வியாழன், 26 மே, 2011

Thamizh kadamaigal 10 - Prof.Dr.S.Ilakkuvanar : தமிழ்க்கடமைகள் 10 : தமிழன், பெயரில் கூடத் தமிழனாக இல்லை.

தமிழ்க்கடமைகள் 10
தமிழர் பெயர் தமிழில்தான் இருத்தல் வேண்டும்
உலகத்தில் பெயரைப்பற்றிக் கவலைப்படாதவர்கள் உண்டா? பெயர்க்காகவே, பெயரை நிலைநிறுத்தவே உழைப்பவர்கள் பலரைக் காண்கின்றோமே. ஆதலின் உங்கள் பெயரைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாவா? தமிழராகப் பிறந்த உங்கள் பெயர் தமிழில் அல்லவா இருத்தல் வேண்டும். கிருத்துவராய் இருப்பினும், மகம்மதியராய் இருப்பினும், வேறு எச்சமயத்தினராய் இருப்பினும், தமிழர் பெயர் தமிழில்தான் இருத்தல் வேண்டும்.
தமிழ்ப்பெயர்க்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. பெயரைக் கொண்டே பெயரையுடையவர் ஆணா பெண்ணா என்று கூறி­விடலாம். ஆடவர் பெயர் னகார ஒற்றில்(ன்)தான் முடியவேண்டும்.
சங்க இலக்கியக் காலத்தில் சாதிகள் கிடையா. சாதியைக் குறிக்கும் தேவர், நாடார், பிள்ளை, ஐயங்கார் முதலிய பட்டப் பெயர்கள் கிடையா. ன்ஓடு அர்அல்லது ஆர் விகுதி சேர்த்து அழைப்பர்; நக்கீரன்-நக்கீரர்; இறையன்- இறையனார்.
சங்க இலக்கிய காலத்திற்குப் பிறகு தமிழர் பெயர்கள் தமிழில் இல்லாது வேறு மொழிகளில் தோன்றத் தொடங்கிவிட்டன. தமிழன், பெயரில் கூடத் தமிழனாக இல்லை. இன்று ஓர் எழுச்சி- தமிழ், தமிழ், என்ற முழக்கம். நல்ல காலம் பிறக்கின்றது. தமிழன் தமிழ்ப் பெயரை விரும்புகின்றான். அவ்விருப்பம் எங்கும் பரவுக.
- செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்: சங்க இலக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக