திருப்பூர் அருகே பத்தாம் நூற்றாண்டு நந்திச் சிற்பம் கண்டுபிடிப்பு!
திருப்பூர் அருகே 10-ஆம் நூற்றாண்டைச்
சேர்ந்த, தமிழ் எழுத்துகளுடன் கூடிய நந்திச் சிற்பம் ஒன்றைத் தொல்லியல் –
வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சாலையில் உள்ள படியூர் அருகே சின்னாரிபட்டி ஊரிலுள்ள கம்பத்தீசுவரர் கோயிலில், திருப்பூர்
வீரராசேந்திரன் தொல்லியல் – வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள்
க.பொன்னுசாமி, ச.இரஞ்சித்து, இரா.செந்தில்குமார், பொறியாளர்
சு.இரவிக்குமார் ஆகியோர் கடந்த சில நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்துகளுடன் கூடிய நந்திச் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து ஆய்வு மைய இயக்குநர், பொறியாளர் சு.இரவிக்குமார் பின்வருமாறு கூறினார்:
தமிழர்களின் 3,000 ஆண்டு மரபார்ந்த
வாழ்வுடன் மாடுகளும் கலந்து உயர்வு பெற்றன. காளைகள் தமிழர் பண்பாட்டையும்,
மரபையும் பறைசாற்றி நிற்கின்றன. மனிதகுல மேம்பாட்டுக்கான விழுமியங்களைச்
சுட்டி நிற்பவை காளைகள். பெரிய மாட்டு மந்தையைக் கொண்ட ஒருவர் மக்கள்
கூட்டத்தின் தலைவனாகக் கருதப்பட்டார்.
இச்சிறப்பினைப் பறைசாற்றும் வண்ணம் சிவன்
கோயில்களில் இலிங்கத்தின் முன்பும், அம்மையின் முன்பும் நந்தி
அமைக்கப்பட்டு இருக்கிறது. சிவனுக்கு ஊர்தியும், கொடிச் சின்னமும்
நந்தியாகும். பல்லவ அரசர்களும் நந்தியைத் தங்கள் கொடியாகக் கொண்டிருந்தனர்.
பண்டைய தமிழ் இலக்கியத்தில் ‘கோ’ எனும் சொல், நாட்டுத் தலைவனைக்
குறிக்கும். அதே சொல் ஆ (பசு), காளை இரண்டுக்கும் வழங்கும் பொதுச்
சொல்லாகும்.
இவ்வாறு பல சிறப்புகளைப் பெற்ற நந்திச்
சிற்பம் கொங்கு மண்டலத்தில் ‘பட்டி’ என்கிற சொல்லில் முடியும் ஊரில்
கிடைத்திருப்பது மிகச் சிறப்பான ஒன்று. இங்கு கண்டறியப்பட்ட இந்தச் சிற்பம்
90 சிறுகோல் (செ.மீ) நீளமும் 50 சிறுகோல் (செ.மீ) உயரமும் கொண்டதாகும்.
அதன் உடலில் எட்டு வரிகளில் எழுத்துகள் உள்ளன. அந்த ஊரிலுள்ள கால்நடைகள்
நோய்வாய்ப்பட்டபொழுது, நோய் குணமானவுடன் வேண்டுதலாக அதன் உருவமாகச் செய்து
வைத்ததுதான் இந்த நந்திச் சிற்பம். இந்த நடைமுறை இன்றும் கொங்குப்
பகுதிகளில் நீடிக்கிறது. தற்பொழுது மக்கள் மண்ணால் உருவம் செய்து
வைக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தரவு : இ.பு.ஞானப்பிரகாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக