வியாழன், 2 ஜூலை, 2015

கோதில்லாக் குறிக்கோளும் குலசேகர ஆழ்வாரும் – சொ.வினைதீர்த்தான்


kulasekaraAAzhvaar01

  குலசேகர ஆழ்வாரின் அருமையான உவமைகள் வழியாக குறிக்கோள், குறிக்கோளின்மீதுள்ள தீராப்பற்று, அதனை அடைதல் ஆகியவை குறித்து எண்ணிப்பார்ப்பது இந்தப்பதிவு.
எந்தவொரு காதல் பாடலையும் அல்லது தெய்வபக்திப் பாடலையும் வெற்றி அல்லது குறிக்கோளுடன் ஒப்பிட்டுப்பார்க்கலாம். காதல் என்பதும் பக்தி என்பதும் ஒன்றின் மீதுள்ள ஏக்கமும் அடையவேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பமுமே அல்லவா? முருகனின் பக்கலிலுள்ள வள்ளியும் தெய்வானையும் குறிப்பது சிற்றாடை கட்டிய பாவையரையல்ல என்பார்கள். ஞானசக்தியாகிய முருகனை(Goal) அடைய இச்சாசக்தியாகிய (Passion) ஆழ்ந்தவிருப்பமும் கிரியாசக்தியாகிய(Action) செயலும் உடனிருக்கவேண்டுமென்பார்கள். வெற்றிக்கு அடிப்படை அதைப்பற்றிய சிந்தனை; அதற்கேற்ற உழைப்பு
எல்லா சமயங்களும் தங்கள் இறைவன்மீது தீராத விசுவாசம்கொள்ளும்படி கூறுகின்றன. அவ்விறைவனல்லாது வேறு கதியில்லை என்று ஆழ்ந்தபற்றுவைக்கும்படி வலியுறுத்துகின்றன. ஒருவன் தன்னுடைய குறிக்கோள் இதுவென ஒன்றையெண்ணித்தேர்ந்தால் அதன்மீது உச்சபட்ச நம்பிக்கைகொள்ளவேண்டும்.
குலசேகர ஆழ்வார் அரிய உவமைகள் வழியாக அசைக்கமுடியாத வகையில் திருமாலையடைவதையும் அவனையே பற்றிக்கொள்வதையும் எந்த நிலையிலும் வேறுகதியில்லையென்று விட்டுவிடாதலையும் தன்னுடைய பாசுரங்கள் மூலம் எடுத்துரைக்கிறார்.
எளிய உவமை. ஆனால் வலிய அறிவுறுத்தல்! கதிரவன் எவ்வளவுதான் தீயைப்போல எரித்தாலும் தாமரை மலர் கதிரோனுக்கே மலரும்! சந்திரனுக்கு மலராது. திருமாலுக்கன்றி வேறெதெற்கும் என் உள்ளம் குழையாது என்கிறார் ஆழ்வார். கொண்ட குறிக்கோள் எவ்வளவுதான் கடினமானதாகவும் துயரம் தருவதாகவும் இருந்தாலும் அதனையடைதலன்றி மனதிற்கு வேறெதுவும் ஒப்பாகாது என்பதனை நாம் இப்பாசுரம் மூலம் அறியலாம்.
“செந்தழலே வந்து அழலைச் செய்திடினும் செங்கமலம்
அந்தரம்சேர் வெம்கதிரோற்கு அல்லால் அலராவால்
வெம்துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டு அம்மா! உன்
அந்தம் இல்சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே!”

  பெற்றதாய் விலக்கினாலும் குழந்தை விலகிவிடுவதில்லை என்பதனை “அரிசினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள்தன் அருள் நினைந்தே அழும் குழவி அதுவேபோன்று இருந்தேனேஎன்று வித்துவக்கோடு என்னும் திருத்தலப்பெருமானிடம் உரைக்கிறார் குலசேகர ஆழ்வார். மேலும் “கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல் என்ற அற்புத உவமை காட்டுகிறார். கொண்டவன் வேறுபட்டாலும் குலமகள் அவனையன்றி வேறொருவனை நினைப்பதில்லை. அதுபோல குறிக்கோளடைய எவ்வளவு தடைவந்தாலும் அக்குறிக்கோளன்றி வேறொன்றிற்குத் தாவியவர் என்றும் வெற்றி கண்டதில்லை.
அடையும் வழி பெருந்துயர் தந்தாலும் குறிக்கோளை அடைதல் உவக்கும் என்பதனையே மிகச்சிறந்த உவமையைக்கொண்டு பின்வரும் பாடலிலும் குலசேகரப்பெருமான் உணர்த்துகிறார்.
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவர் பால்
மாளாத் காதல் நோயாளன்போல், மாயத்தால்
மீளாத் துயர்தரினும் வித்துவக்கோட்டு அம்மாநீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே.
குறிக்கோளை அடைவது மிகக்கடினம் தான்! வழியில் பல இடையூறுகள், தடைகள், சிக்கல்கள் எழலாம். அவையனைத்தும் தன்னைத் தகுதியாக்கிக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பு; தன்னிடமுள்ள குறையை நீக்கிக்கொண்டு புடம்போட்ட மாசற்ற தங்கமென மிளிர வாய்த்த சந்தர்ப்பமென்று மேலே முயன்றவர்கள் எல்லாம் பெருவெற்றி அடைந்திருக்கிறார்கள்.
  பக்கதர் மனம் பருகும் நீரிலும் உண்ணும் வெற்றிலையிலும் பரந்தாமனையே எண்ணி நிற்கும். அதுபோலக் குறிக்கோளில் பற்றுடையவர்கள் எந்தவொரு வேலையில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மனம் குறிக்கோளையே சுற்றிச்சுற்றி வரும். ஆழ்வார் ஒரு உவமை சுட்டுகிறார். பரந்த கடல் நடுவில் பயணிக்கும் ஒரு பாய்மரக்கப்பல். அக்கப்பலில் ஒரு உயரமான கொம்பு. அக்கொம்பின் மேலே கப்பல் பயணிக்கும் முன்பாக வந்தமர்திருந்தது ஒரு பறவை. இப்போது கப்பலோ நடுக்கடலில். பறவை அங்குமிங்கும் பறந்தாலும் கரைகாணாது அக்கப்பலையே வந்தடைந்தாக வேண்டும். “இணையடியே அடையல் அல்லால் எங்கும்போய்க் கரைகாணாது எறிகடல்வாய் மீண்டேயும் வங்கத்தின்(கப்பலின்) கூம்பேறும் மாப்பறவை  என்று ஆழ்வார் மனம் புகலிடமாகக்கொள்வது கண்ணன் கழலிணையே. வெற்றியாளர் எண்ணமெல்லாம் கொண்ட குறிக்கோளே!
    வேண்டுவார்க்கு வேண்டுவன நல்கும் கற்பகத் தரு ஆழ்வார்களின் அமுத்த தமிழ். மேலான திருமாலியநெறியைக் காட்டித்தருகிற பாடல்கள் தேடினால் இன்றைய மேலாண்மை தத்துவங்களையும் வாரிவழங்குமென்பது உறுதி!
– சொ.வினைதீர்த்தான்
so.vinaitheerththaan02


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக