர் அக்ஷய் வெங்கடேஷ் ஆகியோர் அவரை ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர் என்றார் சேதுராமன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக