வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

Because of Raja, Cellphone comes to the poor-kalaignar con-gratulates: ஏழைகளிடம் அலைபேசியைக் கொண்டு சென்றவர்இராசா: முதல்வர் பாராட்டு

அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்ற சிறப்புகளை வரலாறு கண்டிப்பாகப்பாராட்டும். தமிழ்ச் சமுதாயத்திற்கு ஆற்றிய நற்பணிகைளப் பாராட்டும் வரலாறு இத்தகையவர் ஈழத் தமிழர்  ஒழிப்பிற்குத் துணை நின்ற அவலத்தையும் பதியும் என்பதை மறக்க வேண்டா. காலம் கடக்கவி்ல்லை. ஈழத் தமிழர்கள் தன்னுரிமையுடன் தம் நாட்டில் தனி நாட்டில் வாழ உரிய பணி ஆற்றினால் வையகம் உள்ள வரை கலைஞர் பெயர் நிலைத்திருக்கும். ஆங்கிலேயர் வஞ்சகத்தால்  தமிழர் உரிமைகள் சிங்களவர்களிடம்  அடகு வைக்கப்பட்ட  இன்றைய துயர நாளிலேனும் குலைஞர் சிந்தி்த்து அடிமைத் தளையை அறுக்க உதவலாம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


ஏழைகளிடம் செல்போனை கொண்டு சென்றவர் ராசா: முதல்வர் பாராட்டு

சென்னை, பிப். 3: ஏழை, எளிய மக்களுக்கும் செல்போனைக் கொண்டு சென்றவர் ராசா என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.  தென் சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. பொதுக்குழுத் தீர்மானங்கள் விளக்கப் பொதுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:  நமது உள்ளங்களிலே அதிர்ச்சி ஏற்படுத்திய செய்தி குறித்த தீர்மானம் நமது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் ராசாவைக் கைது செய்தது தொடர்பானது இந்தத் தீர்மானம்.  ராசா இந்தத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று செய்த குற்றம் என்ன என்று பார்த்தால், ஏழை, எளிய மக்களுக்கும் செல்போனைக் கொண்டுசென்றதுதான்.  செல்போன் பணக்காரர்களுக்கு மட்டும் சொந்தமானதாக, பயன்படுத்தக் கூடியதாக இருந்தது.  இப்போது நாற்று நடச் செல்லும் பெண்களும், தையல் வேலைக்குச் செல்லும் பெண்களும் செல்போனைப் பயன்படுத்துகிறார்கள். மிகக் குறைந்த விலையில், குறைந்த வாடகையில் செல்போன் பயன்படுத்துவதற்கான நிலையை ஏற்படுத்திய பெருமை இன்று தில்லிச் சிறையில் வாடும் ராசாவுக்கு உண்டு.  அந்த ஏழை, எளிய மக்களின் சார்பாக தில்லியில் உள்ள ராசாவை பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.  நம்மவர்கள் இதுபோன்ற கொடுமைகளை அனுபவித்துத்தான் தீரவேண்டும். இதுபோன்ற கொடுமைகளின் மூலமாகத்தான், இந்த சமுதாயத்துக்காக நாம் நம்மை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் என்ற உணர்வு வரும்.  அண்ணா நூற்றாண்டு நூலகம், புதிய தலைமைச் செயலகம் போன்ற பணிகளை எந்தப் பத்திரிகைகளும் பாராட்டி எழுதவில்லை.  யாரும் தடுக்க முடியாது: திருவள்ளுவர் சிலை, சட்டப் பேரவைக்கான உயர்ந்த கட்டடம் ஆகியவற்றைப் பற்றி இவர்கள் எழுதாமல் இருக்கலாம்.  100 ஆண்டுகளுக்குப் பிறகு கருணாநிதி இருந்தான் என்று வரலாறு சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கூட, நான் எழுப்பிய மாளிகைகள் இருந்து அதைச் சொல்லும். என் பெயர் நிலைக்க வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. நான் ஆற்றிய காரியங்கள் தமிழ் மக்களுக்காக, தமிழ்ச் சமுதாயத்துக்காக நான் ஆற்றிய பணிகளை ஏடுகள் கூறாவிட்டாலும், என்றாவது ஒரு நாள் வரலாற்றில் நிலைக்கத்தான் போகிறது. அதை யாரும் தடுக்க முடியாது என்றார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக