தமிழர்களுக்குச் சிறந்த வானநூற் புலமை
இருந்தது. அதனால் கணியம் என்னும் சோதிடக் கலையிலும் அவர்கள் வல்லவர்களாகத்
திகழ்ந்தனர். இன்று திருமணம் முதல் நீத்தார் கடன் ஈறாகத் தமிழர்தம்
சடங்குகள் பலவும் தொன்றுதொட்டு இங்கு நடைபெற்று வந்தனவேயாம். எதையும்
‘சமசுகிருதமயமாக்கல்’ எனும் ஒரு சூழல், ஒரு பேரியக்கமாகவே சில
நூற்றாண்டுகள் நடைபெற்றுள. இன்றைய ஆங்கில மோகம் போலச் சமசுகிருத
மயமாக்குதலில், தமிழர்களே பேரார்வம் காட்டித் தங்கள் பண்பாட்டை
அடையாளத்தைத் தாங்களே அழித்துக் கொண்டனர். தங்கள் சிற்பக் கலையை வடமொழியில்
எழுதிவைத்து, அவை தமிழர்க்குக் கடன்பெற்றுக் கிடைத்தவை என்பதுபோல ஒரு
தோற்றத்தை உண்டாக்கினர். தமிழகத்திற்போன்ற சிற்பக்கலையை வேறு எங்கும்
காணமுடியாது. கருநாடக இசையை அதன் முழுக்களையொடு வெளிப்படுத்த வல்ல
பெருவங்கியமும் மத்தளமும் போன்ற கருவிகளையோ, இசை நுணுக்கத்தையோ வேறு
எங்கும் காண்டல் அரிது. தமிழகத்திற் பொலிவுடன் திகழும் நாட்டியக்கலை இங்கு
தோன்றிச் சிறந்து வளர்ந்திருந்தமையைச் சிலப்பதிகாரம் காட்டும். இவை
அனைத்தும் இவை தோன்றி வளர்ந்து, செழிப்புற்ற இடத்திற்கு உரியனவேயன்றி, இவை
எழுதி வைக்கப்பட்ட மொழிக்கு எவ்வாறு உரியனவாகும்? அஃதுண்மையெனில், ‘வடமொழி’
என்று அன்றே குறிக்கப்பட்ட வட நாட்டிலல்லவா இவை இன்று சிறப்புற்றுக்
காணப்படவேண்டும்.
-முனைவர் தமிழண்ணல்:
(பேராசிரியர் வே.அண்ணாமலையின்)
சங்க இலக்கியத் தொன்மக்களஞ்சியம்: பக்கம்.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக