வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

stalin about spectrum corruption: தி.மு.க.வை க் களங்கப்படுத்தவே அலைக்கற்றைக் குற்றச்சாட்டு: தாடாலின்

களங்கப்படுத்தும் காங்.உடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று அறிவிக்க என்ன தயக்கம்?  ஈழத் தமிழர்களைக் கொன்றதற்கே உடன்பட்டவர்கள் கட்சிக் களங்கத்திற்கா கவலைப்படப் போகிறார்கள்?  ஆட்சிக் களங்கத்தை அதிகாரச் சுவை மறைக்கிறதோ! களங்கம் கண்டு பொங்கி எழுந்து துடைப்பீர்! அல்லது எதுவும் பேசாமல் அமைதி  காப்பீர்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

தி.மு.க.வை களங்கப்படுத்தவே ஸ்பெக்ட்ரம் குற்றச்சாட்டு: ஸ்டாலின்

சென்னை, பிப். 3: தி.மு.க.வை களங்கப்படுத்தவே ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தொடர்ந்து கூறுவதாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.  தென் சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் விளக்கப் பொதுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:  தி.மு.க ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகப்போகிறது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு கம்பீரமாக மக்களைச் சந்திக்கும் நிலையில் நாம் உள்ளோம். நமது ஆட்சியைக் குறைச் சொல்ல முடியாதவர்கள், திட்டமிட்டு, சதி செய்து, மீண்டும் தி.முக. ஆட்சிக்கு வரக் கூடாது என்று பலர் ஒன்றுசேர்ந்து பல செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஸ்பெக்ட்ரம் என்ற பிரச்னையைக் கையில் எடுத்துள்ளனர். இதுதொடர்பாக, தி.மு.க. செயற்குழுவில் சிறப்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  தவறு நடந்திருந்தால் தண்டனையை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். ராசா சி.பி.ஐ. விசாரணைக்குச் செல்லவில்லையா? கைது என்ற நிலை வந்த போது கூட உடன்பட மறுத்தாரா? இல்லையே. எந்தக் குற்றமும் செய்யாத ராசாவை, தி.மு.க.வை களங்கப்படுத்த ஜெயலலிதா தொடர்ந்து பொய் குற்றச்சாட்டைக் கூறி வருகிறார் என்றார் ஸ்டாலின்.  தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான அன்பழகன்: தி.மு.க.வை அண்ணா தொடங்கவில்லை என்றால் தமிழர் என்ற உணர்வே இல்லாதவர்கள் தமிழ்நாட்டை ஆளும் நிலை தொடர்ந்து இருந்திருக்கும். தமிழகத்தில் 6-வது முறை முதல்வராக வருவார் என்று இங்கே பேசியவர்கள் தெரிவித்தனர். முதல்வர் என்ற பதவி அவருக்குப் பெரியதல்ல. அரசியலில், எழுத்தில், இலக்கியத்தில், நிர்வாகத்தில் அவர் பெற்றுள்ள மதிப்பு ஆகியவற்றைப் பார்க்கும்போது தமிழை, தமிழர்களை 6-வது முறையாகப் பாதுகாப்பார் என்றுதான் கூற வேண்டும் என்றார் அன்பழகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக