வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

kalaignar about raja's arrest: அதிர்ச்சி அடைய வைக்கிறது இராசாவின் கைது: கருணாநிதி

<அபரிமிதமான வெற்றியைத் தடுக்கலாமே தவிர>  எச்சரிக்கையான சொற்கள்.தோல்வி வரும் என்று பேச்சிற்குக்கூடச் சொலலவில்லை. நாநலச் சிறப்பு  இன்றும் குறையவில்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்



அதிர்ச்சி அடைய வைக்கிறது ராசாவின் கைது: கருணாநிதி

சென்னை, பிப். 3: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது ஓரளவு கலங்கவும், அதிர்ச்சி அடையவும் வைப்பதாக திமுக பொதுக்குழுவில் அதன் தலைவரும், முதல்வருமான கருணாநிதி கூறியுள்ளார்.  சென்னையில் வியாழக்கிழமை நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கருணாநிதி ஆற்றிய உரை:  "பொதுக்குழு கூட்டப்படுகின்ற நேரத்தில் வழக்கம்போல் வந்துள்ள ஒரு சோதனை இன்றைய தினம் நம்மையெல்லாம் ஓரளவு கலங்க வைத்து இருக்கிறது. அதிர்ச்சி அடைய வைக்கிறது. நம்முடைய மகிழ்ச்சியை, ஆர்வத்தை குறைக்கின்ற நிலைக்கு உள்ளாக்கி இருக்கின்றது.  ஆனால், உண்மையின் ஒளி விரைவில் தெரியத்தான் போகிறது. பொதுத்தேர்தல் - சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தல் வர இருக்கிறது. முதலில் ஓராண்டு - அரையாண்டு - என்றெல்லாம் கருதப்பட்டு இப்போது நாட்களை எண்ணி -இத்தனை நாட்களில் நாம் தேர்தல் களத்தில் இறங்க இருக்கிறோம் என்ற அளவில் அந்தக் கட்டம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது.  தில்லி சென்று வந்த பயணம் வெற்றியா தோல்வியா என்பதைத் தேர்தலில் நீங்கள் (கட்சியினர்) ஆற்றும் பணியைப் பொறுத்துதான் என்னால் சொல்ல முடியும். எனவே, சிறிய விஷயங்களை - ஒருவருக்கொருவர் பேசித் தீர்த்துக்கொள்ளக்கூடிய விஷயங்களை பெரிதுபடுத்தி பகைமையாக்கிக் கொள்ள வேண்டாம்.  நமக்குள்ளே இருக்கின்ற காழ்ப்புணர்ச்சிகள், நமக்குள்ளே உருவாகின்ற பகை உணர்ச்சிகள், விரோத எண்ண மனப்பான்மை - ஒற்றுமையின்மை... இவைகளெல்லாம் ஒருவேளை நம்முடைய அபரிமிதமான வெற்றியைத் தடுக்கலாமே தவிர நம்முடைய ஆற்றலோ -நம்முடைய சாதனைகளோ நாம் தோற்றுப் போவதற்கு நிச்சயம் காரணமாக இருக்காது என்ற நம்பிக்கையை நான் பெற்று இருக்கிறேன்.  அந்த நம்பிக்கையுடன் நீங்கள் செயலாற்றுங்கள்; பணிபுரியுங்கள். தேர்தலை எதிர்கொள்ளுங்கள். அப்படித் தேர்தலை எதிர்கொள்கின்ற நேரத்தில் எத்தனை எத்தனை சங்கடங்கள் ஏற்படும் என்பதையெல்லாம் இப்போது அறுதியிட்டுக் கூற முடியாது. அவ்வப்போது ஏற்படக்கூடிய எந்தச் சூழ்நிலை ஆனாலும் அதிலே ஏற்படக்கூடிய எந்த நிலையானாலும் அவைகளை எதிர்கொள்ளக்கூடிய சாதுரியமும், ஆற்றலும் கட்சியினருக்கு உண்டு. ஆகவே, தவிர்க்க வேண்டியது பகை உணர்வு ஒன்றுதான்.  இந்த முறை தேர்தலில் வெற்றி பெறுவதை விட நம்மை வீழ்த்துவதற்காக கங்கணம் கட்டிக் கொண்டு வாளை உயர்த்திக் கொண்டு முரசு முழக்கிக் கொண்டிருக்கின்ற எதிரிகள் - பகைவர்கள் அவர்கள் வீழ்ந்தார்கள். இந்த திராவிட இனம் காக்கப்பட்டது என்ற உறுதியை உலகத்துக்கு அறிவிப்பீர்கள். நம்மை வீழ்த்த யாரும் கிடையாது என்ற உள்ளத்தோடு நடைபோடுங்கள்' என்றார் கருணாநிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக