இந்திய வரலாற்றில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது – கே.கே.பிள்ளை
தமிழ்ச் சமுதாயம் மிகவும் பழமையான
ஒன்றாகும். பண்டைய எகிப்து, பாபிலோனியா, கிரீசு, உரோம் ஆகிய நாடுகள்
நாகரீகத்தில் மிகவும் சிறந்து விளங்கிய பண்டைக்காலத்திலேயே தமக்கென ஒரு
நாகரிகத்தையும் சிறந்த பண்பாட்டையும் வளர்த்து வாழ்ந்து வந்தவர்கள்
தமிழர்கள். இந்திய நாட்டு வரலாற்றில் இதுவரையில் தமிழகத்துக்குச்
சிறப்பிடம் அளிக்கப்படவில்லை. தமிழ்நாடு என்று ஒரு நாடு இருப்பதாகவே
வரலாற்று ஆசிரியர்கள் கருதியதில்லை. சென்ற நூற்றாண்டில்
ஆர்.(ஞ்)சி.பந்தர்க்கார் என்பார் இந்திய வரலாறு ஒன்று எழுதி வெளியிட்டார்.
அதில் அவர் தமிழ்நாட்டைப் பற்றியே குறிப்பிடவில்லை.
இக்குறைப்பாட்டை வின்செண்டு சுமித் போன்ற
வரலாற்று ஆசிரியர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். இந்திய வரலாற்று
நூல்களில் தமிழ்நாட்டைப் பற்றிய செய்திகளைக் கூறாமல் புறக்கணித்து
வந்ததற்குச் சில காரணங்கள் கூறப்பட்டன. வட இந்தியாவைப் பற்றிய வரலாற்றுக்
குறிப்புகள் கி.மு.ஏழாம் நூற்றாண்டிலிருந்தே கிடைத்திருக்கின்றனவென்றும்,
அதைப்போலத் தென்னிந்தியாவைப் பற்றிய சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லையாதலால்
பொருத்தமான தென்னிந்திய வரலாறு ஒன்று எழுதுவதில் பல இன்னல்கள்
உள்ளனவென்றும் வரலாற்றாசிரியர்கள் கூறிவந்தனர்.
இவர்கள் காட்டும் காரணம் உண்மைக்குப்
புறம்பானதாகும். ஒரு நாட்டில் வரலாற்றை எழுதுவதற்கு அந்நாட்டில் எழுந்துள்ள
இலக்கியப் படைப்புகள், கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள், புதைபொருள்கள்,
பழங்காலக் கட்டடச் சிதைவுகள், சிற்பச்சின்னங்கள், சமயக் கோட்பாடுகள் ஆகியவை
சான்றுகளாக உதவி வந்துள்ளன. இச்சான்றுகள் அத்தனையும் தமிழகத்திலும்
பெருமளவு கிடைத்துள்ளன. இவற்றைக் கொண்டே தமிழ்நாட்டின் வரலாற்றைத்
தொடர்ச்சியாகவும் விளக்கமாகவும் எழுதக் கூடும். சென்ற ஐம்பது ஆண்டுகளில்
இச்சான்றுகளைக் கொண்டு எழுதப்பட்ட தமிழக வரலாறுகள் சில வெளிவந்துள்ளன.
இந்தியாவிலேயே மிகப் பெருந்தொகையில் கல்வெட்டுகள் கிடைப்பது தமிழ்நாட்டில்தான்.
தமிழ்நாட்டில் இதுவரை வெளியாகியுள்ள கல்வெட்டுச் செய்திகளைக் கொண்டும்,
பண்டைய கிரிசு, உரோம், எகிப்து, சீனம் ஆகிய நாட்டு வரலாற்று இலக்கியங்களில்
தமிழரைப்பற்றிக் கிடைக்கும் சில குறிப்புகளைக் கொண்டும் தமிழக வரலாற்று
ஆசிரியர்கள் விளக்கமான வரலாறுகளை இப்போது எழுதி வருகின்றனர். தமிழகத்தில்
கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் இதுவரை வெளியிடப்பட்டவை சிலவே. இன்னும்
பல்லாயிரம் கல்வெட்டுகள் வெளிவராமல் கல்வெட்டுச் சாசன ஆய்வகத்திலேயே
முடங்கிக் கிடக்கின்றன. அவையும் பதிப்பில் வருமாயின் தமிழ் மக்களின் வரலாறு
மிகவும் விரிவாக எழுதப்படலாம் என்பதற்கு ஐயம் ஏதுமில்லை.
அறிஞர் கோ.கனகசபாபதி (கே.கே.பிள்ளை):
தமிழக வரலாறு -மக்களும் பண்பாடும்: பக்கம்: 12-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக