திங்கள், 22 பிப்ரவரி, 2010

ஊடகங்களின் உளவியல் யுத்தத்தை சிற்றிதழ்கள் தகர்க்க வேண்டும்: எழுத்தாளர் தி.க.சிவசங்கரன்



திருநெல்வேலி, பிப்.21: பெரும்பான்மை அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் மக்களின் பண்பாட்டைச் சீரழிக்கும் உளவியல் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கும்போது, கொள்கைப் பிடிப்புள்ள சிற்றிதழ்கள் சிற்றுளிகளாகி, அந்த மலைகளைத் தகர்க்க வேண்டும் என, சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் தி.க.சிவசங்கரன் வலியுறுத்தினார். குற்றாலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க 5-வது மாநில மாநாட்டில் பாரதி இலக்கிய விருது பெற்ற அவரது ஏற்புரை: தமிழ் தேசியத்தை ஆதரிக்காத எவரையும் நேர்மையான எழுத்தாளர்களாகக் கருத முடியாது. தமிழ் மற்றும் தேசியம் பேசும் தினமணி மாதிரியான பெரிய பத்திரிகைகளுடன் இணைந்து சிறு பத்திரிகைகள் இயங்க வேண்டும். சிறு பத்திரிகைகள் இயக்கம் முன்னேற வேண்டும் என்றால் பெரிய பத்திரிகைகளின் ஆதரவு தேவை. பாரதியாரும், பாரதிதாசனும் காட்டிய வழியில் தினமணி மட்டுமே பயணித்துக் கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் கலாசாரம் தீவிரமாக வளர்க்கப்படும் இன்றைய சூழலில் சிறு பத்திரிகைகளின் கொள்கை நெறியும், போக்கும் பாரதிதாசன் பாதையில் இருக்க வேண்டும். மனிதநேயமிக்க அழகியல், அறிவியல், அறவியல் என இம் மூன்றையும் ஒருங்கிணைத்து புதிய படைப்புகளை வெளியிடுவதும், படைப்பதுமான பணிகளைச் செய்வதே இன்றைய காலத்தின் கட்டாயமாகும். நமது ஊனோடும், உயிரோடும் கலந்தது தமிழ் தேசியம். இந்தக் குரலை அடக்கி ஒடுக்குவதற்கும், தவறான வழியில் திசைதிருப்புவதற்கும் பெரும்பான்மை அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும், சில சக்திகளும் வரிந்து கட்டிக்கொண்டு செயல்படுகின்றன. அவை மக்களின் பண்பாட்டைச் சீரழிக்கும் ஓர் உளவியல் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. இதில் தரமான எழுத்தாளர்களும், படைப்பாளிகளும்கூட பலிகடா ஆகப் போகின்றனர். எனவே, கொள்கைப் பிடிப்புள்ள சிற்றிதழ்கள், சிற்றுளிகளாகி அந்த மலைகளைத் தகர்க்க வேண்டும். அதேவேளையில், சிற்றிதழ்களுக்கு நல்ல படைப்புகளத் தந்துகொண்டே இருக்க வேண்டும் என்ற கொள்கைப் பிடிப்பு படைப்பாளிகளுக்கும் இருக்க வேண்டும். அறிமுகப் படைப்பாளிகள், இளைஞர்கள், மாணவர்களுக்கு சிற்றிதழ்களே நாற்றங்காலாகவும், நடைவண்டியாகவும் இருக்கின்றன, இதில் பயிற்சி பெற்றவர்கள் பின்னாளில் தரமான படைப்பாளிகளாக உருவாகின்றனர். பாரதி முதல் புதுமைப்பித்தன் முதலான மாபெரும் எழுத்தாளர்களும், கவிஞர்களும் சிற்றிதழ்களால் வளர்ந்தவர்கள்தான் என்றார் தி.க.சி. இலங்கை எழுத்தாளர் அந்தனி ஜீவா: உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நடத்த வேண்டும். அடுத்த ஆண்டு ஜனவரியில் இலங்கையில் அத்தகைய ஒரு மாநாட்டை நடத்தவும், அதற்கு தமிழக எழுத்தாளர்களை அழைக்கவும் திட்டமிட்டுள்ளோம். எழுத்தாளர்களும், தினமணி பத்திரிகையும் ஆதரவு அளிக்க வேண்டும். பூ. திருமாறன்: சிற்றிதழ்களில் கொலை இல்லை, ரத்தம் இல்லை. உங்களை அறியாமலேயே இந்த சமுதாயத்திற்கு ஒரு சேவை செய்து வருகிறீர்கள். சிற்றிதழ்களுக்கு ஒரு நல்ல காலம் வரும். எழுத்தாளர் கழனியூரன்: எதில் எழுதுகிறோம் என்பது முக்கியமல்ல. என்ன எழுதுகிறோம் என்பதுதான் முக்கியம். நல்ல எழுத்துகள் பேசப்படும். அறிவியல் நம்மை வேறு ஒரு தளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இணையதளம் என்ற அந்த அறிவியல் முன்னேற்றத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இணையதள சிற்றிதழ்களையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.கவிஞர் கலாப்பிரியா: தி.க.சி.யை ஏற்றுக் கொண்டவர்கள் ஏராளம். அவரிடம் பயின்றவர்களும் ஏராளம். அவர் தனது கருத்தை மகன்களிடம் கூட திணித்ததில்லை. அவர் தனக்கு அறிமுகமான எழுத்தாளர்களை அவர்களது இயற்பெயரைச் சொல்லி அழைப்பதில்லை. அவர்களைக் கெüரவிக்கும் வகையில் புனைப் பெயரைக் கூறியே அழைப்பார்.எழுத்தாளர் தீப நடராஜன்: சிற்றிலக்கியங்கள்தான் இலக்கியத்தைக் காப்பாற்றி வருகின்றன. பெரிய இதழ்கள் இலக்கியத்தை மட்டுமே சார்ந்து இருப்பதில்லை. தினமணி நாளிதழ், இலக்கியத்திற்கென பக்கம் ஒதுக்கி தமிழ்மணியைத் தந்து கொண்டிருக்கிறது. இலக்கிய உலகில் தி.க.சி.க்கு தனி இடம் உண்டு. சிற்றிதழ்கள் சங்கத் தலைவர் வதிலை பிரபா: அஞ்சல் துறையின் உள்ளூர் அதிகாரிகள் திடீர் திடீரென நூல் அஞ்சலுக்கு கட்டணத்தை உயர்த்தி வருகின்றனர். அந்தப் போக்கைக் கைவிட வேண்டும்.எழுத்தாளர் அரங்க மல்லிகா: ஒளவையாரின் சமூக சிந்தனையை யாரும் மறந்துவிட முடியாது. என்னை இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்தது தினமணிதான்.
கருத்துக்கள்

தமிழ்த் தேசியத்தை வலியுறுத்திப் பேசியுள்ள தி.க.சிவசங்கரன் அவர்களுக்கும் இவர் பேச்சை வெளியிட்ட தினமணிக்கும பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/22/2010 3:41:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக