சனி, 5 பிப்ரவரி, 2011

railway passenger raped: கேரளத்தில் ஓடும்தொடர்வண்டியில் இருந்து பெண்ணை கீழே தள்ளி கற்பழித்த சம்பவம்: கடலூரைச் சேர்ந்தவர் கைது

பெண்கள் பெட்டியில்  இருந்து யாரோ ீகீழே விழுவதைப் பார்த்த தொடர்வண்டிக் காப்பு ஊழியர் உடனே வண்டி யை நிறுத்தச் செய்து முதல் உதவிக்கு முயலாமல் அடுத்த நிலையம் சென்றதும்தான் காவல்துறையில் முறையீடு செய்துள்ளார்.  இவரைப் பணநீக்கம்  செய்து வழக்கு தொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் பிறருக்கேனும் கடமை உணர்ச்சி வரும்.  காம வெறியனுக்கும் கடுந்தண்டனை தர வேண்டும்.   பெண்ணிற்கான முழு மருத்துவச் செலவையும் குடும்பத்திற்கான உதவியையும் தொடர்வண்டித்துறை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் .பெண் இத்துறையின் அமைச்சராக இருக்கும் பொழுதே பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதே! 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்


கேரளத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளி கற்பழித்த சம்பவம்: கடலூரைச் சேர்ந்தவர் கைது


திருச்சூர், பிப். 4: கேரள மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளிவிட்டு கற்பழித்த சம்பவம் தொடர்பாக தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கேரள மாநிலம் ஷொர்ணூரைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு எர்ணாகுளம் - ஷோர்ணூர் பயணிகள் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் கொச்சியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.  தனது சொந்த ஊருக்கு ரயிலில், பெண்கள் பெட்டியில் சென்றார். அந்த பெட்டியில் அவர் மட்டும் தனியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அந்தப் பெட்டிக்கு வந்த மர்ம நபர் ஒருவர், அந்தப் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். இதை அப்பெண் தடுக்க முயன்றுள்ளார்.  பின்னர் அந்தப் பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து வெளியில் தள்ளி விட்டுள்ளார். பின்னர் அவரும் கீழே குதித்து அந்தப் பெண்ணை கற்பழித்துவிட்டு தப்பிவிட்டதாகத் தெரிகிறது.  இதனிடையே, பெண்கள் பெட்டியில் இருந்து யாரோ கீழே விழுவதைக் கடைசிப் பெட்டியில் இருந்து கவனித்த ரயில் கார்டு, ஷொர்ணூர் ரயில் நிலையம் சென்றதும் ரயில்வே போலீஸôரிடம் அதை தெரிவித்துள்ளார்.  இதையடுத்து படுகாயம் அடைந்து தண்டவளாத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்தப் பெண் மீட்கப்பட்டு திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அந்தப் பெண் கற்பழிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.  இந்தக் கொடிய செயலில் ஈடுபட்ட நபரை போலீஸôர் தேடிவந்தனர். இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரை போலீஸôர் கைது செய்துள்ளனர். அவர் ஏற்கெனவே பல குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டவர் எனவும் இடது கையை இழந்தவர் எனவும் போலீஸôர் கூறினர். அவர் இப்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார்.  கொலை முயற்சி, அபாயகரமான ஆயுதங்களால் தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக கோவிந்தசாமி மீது இந்திய தண்டனைச் சட்டம் 307, 326 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  பின்னர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு ஆண்மை சோதனை செய்யப்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 376-வது பிரிவின்படி கற்பழிப்பு வழக்கும் பதிவு செய்யலாம் என பரிந்துரைத்துள்ளனர்.  இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்தப்பெண்ணின் உடல்நலத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.  தலையில் எலும்புகள் முறிந்துள்ளதாகவும் மூளையில் ரத்தக் கசிவு உள்ளதாகவும் மருத்துவர்கள் மேலும் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக