‘அதர்வண வேதம்’ ஒரு வேதமாக ஒப்புக்
கொள்ளப்பட்டு, நான்கு வேதங்கள் என்ற எண்ணிக்கை கொண்டது மிக மிகப் பிற்பட்ட
காலத்தில்தான் என்று வரலாற்றாசிரியர் தத்தர் கூறுகின்றார். (R.C.Dutt, Early Hindus clivilization Page 116) ஆதலின் மிக
முற்பட்ட நூலான தொல்காப்பியப் பாயிரத்தில் நான்மறை என்று சுட்டப்பட்டது
ஆரிய நான்கு வேதங்களாக இருத்தல் இயலாது. அன்றியும் தென்னாட்டுத் தமிழர்
ஒருவர் வடநாட்டு ஆரிய மொழியில் உள்ள நான்கு வேதங்களையும் முற்றக் கற்றல்
அவ்வளவு எளிதன்று. ஆரிய மொழியில் நல்ல பயிற்சியும் புலமையும் உடைய ஆரியரே,
வேதம் ஒன்றினை முழுவதும் கற்று முற்றுப்பெற்ற புலமையுடையராதல் எளிதன்று.
அங்ஙனமாகவும், ஆரிய மறைகளைக் கற்பதற்கு உரிமையற்றிருந்த தமிழர் கூட்டத்தைச்
சேர்ந்த ஆசிரியர் ஒருவர் ஆரிய நான்மறைகளை முற்றக்கற்றார் என்று கூறுதல்
முற்றும் பொருந்தாது. ஆதலின் நான் மறை என்பது தமிழ் நான்மறையாகத்தான்
இருத்தல் கூடும் என்பதில் எட்டுணையும் ஐயமின்று. ஆதலின் ஆரிய மறைகள்
நான்காக வகுக்கப்பட்ட பின்னரே தொல்காப்பியர் வாழத்திருத்தல் வேண்டும் எனக்
கருதி அவர் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்று முடிவு
கட்டுதல் தவறுடைத்தாகும்.
– செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
– தொல்காப்பிய ஆராய்ச்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக