கானல் நீரும் குடிநீராகலாம்! தேர்தல்முறையால் மக்களாட்சி மலராது!
கானல் நீரில், குடிநீர், மின்சாரம்,
கன்னெய்(பெட்ரோல்), ஏப்புநோய்(எய்ட்சு), புற்றுநோய் போன்ற நோய்களுக்கான
மருந்து, பசிப்பிணி போக்கும் மருந்து, அறுவையின்றி அனைத்து நோய்களையும்
தீர்க்கும் மருந்து, தங்கம், வைரம் ஆகியன பெறலாம் என்ற இந்த அனைத்துக்
கற்பனைகளும்கூடச் சாத்தியமாகலாம். ஆனால் தேர்தல் சீர்திருத்தம் செய்யாமல் ஊழலையும், கையூட்டையும் இந்த நாட்டில் இருந்து அறவே ஒழித்து விடலாம் என்பது ஆயிரம் ஆண்டுகளானாலும் இயலாது என்பதற்கு மாற்றுக்கருத்தே இல்லை என்பதே உள்ளங்கை நெல்லிக்கனி.
இந்த நாடு விடுதலைபெற்று 68 ஆண்டுகளாகி
விட்டன. இந்த 68 ஆண்டுகளில் மத்திய மாநில அரசுகள் பல நூறாயிரம் கோடி
உரூபாய்களை மக்கள் நலனுக்காகவே செலவழித்துள்ளதாகக் கூறுகின்றன. அக்கூற்று
உண்மையென்றால் வறுமையும், ஏழ்மையும் வேலையில்லாத் திண்டாட்டமும் இல்லா
நிலையல்லவா இருக்க வேண்டும்?
இந்நாடு விடுதலை பெற்ற பிறகு கிட்டத்தட்ட
1866 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் ஏற்பைப் பெற்றுள்ளதாகக்
கூறப்படுகிறது. இந்தக் கட்சிகளின் தோற்றத்திற்குக் கூறப்படும் காரணம்
மக்கள் நலன் ஒன்றே என்பதேயாகும்.
ஆனால் மக்கள் நலனே குறிக்கோளாகக் கொண்டு
பல்வேறு கட்சிகள் இந்த 68 ஆண்டுகளில் தோன்றிய போதிலும், பல கோடி மக்கள்
வறுமையிலும், ஏழ்மையிலும் வாழ்கின்ற அவலத்தைத்தான் காண முடிகிறது.
மனித வளமும், இயற்கை வளமும் கொண்ட
இந்நாடு இத்தகைய கையறு நிலையில் இருப்பதன் காரணம் அரசியல் என்பது தொண்டு
என்ற நிலை மாறி வணிகமானதுதான். வணிகம் செய்ய வந்த வெள்ளையன் அரசியல்
செய்தான் அவனால் கூட ஒரு நன்மை விளைந்தது. அதுதான் ஏக இந்தியா. ஆனால்
இன்றைய வணிக அரசியல்வாதிகளால் ஏக இந்தியா உருக்குலைந்து போகுமோ என்ற
அச்சம் நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
அரசியல் வணிகமானதன் காரணம் இந்நாட்டின்
தேர்தல் அமைப்பு முறைதான் என்பதை அனைத்து அரசியல்வாதிகளும் நன்கு
அறிவார்கள். மக்களுக்கும் இது புரியாமல் இல்லை.
இந்த நாட்டின் தேர்தல் அமைப்பு முறையில்
ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தலில் வெற்றி பெற பல இலட்சங்கள் செலவழிக்க
வேண்டியுள்ளது. மக்கள் தொண்டிற்காகவே பல இலட்சங்களை ஒருவன் செலவழிக்கிறான்
என்று மக்கள் நம்பினால் அது மூட நம்பிக்கையேயாகும். முதல் போட்டவன்,
பன்மடங்கு ஆதாயத்துடன் போட்ட முதலை எடுக்க விழைவானா அல்லது
தொண்டாற்றுவானா? இன்றைய தேர்தல் முறையே அரசியல்வாதியை வணிகனாக்கியது.
அரசியல் வணிகன், பன்மடங்கு ஆதாயத்துடன்
தான் போட்ட முதலை எடுக்க வேண்டுமென்றால் ஊழல் செய்தால்தான் முடியும்;
நேர்மையாக மக்களுக்குத் தொண்டாற்றி, (போட்ட) முதலை எடுக்க முடியாது; ஊழல்
செய்யாமல் அரசியல்வாதி (போட்ட) முதலை எடுக்க முடியும் என்பது மந்திரத்தால்
மாங்காய் விழ வைப்பதற்கு ஒப்பாகும் என்பவையே இன்றைய நிலை.
வறுமையும் ஏழ்மையும் நீக்கமற இந்த
நாட்டில் 68 ஆண்டுகளாக நிறைந்திருப்பதன் காரணம் ஊழலே என்பதை 120 கோடி
மக்களும் உணர்ந்தே உள்ளார்கள். ஆனால் அதற்குப் பல்வேறு காரணங்களை
அவரவர்க்குத் தெரிந்த மொழியில் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தலையாய
காரணம் இந்நாட்டின் தேர்தல் முறைதான் என்பதை உணரவில்லை
தெருவிலே கழைக்கூத்தாடி, கீரியையும்,
பாம்பையும் சண்டை விடப்போவதாகக் கூட்டத்தைக் கூட்டி ஏமாற்றிக் காசு
பறிப்பதைப் போல அனைத்து அரசியல் கட்சிகளும் ஊழலை ஒழித்து ஏழ்மையையும்,
வறுமையையும் போக்குவோம் என்று மேடைகளிலும் பல்வேறு ஊடகங்களிலும்
முழங்குகிறார்கள்.
ஆனால் நாம் காண்பதென்ன? எங்கும் இருப்பதாகக் கூறப்படுகின்ற இறைவனுக்கு நிகராக ஊழல் நாடெங்கும் பரவியிருக்கிறது.
ஊழல் செய்வதில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி
என்று பாகுபாடில்லாமல் அனைத்துக்கட்சிகளும் ஒத்துப்போய் உள்ளன. ஒரு
கட்சியை நடத்த வேண்டுமென்றால் பலநூறு கோடி உரூபாய் தேவைப்படும்.
அதற்காகப் பல நிறுவனங்களிடம் கைம்மாறு செய்வதாகக் கூறித்தான் பணம்
பெறுகின்றன. இவர்களுக்குப் பணம் உதவி செய்யும் நிறுவனத்தினர் எந்த ஆதாயமும்
கருதாமலா செய்வார்கள்? இவர்கள் பெற்ற பணத்திற்கு அவர்களுக்குக் கைமாறு
செய்துதான் ஆக வேண்டும். அதை நேர்மையான வழியில் செய்ய இயலாது. ஊழல் வழியே
மாற்றுவழி அதனால் தான் ஒரு கவிஞன் கூறினான் “தேர்தலில் அரசியல் வாதிகள் வெற்றி பெறுகிறார்கள்.மக்கள் தோற்கிறார்கள்” என்று.
இந்த நிலையில் அனைத்து அரசியல்
கட்சிகளும் ஊழலை ஒழிப்பதே தங்கள் கட்சியின் இலட்சியம் என்று அறை கூவல்
விடுவதில் எந்தக்குறையுமில்லை. ஊழலுக்குக் காரணம் இந்தத் தேர்தல் அமைப்பு
முறைதான் என்பதை அவர்கள் தெள்ளத் தெளிவாக உணர்ந்திருந்த போதிலும் அதைக்
களைவதற்கு எந்தச்செயல்திட்டமும் எந்த அரசியல் கட்சியாலும்
வகுக்கப்படவில்லை. மக்களாயம்(லோக் ஆயுத்தா / Lokayukta) தகவல் உரிமைச்சட்டம் போன்றவற்றால் ஊழலை ஒழித்து விடலாம் என்று கூறுவது புற்றுநோயையும், ஏப்புநோயையும் கால்பால்,.அனாசின்
போன்ற மாத்திரைகளால் குணப்படுத்திவிட முடியும் என்பதற்கு ஒப்பாகும். இதன்
மூலம் அரசியல்வாதிகள் உழலை ஒழித்துவிடுவார்கள் என்று நம்புவது மூட
நம்பிக்கையாகும். கையூட்டும்(இலஞ்சமும்) ஊழலும் அரசியல்வாதிகளின் இரு கண்கள் போன்றவை.
எனவே ஊழலை, கையூட்டை ஒழிப்போம் என்று அறைகூவல்விடுவது, கண்களைவிற்றுக்
கைச்சித்திரம் வாங்குவோம் என்பதற்கு ஒப்பாகும். அவர்கள் ஊழலை ஒழிக்காமல்
நாள்தோறும் புதிது புதிதாக ஊழல் செய்து தாங்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்கிக்
கொள்வது எப்படியென்றுதான் சிந்திப்பார்களே தவிர ஊழலை ஒழிக்கச்
சிறுதுரும்பைக் கூட கிள்ளியெறியமாட்டார்கள்.
தேர்தல் சீர்த்திருத்தத்தின்
முதற்படியாக இப்போது மின்னணு வாக்கு இயந்திரத்தில் செல்லாத வாக்கு போட
இயலாது என்ற குறை தீர்க்கும் விதத்தில் யாருக்கும் வாக்கில்லை(நோட்டா)
எனப்பதிவது கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த யாருக்கும் வாக்கில்லை என்பதைச்
சற்றே வலிமைப்படுத்தும் சீர்திருத்தத்தையாவது தற்போது செய்யலாம்
கீழே குறிப்பிட்டுள்ள தேர்தல்
சீர்திருத்தங்களையாவது மத்திய அரசு தேர்தல் ஆணையம் மூலமாகக் கொண்டு வர
வேண்டும் என்று மக்கள் குரல் எழுப்ப வேண்டும்.
- வாக்குப்பதிவு 50 விழுக்காட்டிற்குக் குறைந்தால், அந்தத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் செல்லாது என்றும், அனைத்து வேட்பாளர்களும் தகுதியிழந்ததாகவும் அறிவிக்க வேண்டும். அத்தொகுதியில் போட்டியிட்ட ஏற்பு பெற்ற அரசியல் கட்சி அந்தத் தொகுதியில் பத்து ஆண்டுகள் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும்.
- அந்தத் தொகுதியில் யார்க்குமில்லை என்பதற்கு(நோட்டவிற்கு)க் குறைவான வாக்குபெற்றவர்கள் பத்து ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடத் தடையும் பத்து இலட்சம் உரூபாய்த்தண்டத்தொகையும் விதிக்க வேண்டும். அத்தொகுதியில் போட்டியிட்ட ஏற்பு பெற்ற அரசியல் கட்சி அந்தத் தொகுதியில் பத்து ஆண்டுகள் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும்.
- வாக்களிக்காதவர்களின் விழுக்காடும், யார்க்குமில்லைப்பதிவும் சேர்ந்து 50 விழுக்காட்டிற்கு மிகுமானால் மேலே குறிப்பிட்டது இதற்கும் பொருத்தமுடையதாக்கப்பட வேண்டும்.
- மாநில / தேசியக்கட்சிகள். மாநில அளவில் / தேசிய அளவில் யார்க்குமில்லைப் பதிவிற்குக் குறைவான வாக்குகளைப் பெறுவார்களேயானால் அவர்கள் போட்டியிட்ட தொகுதிகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு அவர்களது ஏற்பிசைவைப் பத்து ஆண்டுகளுக்கு நிறுத்தவேண்டும்.
- ஏற்பிசைவு நிறுத்தப்பட்ட கட்சியின் தலைவர்கள், வேட்பாளர்கள் வேறு கட்சியில் சேர்ந்து போட்டியிடத் தடை விதிக்க வேண்டும்
இந்தச் சீர்திருத்தத்தினால்
தன்விருப்பர்(சுயேட்சை) என்ற பெயராலும் கட்சி என்ற பெயராலும் தேர்தலைக்
கேலிக்கூத்தாக்குபவர்களால் ஏற்படும் போட்டி அறவே ஒழிக்கப்படும். மக்கள்
ஆதரவு உள்ள வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளுமே தேர்தலைச் சந்திக்க
இயலும்.
இந்தச் சீர்திருத்தங்களோடு வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளைத் தேர்தல் ஆணையமே ஏற்றுக் கொள்ள வேண்டும்
வேட்பாளர்கள் எந்தச் செலவையும் மேற்கொள்ளக்கூடாது என்று வரையறுக்க வேண்டும்.
வேட்பாளர்கள் நூறு பேர் முன்மொழிதலுடன் வேட்பு மனு அளிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்
அவ்வாறு வேட்பு மனு அளிக்கப்பட்ட
வேட்பாளர் யார்க்குமில்லைப் பதிவிற்குக் குறைவான வாக்குகளைப்
பெறுவாரேயானால் அவரது வேட்பு மனுவை முன் மொழிந்தவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு
எந்தத் தேர்தலிலும் போட்டியிடவும் தடை விதிக்க வேண்டும்.
ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதியில்
போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்று அல்லது பாராளுமன்றத்திலும்,
சட்டமன்றத்திலும் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்று ஏதேனும்
காரணத்தால் ஒரு தொகுதியில் தேர்தல் நடைபெற வேண்டியிருந்தால்
அத்தொகுதிக்கான மறு தேர்தல் செலவை அவரே ஏற்கச் செய்ய வேண்டும்
ஒரு தொகுதியில் போட்டியிட்டு இடைப்பட்ட
காலத்தில் எந்தவொரு காரணத்தாலும் பதவ விலகினால் அந்தத் தொகுதியில்
நடைபெறும் மறு தேர்தலுக்கான செலவை அவர் அல்லது அவர் சார்ந்த கட்சிதான்
ஏற்றுக்கொள்ள வேண்டும்
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அனைத்துக் கட்சிகளும் வெற்றுக்கூச்சல் போடுகின்றன. ஆனால் தேர்தல்
முடிந்த பிறகு மக்களைப்பற்றி சிந்திப்பதேயில்லை. தாங்கள் போட்ட முதலை
எப்படியெடுப்பது என்ற எண்ணத்தைத் தவிர வேறு சிந்தனையே இருப்பதில்லை.
இத்தகுநிலை தவறு என்று மக்கள் வாதிப்பதற்கு எந்த அருகதையுமில்லை. அதில்
நியாயமுமில்லை, தருமமும்மில்லை, ஏனென்றால் முதல் போட்டு வணிகம் செய்பவன்
யாரும் இழப்பிற்குத் தொழில் செய்ய மாட்டான். பல நூறாயிரம் அல்லது சில
கோடிகளைச் செலவழித்தவன் தங்கள் நலனுக்காகத்தான் அவ்வாறு செலவிட்டான் என்று
மக்கள் நினைத்தால் அது மூட நம்பிக்கையேயாகும்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் மாதச்
சம்பளம் உரூ50,000/- சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் பல்வேறு
மாநிலங்களின் நிலைக்குத்தக்கவாறு உள்ளது, அதுவும் பெரும்பாலும்
உரூ50,000/-க்குக் குறைவாகவே இருக்கும் இந்தச் சம்பளத்தைப்
பெறுவற்காகவா கோடிக்கணக்கில் உரூபாய்களைச் செலவழிக்கிறார்கள் என்பதை மக்கள்
எண்ணிப்பார்க்க வேண்டும்
மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற
உயரிய நோக்கத்துடனா தங்களது வாக்கிற்குப் பணம் தருகிறார்கள் என்பதை
எண்ணிப்பார்க்க வேண்டும். செலவழித்த பணத்தைப் பல மடங்கு எடுக்க
வேண்டும் என்றுதான் அல்லும் பகலும் அவர்கள் அயராது பாடுபடுவார்களேயன்றி
மக்களுக்குத்தொண்டு என்பது வெறும் வாய்ச் சொல்லாகவேதான் இருக்க முடியும்.
மக்கள் இதைப்புரிந்து கொள்ளாமல்,
ஏழ்மையும், வறுமையும் தங்களைவிட்டு 68 ஆண்டுகளுக்குப் பின்னரும் அகலாததன்
காரணம் தங்களைப் படைத்த ஆண்டவன் சித்தம் என்றே கருதுகிறார்கள். அதனால்தான்
கோயில்களுக்குச் செல்கின்ற கூட்டம் நாள் தோறும் பெருகுகிறது.
இவர்கள் நம்புகின்ற ஆண்டவனால் கூட
இவர்களது வறுமையும், ஏழ்மையும் ஒழிக்க இயலாது என்பதே உண்மை. தேர்தல்
சீர்திருத்தம் ஒன்றே இதற்கான சரியான தீர்வாக அமையும். தேர்தல்
சீர்திருத்தம் வேண்டும் என்று போராடக்கூடிய கட்சி ஒன்று கூட இல்லை.
இந்நாட்டின் தேர்தல் முறைதான் 68 ஆண்டு விடுதலையின் பலன் – பல இலட்சம்
கோடி உரூபாய்கள் மக்கள் வரிப்பணங்களை மக்கள் நலன் சார்ந்து செலவழிக்கப்பட்ட
போதிலும் – மக்களைச் சென்றடையவில்லை.
இந்த நாடு விடுதலை பெற்றதிலிருந்து
வறுமை, ஏழ்மை ஒழிப்பே எமது இலட்சியம் என்று அனைத்துக் கட்சிகளும் ஒவ்வொரு
தேர்தலின் போதும் நாள்தோறும் கூக்குரலிடுகின்றன. மேலும் எல்லாரும்
கையூட்டும் ஊழலும்தான் ஏழ்மைக்கும் வறுமைக்கும் காரணம் என்று வெற்றுக்
கூச்சலிடுகிறார்கள். ஊழலுக்கும் கையூட்டிற்கும் காரணம் தேர்தல் முறைதான்
என்பது அவர்கள் அறியாததல்ல. ஆனால் தேர்தல் சீர்திருத்தத்தைக் கொண்டு
வருவதற்கு எந்தக் கட்சியும் முயற்சிக்கவில்லையென்பதே அனைவரும் அறிந்த
உண்மை. அதை முன் எடுக்க மறுப்பதன் மருமம் என்ன? இதை அறியாதவர்கள் அல்ல
அரசியல்வாதிகள் தேர்தல் சீர்திருத்தம் என்ற இலக்கை நோக்கி அவர்கள்
பயணிக்கமாட்டார்கள்.
மேலே குறிப்பிட்ட தேர்தல்
சீர்திருத்தங்கள் நடைமுறைப்ப்டுத்தப்பட்டால் நேர்மையாளர்கள் தேர்தலில்
பங்கெடுக்கத் தயங்கமாட்டார்கள். துணிந்து தேர்தல் களத்திற்குப் வருவார்கள்.
நேர்மையாளர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால்தான் கையூட்டும் ஊழலும் அறவே ஓழியும்.
விடுதலை பெற்ற இந்தியா 68
ஆண்டுகளுக்குப் பின்னரும் வளர்ச்சியடையவில்லையென்று சொல்ல இயலாது. வளர்ச்சி
யடைந்துள்ளது. ஒன்று வளமான இந்தியா, மற்றொன்று வறுமையான இந்தியா. வளமான
இந்தியாவின் தேர்தல் நிலைப்பாட்டால் வறுமையான இந்தியா உள்ளது. அரசியல்வாதிகள் வளமானவர்களிடம் பணத்தைப் பெற்று வறுமையானவர்களின் வாக்குகளை விலை பேசி வாங்கி ஆட்சி அதிகாரத்தைச் சுவைக்கிறார்கள்.
தங்களது வளத்தைப் பெருக்கிக் கொள்வதுடன், தங்களுக்கு ஆட்சி அதிகாரத்தைப்
பெறுவதற்குப் பண உதவி செய்த பெரு முதலாளிகளின் நலன் ஒன்றே தங்களது தலையாய
கடமை என்றெண்ணி செயல்படுகிறார்கள்.
இந்த நாட்டில் வறுமையும் ஏழ்மையும்
இருந்தால்தான் தாங்கள் வளமாக இருக்க முடியும, என்று அதைப் போற்றிப்
பாதுகாக்கிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்கு அறுவடை செய்ய
வேண்டும் என்பதற்காகவே வறுமை ஒழிந்துவிடக்கூடாது என்று செயல்படுகிறார்கள்.
மக்களும் எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்ற மனோநிலையில் மாற்றி மாற்றி அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்கிறார்கள்.
ஆட்சிகள் மாறுகின்றன! காட்சிகள் மாறுவதில்லை, மாறப் போவதுமில்லை!
இந்நாட்டின் விடுதலைக்காகத் தங்களை ஒப்படைத்துக் கொண்ட பல தியாகிகளின்
ஈகம் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. விடுதலைக்காகப் பாடுபட்டவர்களின்
கனவு தேர்தல் சீர்திருத்தத்தின் மூலமே நனவாக இயலும். அதை நோக்கிப்
பயணித்துச் செல்லக்கூடிய, மக்களை அந்த இலக்கை நோக்கி அழைத்துச் செல்லக்
கூடிய தன்னலமற்ற ஒப்படைப்பு உணர்வு கொண்ட மீட்பர்கள்தான் இந்த நாட்டிற்கு உடனடியாகத் தேவை.
தேர்தல் சீர்திருத்தம் ஏற்பட்டால் பல மீட்பர்கள் 120 கோடி மக்களிடத்து
இருந்து தோன்றுவார்கள் விடியலை நோக்கி அழைத்துச் செல்வார்கள். இந்நாட்டின்
ஏழை, எளிய பாட்டாளி மக்கள் இருட்டில் வாங்கிய விடுதலையின் பயனை அடையத்
தேர்தல் சீர்திருத்தம் என்ற ஒளிவிளக்கை ஏற்ற வேண்டும். இருட்டும் ஒழியும்!
விடியலும் தோன்றும்! ஏழ்மையும்,வறுமையும் அறவே அகலும் என்று நம்புவோம்
“நம்பினார் கெடுவதில்லை”
– மு.இலெனின் சுப்பையா
எஃப்4 பூபதி அடுக்ககம்,
10, எத்திராசு தெரு,
பள்ளிப்பட்டு, தரமணி(அஞ்சல்),
சென்னை-600113,
அலைபேசி:9444480816,
தொலைபேசி:04422351920.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக