தமிழ்க்கடமைகள் 7 : தமிழ்மொழி ஆக்கத்திற்கு வழிவகை காண்க
மொழிவளத்தால் ஒரு நாடு நன்னிலை பெறும். மொழி வளங்குன்றின் வீழ்ச்சியுறும். தமிழ்மொழி பழமையானது. இலக்கண இலக்கியச் செறிவு மிக்கது. அரசரும் குடிகளும் தமிழைப் போற்றிப் புரந்தனர்; அதுகாறும் அவர்கள் வெற்றிக்கு வீழ்ச்சியில்லை. பின்னர் அடிமைவாழ்வில் அகப்பட்டு மொழியை மறந்தனர்; மீளும் வகையின்றி ஆளாத் துயரில் உழல்கின்றனர். எனவே, இவ்விழிநிலைமாறத் தமிழ் இலக்கியங்களையும் பிற நாட்டாரின் கலைத்திறனையும் கற்று முன்னேற வேண்டும். பட்டம் பெற்ற பட்டதாரிகளிற் பலர், தாம் கற்ற கலைத்திறனை, ஆங்கிலம் அறியாத கோடிக்கணக்கான மக்களுக்குப் பயன்படுமாறு செய்வதில்லை. நமது நாட்டு மக்கள் கல்வியில் முன்னேற வேண்டுமாயின், தம் நாட்டு மொழியிலே அனைத்தையும் கற்றல் வேண்டும். மேனாட்டினரும் வியக்கும் வண்ணம், சப்பானியர், மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே, மதி நலமும், படைநலமும், பொருள் நலமும் பெற்றுத் திகழ்வது, அவர்தம் நாட்டுமொழி அளித்த மதுகையாலேயாம். தாய்மொழிப் பயிற்சியால் ஆங்கில மொழித்திறன் குன்றிவிடுமென்று கூறுவது தவறுடைத்து. இசுலாமியர் பல்கலைக் கழகத்தினர் தோன்றிய காலம்முதல் அருங்கலையனைத்தையும் நாட்டு மொழியாகிய ‘உருது’வில் மாணவர்க்குக் கற்றுத் தரும் தனிச்சிறப்பைப் பெற்றுள்ளனர். மற்றொரு சாரார், கலை நூற்களைக் கற்றுத் தரத் தாய்மொழியில் கருவிநூற்கள், மரபுச் சொற்கள், வாய்பாடுகள் இல்லையென்கின்றனர். ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமை மிக்க தமிழறிஞர் சிலரை ஒன்று சேர்த்துப் பணவுதவி புரிந்தால் இக்குறைபாடு மிக எளிதில் நீங்கிவிடும். கலைநூற்களைத் தமிழ்மொழியில் எழுதுவோர்க்குச் சிறந்த பரிசுகள் வழங்கப்படுமென விளம்பரம் செய்யின் எத்துணை நூல்கள் வெளிவரும் தெரியுமா? எனவே, குறைபாடுகளை நீக்கிவிட்டுத் தமிழ்மொழி ஆக்கம் பெறுவதற்குரிய வழிவகைகளைக் காணவேண்டுவது தமிழர்களின் தலையாய கடமையாகும்.
- தமிழ்வேள் த.வே.உமாமகேசுவரனார்:
தமிழர் மாநாட்டுப் பேருரை (7.8.32): தரவு: தமிழ்வேள் த.வே.உமாமகேசுவரனார் வாழ்வும் பணிகளும் (கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடு) : பக்கம்.97-98
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக