சிறு வணிகர்களுக்கான பத்து நாட்கள் கடன் உதவி முகாம்
தமிழக முதல்வர் செயலலிதா
22.1.2016 அன்று தலைமைச் செயலகத்தில்,
பெருமழை வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கான ‘அம்மா சிறு வணிகக் கடன்’ உதவித்
திட்டத்தினைத் தொடக்கி வைத்தார். இதை அடுத்து சிறு
வணிகர்களுக்கு வட்டியில்லாக் கடன் உதவி வழங்கும் சிறப்பு முகாம் பத்து நாட்களுக்கு
நடைபெற உள்ளது.
மிகச் சிறிய முதலீட்டில்
அன்றாடம் பூக்கள், பழங்கள்,
காய்கறிகள் போன்ற பொருட்களை
வாங்கி விற்பனை
செய்து வரும் தெருவோரச் சிறு வணிகர்கள், பெட்டிக் கடை நடத்துவோர் போன்றோர் பெருமழை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முதலீட்டை இழந்துள்ளனர். அவர்கள் தங்களின்
வாழ்வுக்காகத் தனியாரிடம் மிகுதியான வட்டியில் கடன் பெறும் நிலையைத் தவிர்க்கவும்,
ஏழை, எளிய வணிகர்கள் தங்கள் வாழ்வை மீண்டும் பெற வகை செய்யவும்
ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், இத்திட்டத்தின் வாயிலாக, கூட்டுறவு வங்கிகள் மூலம் 5000 உரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும் எனவும்,
கூட்டுறவு
வங்கிகளுக்கு வட்டியாக 11 விழுக்காட்டைத்
தமிழ்நாடு அரசு வழங்கும் எனவும்,
இந்தக் கடனை 25
கிழமைகளில் (வாரங்களில்)
கிழமைதோறும் 200 உரூபாய் என்கிற அடிப்படையில் திருப்பிச்
செலுத்த வேண்டும் எனவும், குறித்த காலத்தில் கடனைத்
திரும்பச் செலுத்துபவர்களுக்கு மீண்டும் அதே அளவுக் கடன் தொகை குறைந்த வட்டியான 4
விழுக்காட்டில் வழங்கப்படும் எனவும்,
சிறு வணிகர்களுக்குக்
கடன் வழங்குவதற்கெனப்
பயனாளிகளைத் தேர்வு செய்யக் கூட்டுறவு வங்கிகள் சிறப்பு முகாம்களை 10 நாட்கள் நடத்தும் எனவும், முதல்வர் செயலலிதா 14.1.2016 அன்று அறிவித்தார்.
அதன்படி, பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கான
‘அம்மா சிறு வணிகக் கடன்’ உதவித் திட்டத்தினைத் தொடக்கி வைக்கும் அடையாளமாக
5 பயனாளிகளுக்கு 5000 உரூபாய் வீதம் கடனுதவி ஆணையினை முதல்வர் செயலலிதா 22.01.2016 அன்று
வழங்கி இத்திட்டத்தினைத் தொடக்கி வைத்து, வெற்றிகரமாகத் தொழில் நடத்தி வளம் பெற
வேண்டுமென்று வாழ்த்தினார்.
இத்திட்டத்தின் கீழ்,
பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தூத்துக்குடி, பிற மாவட்டங்களைச் சேர்ந்த பூ, பழம், காய்கறி, உணவுப் பொருட்கள் போன்றவற்றை விற்கும் தெருவோரச் சிறு வணிகர்கள்,
தள்ளுவண்டி வணிகர்கள்,
பெட்டிக்கடை
நடத்துபவர்கள் போன்றோர் எளிதில் கடன் பெறும் வகையில், மாவட்ட நடுவண் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு வங்கிகள் மூலம் அவர்கள் தொழில் செய்யும் இடங்களுக்கு அருகிலேயே 500
சிறப்பு முகாம்கள்
நடத்தப்படும்.
22.1.2016 முதல் 2.2.2016
வரை (26.1.2016
- குடியரசுத் திருநாள்,
31.1.2016 –ஞாயிற்றுக்கிழமை
தவிர) 10 நாட்கள் சிறப்பு முகாம்கள்
நடத்தப்பட்டு, அந்தந்த
இடத்திலேயே விண்ணப்பங்களும்
விவரங்களும் பெறப்படும்.
-செய்தி, படம்: நன்றி
தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக