சனி, 26 மார்ச், 2016

காவும் ஆரியங்காவும் – இரா.பி.சேது(ப்பிள்ளை)





காவும் ஆரியங்காவும் – இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஐயப்பன் : ayyaappan

 கா என்னும் சொல் சோலையைக் குறிக்கும். அது காவு எனவும் வழங்கும். மேற்குத் தொடர் மலையில் செங்கோட்டைக்கு அருகே ஆரியங்காவு என்னும் ஊர் உள்ளது. ஆரியன் என்பது ஐயனாருக்குரிய பெயர்களில் ஒன்று. ஐயனாரை மலையாள நாட்டார் ஐயப்பன் என்பர். ஆரியங்காவில் ஐயப்பன் வழிபாடு இன்றும் சிறப்பாக நடைபெறுகின்றது. மேற்குத் தொடர் மலைச்சாரலில் அமைந்த நெடுஞ்சோலையில் ஐயப்பன் கோயில் கொண்டமையால் அவ்வூர் ஆரியங்காவு என்று பெயர் பெற்றதென்பது நன்கு விளங்குவதாகும்.
  தொண்டை நாட்டில் திருமாலுக்குரிய திருப்பதிகளுள் ஒன்று திருத்தண்கா எனப்படும். அழகும் குளிர்மையுமுடைய அக் காவில் நின்றருளும் பெருமானை,
விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண்காவில்
வெஃகாவில் திருமாலை”
என்று திருமங்கை ஆழ்வார் போற்றினார். அவர் திருவாக்கின் பெருமையால் ‘விளக்கொளி கோயில்’ என்பது திருத்தண்காவின் பெயராக இக் காலத்தில் வழங்குகின்றது. இன்னும், காவளம்பாடி என்பது சோழ நாட்டிலுள்ள திருமால் திருப்பதிகளுள் ஒன்று. சோலை வளம் பொருந்திய இடத்தில் அமைந்த அப் பாடியைக் ‘காவளம் பாடி மேய கண்ணனே’ என்று பாடினார் திருமங்கை ஆழ்வார்.
சொல்லின் செல்வர்இரா.பி.சேதுப்பிள்ளை :
‘தமிழகம் ஊரும் பேரும்’
தரவு:பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_e.bhu.gnanaprakasan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக