புதன், 2 பிப்ரவரி, 2011

Fishermen issue: Singahalam should act according to law: மீனவர்கள் தொடர்பில் இலங்கை சட்டப்படி நடக்க வேண்டும்: கருணாநிதி

சிங்கள அரசு மனித நேயத்தின்படியும் தன் மண்ணின் மைந்தர்களின் உரிமைகளை ஒடுக்குவதற்காகத் தாய் இனததை வேரறுக்க வேண்டும் என்ற வெறி உணர்வை அகற்றியும் நடந்து கொள்ள வேண்டும்.  இல்லாவிடில் இந்திய அரசு தன் நாட்டின் குடிமக்களைக் காப்பாற்ற எவ்வகை  நடவடிக்கைக்கும் ஆயத்தமாக  இருப்பதாகத் தெரிவிக்க வேண்டும். ஆனால், இதற்கான வாய்ப்பு இன்மையால் அவற்றிற்கான வாய்ப்பும் இல்லை. 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

மீனவர்கள் விவகாரத்தில் இலங்கை சட்டப்படி நடக்க வேண்டும்: கருணாநிதி

First Published : 01 Feb 2011 03:39:15 PM IST


சென்னை, பிப்.1- இந்திய மீனவர்கள் விவகாரத்தில் இலங்கை மீனவர்கள் இந்திய எல்லையைத் தாண்டி வந்தால், இந்தியா எப்படி சட்டப்படி நடக்கிறதோ அதுபோல் இலங்கையும் சட்டத்தின் அடிப்படையில் நடந்துகொள்ள வேண்டும் என்றும், கடந்த 2010-ம் ஆண்டு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் சிறப்பான அணுகுமுறை காரணமாக நாட்டில் பெரிய அளவில் எந்த அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என்றும் தில்லியில் நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதி பேசினார். மாநாட்டில் அவர் பேசியதாவது:பிரதமரின் வழிகாட்டுதலில், மத்திய உள்துறை அமைச்சரின் நுணுக்கமான மற்றும் சீரிய அணுகுமுறைகளால், 2010-ம் ஆண்டு முழுவதும், உள்நாட்டுப் பாதுகாப்பில் பெரிய அசம்பாவித சம்பவம் எதுவும் நிகழவில்லை என்பதை இந்த அவையில் பதிவு செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். தமிழத்தைப் பொறுத்தவரை தொடர்ந்து அமைதிப் பூங்காவாகவே விளங்கி வருகிறது என்பதை இந்த அவையில் குறிப்பிடுவதில் பேருவுவகை அடைகிறேன். மாநில அரசும், தமிழகக் காவல் துறையும் விழிப்புடனும், கண்காணிப்புடனும் தொடர்ந்து செயல்பட்டு வருவதன் விளைவாக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில், மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் பெரிய அளவில் சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை. அண்மையில், வனப்பகுதிகளில் தீவிரவாதப் பயிற்சி முகாம்களை நடத்திட இடதுசாரித் தீவிரவாதிகள் மேற்கொண்ட முயற்சிகளைத் தமிழ்நாடு காவல்துறை முறியடித்துள்ளது என்பது மட்டுமல்லாமல், பல ஆண்டுகளாகத் தலைமறைவாகியிருந்த அந்த அமைப்புகளின் உறுப்பினர்களையும் கைது செய்துள்ளது.மத்திய அரசின் ஆதரவோடு கடலோரப் பாதுகாப்பைத் தமிழகம் பலப்படுத்தியுள்ளது. 2006-ல் திமுக அரசு பொறுப்பேற்றபின் தமிழகத்தில் 12 கடலோரக் காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு, கடலோரச் சுற்றுக் காவலுக்கென 24 படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது உட்பட தொடர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் அவலத்தையும் இந்த அவையின் கவனத்திற்குக் கொண்டு வர விழைகிறேன். அண்மையில் கூட, அதாவது 12.01.2011 அன்று, தமிழக மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து 22.01.2011 அன்றும் மேலும் ஒரு மீனவரும் கொல்லப்பட்ட கோரச் சம்பவம் நடந்துள்ளது. இவை வன்மையாகக் கண்டிக்கத்தக்கவையாகும். இலங்கை மீனவர்கள் இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்தால் நமது நாடு அவர்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகளைப் போல இலங்கை அரசும் எல்லையைக் கடக்கும் இந்திய மீனவர்கள் மேல் சட்டப்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இலங்கை அரசை இந்திய மத்திய அரசு கேட்டுக் கொள்ள வேண்டும்.உள்நாட்டுப் பாதுகாப்பைச் செம்மையாகப் பராமரிக்கவும், நிலைமைகளைத் தொடர்ந்து சீரிய முறையில் கண்காணிக்கவும் தமிழக அரசு எப்போதும் செயலாற்றும் என்று பிரதமருக்கும், மத்திய உள்துறை அமைச்சருக்கும் உறுதியளிக்கிறேன்.  இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக