ஏறுதழுவல் அன்றும் இன்றும்
பழந்தமிழர் வாழ்க்கை காதலையும்
வீரத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இக்கருத்திற்கேற்ப பழந்தமிழகத்தில்
நடைபெற்ற வீர விளையாட்டுகளுள் ஏறுதழுவுதலும் ஒன்றாக அமைந்துள்ளது;
இவ்விளையாட்டை மேற்கொள்ளும் ஆடவரின் வீரத்தையும், காதலையும்
புலப்படுத்துகிறது.
கட்டின்றித் திரியும் வலிய காளையினை ஒரு
வீரன் அடக்கும் செயல் ஏறு தழுவல் என்று கூறப்படுகிறது. வீறுமிக்க காளையினை
வலியடக்கி அதனை அகப்படுத்துதல் என்னும் கருத்தில் இதனை ‘ஏறுகோடல்’
என்றும் குறிப்பிடுகின்றனர். ஏற்றினை அடக்கும் போது அதனால் ஏற்படும்
இடர்களுக்கு அஞ்சாது அதன் மீது பாய்ந்தேறி அடக்குவதினால் இச்செயல் அவனது
வீரத்தைப் புலப்படுத்துவதாக அமைவதினால் ‘தழுவல்’ என்னும் சொல்லோடு சேர்த்து
ஏறுதழுவல் என பழந்தமிழர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆனிரை“வேந்துவிடு முனைஞர் வேற்றுப் புலக்களவின்
ஆ தந்து ஓம்பல் மேவற்று ஆகும்” (1)
என்ற நூற்பா, அரசனால் ஏவப்பட்ட போர் மறவர்,
பகையரசர் நாட்டுக்குள் சென்று, பசுக்கூட்டங்களைப் பகைவர் அறியா வண்ணம்
கவர்ந்து கொண்டுவந்து பாதுகாத்தல் வெட்சிதிணை என்று குறிப்பிடுகிறது.
மேலும் ஆ என்பது பசுவைக் குறிப்பது என்பதை,
“ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர்காவலன் காவா னெரின்” (2)
என்ற குறளில் பசுக்கள் கன்றீனாமை எனக்
குறிப்பிட்டுள்ளதன் வழியும், பசுக்கள் வெவ்வேறு உருக்களைப்
பெற்றிருந்தாலும், அப்பசுக்கள் கொடுத்த பால் வேறுபட்ட உருவமுள்ளவை ஆகா என்ற
கருத்தமைந்த,
“ஆவே றுருவின வாயினு மாபயந்தபால்வே றுருவின வல்லவாம்……” (3)
என்ற நாலடியார் பாடலாலும் அறியமுடிகிறது. மேலும் பெற்றம், எருமை, மரை என இம்மூன்றும் பெண்பாற் பெயர்கள் என்பதனை,
“பெற்றமும் எருமையும் மரையும் ஆவே” (4)
என்னும் நூற்பாவால் அறியலாம். இதனால் ஆனிரை என்பது பசுவை மட்டும் குறிப்பன என்பது தெளிவாகிறது.
எருது
எருது என்பது
விலங்கின ஆண்பெயர் ஆகும், எருதினைக் காளை என்றும் அழைக்கின்றனர். உழவுத்
தொழிலுக்கு பெரும்பான்மை காளைகளையே பயன்படுத்தியுள்ளனர். நாட்டு
நலத்துக்கும் வளத்துக்கும் மிக அடிப்படையான உழவுத் தொழிலுக்கும் பன்னிறக்
காளைகள் பயன்பட்டுள்ளன என்பதை,
“பல நிற மணிகோத் தென்னப் பன்னிற ஏறு பூட்டிஅலமுக இரும்பு தேய ஆள்வினைக் கருங்கால் மள்ளர்” (5)
என்று திருவிளையாடற் புராணம் திருநாட்டுச் சிறப்பில் குறிப்பிட்டள்ளதை எடுத்துக்காட்டுகின்றார் செ. வைத்தியலிங்கனார்.
எருதின் நிறத்தைக் கொண்டு அதனை கரிய எருது, வெள்ளை எருது, சிவந்த எருது, கபிலநிற எருது, புகர்நிறுத்து எருது என அழைத்தனர் என்பதை,“மணிவரை மருங்கின் அருவிபோல
அணிவரம்பு அறுத்த வெண்காற் காரியும்
மீன் பூத்து அவிர்வரும் அந்திவான் விசும்புபோல்
கொலைவன் சூடிய குழவித்திங்கள் போல்
வளையுபு மலிந்த கோடு அணிசேயும்
பொருமுரண் முன்பின் புகல் ஏறுபல பெய்து” (6)
என்ற முல்லைக்கலிப் பாடலால் அறியலாம்.
ஏறுதழுவல்
எட்டுத் தொகை நூல்களுல் கலித்தொகையிலுள்ள
முல்லைக்கலியில் மட்டுமே ஏறு தழுவல் தொடர்பான குறிப்புகள் கூறப்பட்டுள்ளன.
ஆனிரை காத்தோம்பும் வாழ்வினராகிய முல்லை நிலத்து வாழும் ஆயர் மரபில் வந்த
இளைஞர்கள் இந்த ஏறு தழுவலில் ஈடுபட்டனர். இவ் ஏறுதழுவும் நிகழ்ச்சி
முல்லைநில இளைஞனின் வீர வெளிப்பாட்டிற்கும், காதற் புலப்பாட்டிற்கும்
காரணமாக அமைந்துள்ளது. மேலும் அந்நில மக்களின் வாழ்வையும் வீரவுணர்வையும்
விளங்கிக் கொள்வதற்குச் சான்றாகவும் அமைகின்றது.
பிற்கால இலக்கணநூல்கள் முல்லை நில
மக்களின் தொழில்களுள் ஒன்றாக ஏறுதழுவலைக் குறிப்பிட்டுள்ளன. முல்லை நிலக்
கருப்பொருள் கூறுங்கால் அந்நிலத்தொழிலாக கொல்லேறு கோடலையும் அதற்குரிய
பறையாக ஏறுகோட்பறையினையும் இலக்கணநூல்கள் குறிப்பிட்டுள்ளன.
முல்லை நில ஆயர் மக்கள் தம் குடிப்பெண்
பருவம் எய்தியதும் தம்மிடமுள்ள ஒரு காளைக் கன்றினை அவள் பொருட்டு ஊட்டம்
மிகக் கொடுத்து வளர்ப்பர் என்றும், அது காளைப்பருவம் எய்திய நிலையில் அதனை
அடக்கும் வீரனுக்கே அப்பெண்ணை மணஞ்செய்விப்பர் என்றும் கூறப்படுகிறது. இதனை
சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவை கூத்தின் கொளுப்பாடலில்,
“காரி கதனஞ்சான் பாய்ந்தானைக் காமுறுமிவ்வேரி மலர்க் கோதை யாள்”
எனவும்,
“நெற்றிச் செகிலை யடர்த்தாற் குரியவிப்
பொற்றொடி மாதராள் தோள்” (7)
எனவும், பல நிறக் காளைகளைச் சுட்டிக்காட்டி அதனை அடக்குபவர்களையே பெண்கள் விரும்புவர் என்பது தெளிவாகிறது.
முரசறைந்து தெரிவித்தல்
ஏறு தழுவல் ஓர் ஊர்விழாபோல்
நடைபெறுகிறது. ஏறு தழுவலைத் தொடங்குமுன் பறைகளை அடித்து முழங்கிப் பேரொலி
எழுப்புகின்றனர். பறையறைந்தும் இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தனர்.
மாட்சிமைப்பட்ட இழையினையுடையாள் வழியாக நிகழ்த்தும் இவ் ஏறுவிடுகின்ற
விழாவைப் பரக்கச் செலுத்தி இவனேயன்றி மற்றும் ஏறு தழுவார் உளராயினும் வருக
வென்று பறைபறைக என்பதை,
“…….பாணியே மென்றா ரறைகென்றார் பாரித்தார்மாணிழை யாறாகச் சாறு” (8)
என்னும் பாடல் அடிகளால் அறியலாம். ஏறுதழுவலால் நிகழக்கூடிய துன்பங்களுக்கு அஞ்சிப் பின்வாங்கும் இளைஞனைக் காதலித்தவளும் ஏற்க மறுப்பாள் என்பதனை,
“கொல்லேற்றுக் கோடஞ்சுவானை
மறுமையும் புல்லாளே ஆயமகள்” (9)
என வரும் இலக்கியப்பகுதி உணர்த்துகிறது.
இதனால் ஆயர்குலப் பெண்ணின் காதலும் வீரப்பண்பினைப் பின்னணியாகக் கொண்டு
விளங்குதனை உணர்தல் கூடும்.
மாட்டுத் தொழுவம்
காரி, வெள்ளை முதலிய பல நிறங்களில் அமைந்த ஏறுகள் கொம்புசீவப் பெற்று ஏறு தழுவற் களமாகிய தொழுவினுள் செலுத்தப் படுகின்றன என்பதை,
“சீறு அரு முன்பினோன் கணிச்சிபோல் கோடு சீஇஏறு தொழூஉப் புகுந்தர்” (10)
சீவுதற்கரிய வலியினையுடைய இறைவனுடைய
குந்தாலிப் படைப் போல கூறியதாகக் கொம்புகளைச் சீவி, ஏறுகளைச் சேர
தொழுவிடத்தே புகுத்தினர் என்பதையும்,
“வானுற ஓங்கிய வயங்கு ஒளிர் பனைக் கொடிப்பால் நிற வண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும்
பொருமுரன் மேம்பட்ட பொலம் புனை காரியும்
மிக்கு ஒளிர் தாழ்சடை மேவரும் பிறைநுதல்
முக்கணான் உருவே போல் முரண் முகு குராலும்
மாகடல் கலக்குற மாகொன்ற மடங்காப் போர்
வேல்வலான் நிறனே போல் வெருவந்த சேயும்” (11)
என வலிய ஏறுகள் பலவற்றையும் தொழுவினுள் புகவிட்டனர். அவை பல்வண்ண மேகங்கள் ஒருங்கு திரண்டன போல் காட்சித் தருகிறது எனக்குறிப்பிடப்படுகிறது.
காளையினை அடக்குதல்
வீரர்கள் ஏறுகளை அடக்க முற்படுகின்றனர்.
சில காளைகள் தம்மைத் தழுவ முற்படும் வீரர்களைத் தம் கோட்டால் குத்திக்
குடர்சொரியச் செய்துவிடுவதுமுண்டு. எருதின் சினத்தைப் பொருட்படுத்தாது
பாய்ந்த பொதுவனை அவ் எருது சாடி, கொம்பின் நுனியால் குத்திக் குலைப்பதனை,
“மேற்பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன்குருக்கன்நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக்குத்தி
கோட்டிடைக் கொண்டு குலைப்பதன் தோற்றம் காண்”(12)
என்று அத்தகைய காட்சியினைத் தோழி தலைவிக்குக் காட்டுகிறாள். காளைகளுக்கும் வீரர்களுக்கும் நடந்த ஏறு தழுவல் முடிவுற்ற களக் காட்சி
“எழுந்தது துகள் ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்புஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்பு கலங்கினர் பலர்” (13)
என்று அழகுற வருணிக்கப்பட்டுள்ளது.
தலைவியால் காதலிக்கப் பெற்ற வீரன் தங்கள் காளைகளை அடக்க முற்படும் வீரச்
செயலைத் தனி இடங்களிலிருந்து தலைவியர், தோழியருடன் கண்டுமகிழ்கின்றனர்.
ஏறுதழுவல் முடிந்த பின்னர்ப் பெண்களும் ஆண்களும் குரவைக் கூத்தாடுகின்றனர்.
ஏறுதழுவி வென்றவன்
ஏறு தழுவிய வீரனை மணந்த ஓர் ஆயமகள் நெய்
மோர் முதலிய பாற்படு பொருள்களை விற்றுவரச் செல்லுங்கால் இவள் கணவன் ஏறு
தழுவி வென்றவன் என்று மற்றவர்கள் பேசும் சொற்களைக் கேட்டு மகிழ்ந்து,
அப்புகழுரையினைத் தாம் பெறும் சிறந்த செல்வமெனப் போற்றுகிறாள் .
கழுவொடு சுடுபடை சுருக்கிய தோற்கண்
ணிமிழிசை மண்டை யுறியொடு தூக்கி
ணிமிழிசை மண்டை யுறியொடு தூக்கி
எனத் தொடங்கும் கலித்தொகைப்பாடல்(106)வழி ஏறுதழுவலைப் பண்டைத் தமிழ்ச்
சமுதாயத்தின் ஒரு பகுதியினர் வீரத்தையும் காதலையும் ஒருங்கே பேணி அவற்றைத்
தம் வாழ்க்கையின் அடிப்படை நிலைக் களமாக கொண்டிருந்தமை புலப்படுகிறது.
சல்லிக்கட்டு
இன்றைய நாட்களில் ஏறுதழுவல் என்பது,
பொங்கல் திருநாளை அடுத்து மாட்டுப் பொங்கல் கொண்டாடியபின்னர்ப் பொதுவாக
பரிசுப் பொருள்கள் கட்டி ஊர்ப் பொதுவிடங்களில் இளைஞர் பிடிக்குமாறு விடும்
ஒரு விழாவாக நடைபெறுகிறது. ஏறு தழுவல் இக்காலத்தில் மஞ்சிவிரட்டு,
சல்லிக்கட்டு என்னும் பெயர்களில் வழங்கிவருகிறது.
தமிழர்களின் வீர விளையாட்டுகளில்
சல்லிக்கட்டு மிகவும் புகழ்பெற்றது. பொங்கல் பண்டிகையையொட்டி மதுரைப்
பகுதில் சல்லிக்கட்டு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடத்தப்பட்டுவருகிறது. இதில்
அலங்காநல்லூர் பாலமேடு சல்லிக்கட்டு உலகப்புகழ்பெற்றதாகும். மதுரை அருகே
அவனியாபுரத்தில்தான் முதலில் அதாவது பொங்கல் அன்றே சல்லிக்கட்டு
நடத்தப்படுகிறது. மேலும் திருச்சி மாவட்டம் கூத்தைப்பான், தஞ்சை மாவட்டம்
மாதாக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் தத்தன்குரிசி, போன்ற ஊர்களில்
நீதிமன்ற இசைவுடன் சல்லிக்கட்டு நடைபெற்றுவருகிறது. கடந்த சில ஆண்டுகளாகத்
தடைகளைக் கடந்துதான் சல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.
சல்லிக்கட்டு நடைபெறும் நாளினை
ஒலிபெருக்கியின் மூலமும் சுவரொட்டிகள் மூலமும் விளம்பரம் செய்கின்றனர்.
பெரும் விழாவாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த
இளைஞர்கள் போட்டியாளராகக் கலந்து கொள்கின்றனர். சல்லிக்கட்டிற்கென்றே
மிகவும் நேர்த்தியாக வளர்த்த காளைகள் சரந்தாங்கி, பாலமேடு, அவனியாபுரம்,
சத்திரப்பட்டி, திருப்பரங்குன்றம், கீழ்ச் சின்னனம்பட்டி, ஓடைப்பட்டி,
திண்டுக்கல், மேலூர், திருச்சி, கோட்டுர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்
இருந்து வரவழைக்கப்படுகின்றன.
சல்லிக்கட்டு தொடங்கியதும் முதலில்
கோவிலுக்குச் சொந்தமான காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. மரியாதை
நிமித்தமாக அந்தக் காளைகளை யாரும் பிடிப்பதில்லை. அதற்குப் பின்பு
ஒன்றன்பின் ஒன்றாகக் காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன சீறிப்பாய்ந்துவரும்
காளைகளை இளைஞர்கள் அடக்க முயல்கின்றனர். அவ்வேளையில்
காயமடைகின்றவர்களுக்கு அங்கிருக்கும் மருத்துவக் குழுவினர் முதலுதவி செய்து
மருத்துவஊர்திகள் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கதாகும்.
சல்லிக்கட்டு நடத்தும் விழாக் குழுவினர்
விலைவுயர்ந்த பரிசுப் பொருட்களை அறிவிப்பர். காளையினை அடக்குபவர்கள்
அப்பரிசுப் பொருட்களைப் பெற்றுக்கொள்வர். மாடுகளைப் பிடித்த வீரர்களுக்கு
உடனுக்குடன் தங்கக்காசு, பொறிஉரல், குத்துவிளக்கு போன்ற பல்வேறு
பரிசுகளும், பணமும் பரிசாக வழங்கப்படுகின்றன. பிடிபடாத காளைகளின்
உரிமையாளருக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. நிகழ்ச்சியைக் காண்பதற்கும்
ஆயிரக்கணக்கானோர் திரளாக வந்து கண்டு களிக்கின்றனர். சல்லிக்கட்டினைக்
காண்பதற்கென்றே வெளிநாட்டவரும் வருகைபுரிகின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கதாகும்.
மனித உயிருடன் ஒப்பிடும் போது
பரிசுப்பொருள் என்பது மிகமிக எளிமையானதாக இருப்பினும் சல்லிக்கட்டில்
கலந்து கொள்வதையும் அதில் வென்று பரிசுகள் பெறுவதையும் பெருமையாகவும்
ஆண்மையாகவும் கருதுகின்றனர். இத்தன்மையைத் தமிழனின் வீரமரபு தொடர்ச்சியாகக்
கருதலாம். ஆனால், இத்தகைய சல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் பண்டைய ஏறு தழுவுஞ்
செயலில் இடம் பெற்றிருந்த காதல் நிறைவேற்றக் குறிப்பு போல் எதுவுமில்லை
என்பது நோக்கத்தக்கதாகும்.
காளைச்சண்டை
ஏறு தழுவலை ஒத்த நிகழ்ச்சிகள் காளைச்
சண்டை (Bull Fighting) என்னும் பெயரில் இக்காலத்தில் இசுபெயின் போன்ற பிற
நாடுகளில் இன்றும் பெரிய அளவில் விழாவாகவும் தொழில் முறையாகவும் நடைபெற்று
வருகின்றன. அந்நாடுகளில் நடைபெரும் செயல்கள் தமிழகத்தில் பழங்காலத்தில்
நடைபெற்ற ஏறுதழுவலைப் போலக் காணப்பட்டாலும் இரண்டிற்கும் அடிப்படையான
வேறுபாடுள்ளது. இரண்டிடங்களிலும் காளைகளால் வீரர்கள் தாக்குண்பதும், உயிர்
துறத்தலும் நிகழ்தல் கூடும். ஆனால் மேலைநாட்டு நிகழ்ச்சியில் வென்ற வீரன்
தன் வெற்றிக் குறியாக வென்ற ஏற்றினைக் கொன்றுவிடுவது மரபு ஆகும்.
தமிழக்கத்து ஏறுதழுவலில் அன்றும் இன்றும் வென்ற வீரன் அடக்கிய ஏற்றினைக்
கொல்லுவதென்பது இல்லை என்பது சிறப்புடையதாகும்.
தொகுப்புரை- இன்றைக்கும் சல்லிக்கட்டு என்னும் பெயரில் காளைகளை அடக்கும் நிகழ்ச்சிகள் மதுரை, திருச்சி போன்ற இடங்களில் பெரும் சிறப்பாக நடைபெற்றுவருவதை அறியமுடிகிறது.
- பண்டைக்காலத்தில் முல்லைநில ஆயர் மக்களிடையே நிகழ்ந்த இந்த ஏறு தழுவல் என்னும் நிகழ்ச்சி, காலப்போக்கில் முல்லை நில மக்களுக்கு மட்டிலும் உரியது என்னும் நிலைமாறிப் பொதுவாக மருதம் நெய்தல் போன்ற பகுதிகளில் ஆனிரைத் தொடர்பு கொண்டு வாழும் மக்கள் அனைவரும் மேற்கொள்ளும் ஒன்றாக மாறியுள்ளதை காணமுடிகிறது.
- அன்றைய வீரர்கள் நிகழ்த்திய ஏறுதழுவலும், இன்றைக்கு நடைபெறும் சல்லிக்கட்டு என்னும் நிகழ்ச்சியும், சப்பான் போன்ற நாடுகளில் நடைபெறும் காளைச்சணடையுடன் ஒப்பிட்டு நோக்கும் போது, ‘ஏறுதழுவல்’ அந்நாடுகளில் கொலை அடிப்படையிலும் தமிழ்நாட்டில் கொல்லாமை அடிப்படையிலும் நடப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- காளையினை அடக்குவோர் யாரேனும் அப்பெண்ணினை அடையலாம் என்பது உண்மையாயினும், கிடைத்துள்ள பழைய இலக்கியக் குறிப்புகளை நோக்குங்கால், காளையை அடக்க முற்படுபவனுக்கும் அக்காளைக் குரியவளாகிய பெண்ணிற்கும் காதற் குறிப்பு இருந்துள்ளமை புலப்படுகிறது.
- தலைவியால் காதலிக்கப்பெற்ற வீரன் ஏறுதழுவி வெற்றி கொண்டதனைக் கண்ட பெற்றோர் அவனுக்கு மகட்கொடை நேர்ந்த செய்தியினை அறியமுடிகிறது.
சான்றெண் விளக்கம்
- தொல்காப்பியம் நூற்பா. 1006
- திருக்குறள் குறள். 560
- நாலடியார் பா, 118: 1-2.
- தொல்காப்பியம் – பொருளதிகாரம், நூற்பா. 615
- தமிழ்ப்பண்பாட்டு வரலாறு ப. 538
- கலித்தொகை – முல்லைக்கலி பா. 103: 11 – 17.
- சிலப்பதிகாரம் – ஆய்ச்சியர் குரவை, கொளு பா. 1-2
- கலித்தொகை – முல்லைக்கலி பா. 102: 13 – 14.
- மேலது, பா. 103: 63– 64.
- மேலது, பா. 101 : 8 – 9
- மேலது, பா. 104: 7 – 14
- மேலது, பா. 101: 15 – 17
- மேலது, பா. 103:
முனைவர் சுப.வேல்முருகன்
http://www.chemmozhi.net/2013/01/blog-post_9477.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக