புதன், 2 பிப்ரவரி, 2011

kritnaa (krishna) about killing of fishermen: மீனவர்கள் மீதான தாக்குதல்

வேடிக்கை என்பதா? வெட்கம் கொள்வதா? வேதனை அடைவதா? சினம் கொள்வதா? சீற்றம் கொள்வதா? இது வரை 500க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் உயிர் பறிக்கப்பட்டிருக்க இருவர் கொலை என்றே வெளியுறவு அமைச்சரும் செயலரும் பேசி உண்மையை மறைத்துத் தவறான கருத்தைப் பரப்பி வருகிறார்களே!  நாட்டு மக்கள் கொல்ப்படும் பொழுது காரணமான வெளிநாட்டு உறவிற்கு ஊறு நேராத வகையில் கால், கை  பிடித்து விடுவோம் என்பது என்ன கொள்கையோ! இப்படிப்பட்ட கட்சியை ஆளும் கட்சியாக ஆக்கும் நம்மைத்தான் நொந்து கொள்ள வேண்டும். அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்


மீனவர்கள் மீதான தாக்குதல் சாதாரண பிரச்னையல்ல: கிருஷ்ணா
First Published : 02 Feb 2011 01:12:59 AM IST

புதுதில்லி, பிப். 1: இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் இருவர் கொல்லப்பட்டதை கடுமையான விஷயமாகக் கருதுவதாகவும், இதுதொடர்பாக இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை அரசை மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வலியுறுத்தினார்.தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை இனிமேலும் தொடரக் கூடாது என்றும் இலங்கை அரசை அவர் கேட்டுக் கொண்டார்.கொழும்பில் திங்கள்கிழமை இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவை இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் சந்தித்து, இந்த பிரச்னை குறித்து விவாதித்தார்.அதுகுறித்த விவரங்களை தில்லியில் முதல்வர் கருணாநிதியைச் செவ்வாய்க்கிழமை சந்தித்து கிருஷ்ணா விளக்கிக் கூறினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் கிருஷ்ணா கூறியதாவது:இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது குறித்து விவாதிக்க இந்திய- இலங்கை கூட்டு செயல் குழுக் கூட்டத்தை பிப்ரவரி 15-ம் தேதி வாக்கில் நடத்த ஏற்பாடு செய்யுமாறு நிருபமா ராவிடம் அறிவுறுத்தியுள்ளேன்.எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும், தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது பழங்கதையாக இருக்க வேண்டும். இத்தகைய சம்பவங்கள் நிகழ்காலத்திலோ, வருங்காலத்திலோ ஒருபோதும் நடைபெறக் கூடாது. தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.பாகிஸ்தான் உள்பட இதர நாடுகளின் கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடிக்கும் மீனவர்கள் எவரும் கடற்படையினரால் தாக்கப்படுவதில்லை என்பதை இலங்கை அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். நிலைமை இவ்வாறிருக்க, இலங்கை கடல் எல்லைக்குள் தவறுதலாகச் செல்லும் தமிழக மீனவர்கள் மட்டுóம் அந்த நாட்டு கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்காவது ஏன் என்றும் இலங்கை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டது.இலங்கையுடன் இந்தியா மிகவும் இணக்கமான நட்புறவைக் கொண்டுள்ளது. இத்தகைய சூழலில், இந்த விவகாரத்தில் இரு தரப்பு உறவுகள் பாதிக்காத வகையில் இலங்கை அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.இலங்கை அதிபர் ராஜபட்சவை சந்தித்த போது, இதுவிஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை நிருபமா ராவ் தெளிவுபடுத்தினார். இந்தியாவின் கவலையைப் பகிர்ந்து கொண்ட ராஜபட்ச, தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அந்தப் புலனாய்வு அறிக்கையை எதிர்நோக்கி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இதுதொடர்பாக திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இந்திய- இலங்கை கூட்டறிக்கையில், தமிழக மீனவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், அவர்கள் எந்தவித இடையூறும் இன்றி மீன்பிடித் தொழிலில் தொடர்ந்து ஈடுபடலாம் என்றும் தெரிவிக்óகப்பட்டுள்ளது.இதுவிஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தால், அத்தகைய நடவடிக்கையை எடுக்க எந்தவிதத் தயக்கமும் கிடையாது. நிறைய மீன்களைப் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மீனவர்கள் நமது கடல் எல்லையைத் தாண்டிச் செல்வது வழக்கமானதுதான். இதுவிஷயத்தில் மீனவர்களுக்கு உரிய வழிகாட்டுதலை அளிக்க நமது கடலோரக் காவல் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் கிருஷ்ணா. கருணாநிதியை கிருஷ்ணா சந்தித்த போது, நிருபமா ராவும் உடனிருந்தார். தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதற்கு இலங்கை அரசை இந்தியா கடுமையாக எச்சரிக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை சந்தித்துப் பேசியபோது வலியுறுத்தினார்.தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க, இந்தியா- இலங்கை இடையிலான சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் நமது கப்பல் படை, கடலோரக் காவல் படையை வலுப்படுத்த வேண்டும் என்றும் மன்மோகன் சிங்கிடம் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.இதுதொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனியிடம் பேசுவதாக கருணாநிதியிடம் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.ஜனவரி 12, 22 ஆகிய தேதிகளில் இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் இருவர் கொல்லப்பட்டது தொடர்பாக மன்மோகன் சிங்கை கருணாநிதி சந்தித்துப் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக