வியாழன், 13 அக்டோபர், 2011

உலக தமிழர் பேரவைத்தலைவரைத் திருப்பி அனுப்புவதா? சீமான் கண்டனம்

சென்னைக்கு விமானத்தில் வந்த
உலக தமிழர் பேரவை தலைவரை திருப்பி அனுப்புவதா?சீமான் கண்டனம்
சென்னை, அக். 13-
 
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஈழத் தமிழர் மக்களின் இன்னலைத் துடைக்கவும், உலக நாடுகளிடையே ஈழத் தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் சட்டப்பூர்வ அமைப்பான உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளாரை, விமானத்தில் இருந்து இறங்க அனுமதிக்காத மத்திய அரசின் குடியேற்ற அதிகாரிகள், அப்படியே திருப்பி அனுப்பியுள்ளது.
 
மனிதாபி மானமற்ற, சட்டத்திற்குப்புறம்பான செய லாகும். 77 வயதான மதிப்பு மிக்க பெருமகனை திருப்பி அனுப்பியதன் மூலம், உலகத் தமிழினத்தை மீண்டும் ஒரு முறை மத்திய அரசு அவமதித்துள்ளது. இச்செயலை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.   இந்தியாவிற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து செல்லத்தக்க பயண அனுமதியை இம்மானுவல் அடிகளார் வைத்திருந்தும், அவரிடம் எந்த ஒரு காரணத்தையும் கூறாமல் வந்த விமானத்திலேயே மீண்டும் துபாய்க்கு திருப்பி அனுப்பியுள்ளது
 
இந்தியக் குடியேற்றத்துறை. எப்படி 80 வயதிற்கு அதிகமான பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக சென்னைக்கு வந்த போது, எவ்வித காரணமும் கூறாமல் விமானத்தில் இருந்து இறங்கக் கூட அனுமதிக்காமல், மனிதாபிமான மற்று திருப்பி அனுப்பியதோ, அதே போல் உரிய பயண ஆவணங்களுடன் வந்திருந்த இம்மானுவல் அடிகளாரையும் திருப்பி அனுப்பியுள்ளது. இது தொடர்பாக நாம் விசாரித்ததில் அவர் முன்பொருமுறை இந்தியா வந்திருந்த போது, அனுமதிக்கப்பட்ட காலத்திற்கும் அதிகமாக இங்கு தங்கி விட்டார் என்றும் அதன்படி அவர் இன்னும் 3 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கு நுழைய அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.
 
இன்னும் 3 ஆண்டுகளுக்கு இந்தியாவில் நுழைய அவருக்கு அனுமதி இல்லையென்றால், அவருக்கு லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தியா வந்து செல்லக்கூடிய விசா வழங்கியது ஏன்? எனவே இது மத்திய அரசின் தூண்டுதலால் செய்யப்பட்ட திட்டமிட்ட அவமதிப்பாகும்.   ஈழத் தமிழினத்தை அழிக்க ராஜபக்சேவுடன் கைகோர்த்துச் செயல்பட்ட மத்திய காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழர்கள் பாடம் புகட்டிய பிறகும் அது திருந்தவில்லை. தமிழினத்திற்கு எதிரான அதன் போக்கு மாறவில்லை. தமிழனத்தை வஞ்சிக்கும் எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறது என்பதற்கு இந்த நிகழ்வு அத்தாட்சியாகும்.
 
எனவே காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும், மீண்டும் தமிழர்கள் பாடம் புகட்ட வேண்டும், சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களித்து, அதற்கு மாபெரும் தோல்வியைத் தந்தது போல், நடைபெறவுள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அனைவருக்கு எதிராகவும் தமிழின மக்கள் வாக்களித்து, அதனை தமிழ்நாட்டில் இருந்து வேரோடும் வேரடி மண்ணோடும்  கிள்ளி எறிய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக