இறப்பிற்குப் பின்னரும் தொடரும் ஊர் விலக்கக் கொடுமை
தமிழகத்தில் உயிருடன் இருக்கின்றபோது
இடஒதுக்கீடு கேட்டுப்போராட்டம் நடத்தி அதன்மூலம் சாதித் தலைவர்கள்
குளிர்காய்வது வழக்கம். அந்த வாக்கு வங்கியை பயன்படுத்தி அந்தத் தலைவர்கள்
தங்கள் காரியத்தை நிறைவேற்றுவார்கள் என்பது நடைமுறை உண்மை. ஆனால் இறந்த
பின்னர் இடஒதுக்கீடு கேட்டுப்போராட்டம் நடத்தும் ஊர்கள் தமிழகத்தில் பல
உள்ளன.
இந்த இடஒதுக்கீடு சாதி அடிப்படையிலான
இடஒதுக்கீடு கேட்பதுபோல் இல்லை. தங்கள் சொந்த சாதியினரிடையே இடஒதுக்கீடு
கேட்பதுதான் விந்தையிலும் விந்தை. உயிருடன் இருக்கும்போது
கல்வி,வேலைவாய்ப்பு, அரசுப்பணி அதற்காகப் போராட்டம் நடைபெறுவது அன்றாட
நிகழ்வு. ஆனால் இறந்த பின்னர் 6 அடி நிலத்திற்காக நீதிமன்றம்வரை சென்று
மையவாடி, இடுகாடு, சுடுகாடு ஆகியவற்றில் இடஒதுக்கிட்டிற்காகப் பலச்
சிற்றுர் மக்கள் போராடி வருகின்றனர். இதற்குக் காரணம் ஒவ்வோர் ஊரிலும்
சாதியக் கட்டமைப்பு இன்றுவரை இயங்கி வருகிறது. அந்தச் சாதிய அமைப்பின்
தலைவர்களை எதிர்த்துக் கேள்வி கேட்டால் அவர்களை ஊரைவிட்டு
ஒதுக்கிவிடுவார்கள். இதுவும் ஒரு தீண்டாமையே.
இவ்வாறு ஊர்விலக்கம் அல்லது ஊர்நீக்கம்
செய்யப்பட்டவர்கள் திருமணம், இறப்பு போன்ற நிகழ்ச்சிகளில்
பழிவாங்கப்படுகிறார்கள். யாராவது இறந்தால் அவர்கள் தாங்களாகவே மையவாடியில்
புதைப்பதற்கு இசைவு மறுப்பது, இறந்தவர்கள் பற்றிய செய்தியை ஒலிபெருக்கியில்
ஒளிபரப்ப மறுப்பது போன்ற செயல்கள்தாம் முதன்மையாய் அமைகின்றன. இந்தச்
சிக்கல் இன்று நேற்றல்ல. பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. பெரும்பாலும்
கடலோர மாவட்டங்களில்தான் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
நாம் கண்ட களஆய்வின்படி, திட்டச்சேரி,
வவ்வாலடி, வடகரை அரவங்குடி, திருவிடச்சேரி, திருவாரூர் முதலான பகுதிகளில்
இந்தத் தீண்டாமை செயல் நடைபெற்று வருகிறது. இதனால் இறந்த பின்னர் பிணத்தை 5
நாட்கள் அல்லது 6 நாட்கள்வரை வைத்து அதன்பின்னர் கோட்டாட்சியர்,
வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் இணக்கம் செய்த பின்னர் இடஒதுக்கீடு
கொடுக்கப்படுகிறது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள
திருப்புகழுர் ஊராட்சிக்குட்பட்ட வவ்வாலடி என்ற ஊரில் ஏறத்தாழ 20
குடும்பங்களை ஊர்விலக்கம் செய்துள்ளனர். இதனால் இந்த 20 குடும்பங்கள்
நடத்தும் திருமணம், இறப்பு நிகழ்ச்சிகளில் யாரும் பங்கேற்கக் கூடாது; இறந்த
பின்னர் மையவாடியில் அடக்கம் செய்ய இசைவு கிடையாது எனப் பல கட்டுப்பாடுகள்
உள்ளன. வக்பு வாரியத்திற்குற்பட்ட முகையதீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில்
நடைபெற்ற முறைகேடுகளைத் தட்டிக்கேட்ட ஒரே காரணத்திற்காகவும், தொப்பி போட்டு
தொழுவது, தொப்பி இல்லாமல் தொழுவது போன்ற முரண்பாடுகளாலும் இந்த
ஊர்விலக்கம் நடைபெற்றுள்ளது.
இதே போல திருவள்ளூர் மாவட்டத்தில்
திருத்தணி வட்டத்தில் முசுலிம் நகரில் வரவு-செலவு கணக்கு கேட்டதற்காக 128
குடும்பங்களை ஊர்விலக்கம் செய்துள்ளனர். இதே போன்று
திருவண்ணாமலையைச்சேர்ந்த அத்தியந்தல் ஊரில் அகமது உசேன் என்பவரை 4
ஆண்டுகளாக ஊர் தள்ளி வைத்துள்ளனர். இதே போன்று திருவாரூர் மாவட்டத்தில்
திருவிடச்சேரியில் 13 சிற்றூர்களை ஊர்தள்ளி வைத்துள்ளனர்.
இதன் தொடர்பாகச் சென்னை
உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்த சம்சுல்ஃகதாவிடம் பேசினோம்,
இருக்கின்றபோது இடஒதுக்கீடு கேட்டுப்போராட்டம் நடத்துவது இயல்புதான். ஆனால்
இறந்த பின்னர் இடஒதுக்கீடு கேட்டுப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால்
பல்வேறு நிகழ்வுகைளத் தொகுத்து, இறந்த பின்னர் பள்ளிவாசல் ஒலிபெருக்கியில்
இறந்தவர் பற்றி ஒளிபரப்ப வேண்டும் என்றும், இறந்த பின்னர் இறந்த உடலை
பள்ளிவாசலுக்கு சொந்தமான மையவாடியில் புதைக்கவேண்டும் எனவும், இறந்த
பின்னர் தொழுகை நடத்த அனுமதி அளிக்கப்படவேண்டும் என்ற 3 நிபந்தனைளை
ஏற்குமாறு திருப்புகழுர் ஊராட்சித்தலைவர், வவ்வாலடி சமாஅத்து தலைவர்,
மாவட்ட ஆட்சியர், வக்பு வாரிய முதன்மைச் செயலாளர் ஆகியோருக்கு முறைப்படி
கடிதம் அனுப்பினேன். மறுமொழி வரவில்லை. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்துள்ளேன் என்றார்.
இதன் தொடர்பாக வழக்கு தொடுத்த வழக்கறிஞர்
மணியிடம் தொடர்பு கொண்டோம், “இந்தச்சிக்கல் பல நூற்றாண்டுகளாக நடந்து
வருகிறது. அதற்கான அலகாபாத்து உயர்நீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள் காட்டி
உயர்நீதிமன்றத்தில் மனு பதிந்துள்ளேன்” என்றார்.
இதன் தொடர்பாக வவ்வாலடி சமாஅத்து
நிருவாகிகளிடம் தொடர்பு கொண்டபோது, ஊர்விலக்கம் செய்தது செய்ததுதான்.
எங்களிடம் மன்னிப்பு கேட்டு நந்தியாவிளக்கு என்ற கோட்பாட்டின்படி தண்டம்
கட்டினால் ஊரில் சேர்த்துக்கொள்வோம் என்றனர்.
இதன் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்
கே.எசு.பழனிச்சாமியிடம் தொடர்பு கொண்டோம். அரசு விழாவில் இருப்பதாகவும்
அதன்பின்னர் பதில் அளிக்கிறேன் என்றும் சொன்னா். இந்தியா விடுதலை அடைந்த
பின்னரும் தீண்டாமைக் கொடுமையை அரங்கேற்றிவருவோர்மீது நடவடிக்கை
எடுக்கவேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் முழக்கம்.
அலகாபாத்து உயர்நீதிமன்ற தீர்ப்பின் விபரம்
அலகாபாத்து உயர்நீதிமன்றத்தைச்
சேர்ந்த திரு.மகமூத் அவர்கள் தனிமனிதராகப் போராடி இந்தியா முழுவதும் பொது
விதிமுறையை உருவாக்கி கொடுத்தார்.
ஒரு குறிப்பிட்ட மசூதி முசுலிம்களின்
எந்தப் பிரிவினருக்குச் சேரவேண்டும் என்ற வழக்கில் நீதிபதி மகமூத்து
கூறுகிறார்: “முகமதியன் என்ற சொல்லுக்கு மிகவும் சரியான ஒரு விளக்கத்தைக்
கொடுப்பது எனக்கு அவசிமல்ல. மகாராணியாருக்கும், இரம்சானுக்கும் இடையேயான
இரம்சான் வழக்கில் தேவையான அனைத்தையும் நான் சொல்லியிருக்கிறேன். ஒரு மசூதி
எப்போதும் ஒரு மசூதிதான். முசுலிம்களில் எந்த ஒரு பிரிவினரும் மற்ற
பிரிவினரை ஒரு மசூதிக்குள் சென்று தொழுகை நடத்தகூடாதென்று தடுக்க முடியாது.
எந்த ஒரு முசுலிம் பிரிவினருக்கும் ஒரு மசூதியிலும் எந்தத் தனிப்பட்ட
உரிமையும் இல்லை. அப்படிப்பட்ட உரிமையை முசுலிம்களின் சட்டமோ, கடவுளோ,
அல்லது அவரின் தூதரோ யாருக்கும் கொடுக்கவில்லை” என்று விளக்குகிறார்.
மேலே குறிப்பிட்டுள்ள வழக்கில் தனது தீர்ப்பைச் சொல்லும் போது தலைமை நீதிபதி சர்சான் எட்சு இவ்வாறு கூறுகிறார்:
“முசுலிம்களின் ஒரு பிரிவினர்,
குறிப்பிட்ட அந்த மசூதியில் தங்கள் வழக்காறுபடி தொழுகை நடத்தலாமா, கூடாதா
என்பதைத் தீர்மானிக்கவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் வாதிகள்
முசுலிம்களே அல்லவென்றும், இமாம் அபு அனீபா அவர்களைப் பின்பற்றுவோர்
இல்லையென்றும், ஆகையால் வாதிகளை மேற்கண்ட மசூதியிலிருந்து
தள்ளிவைக்கவேண்டுமென்றும் எதிர்வாதிகள் கூறுகிறார்கள். இந்த வழக்கைக்
காசியின் சார்புநிலை நீதிபதி முதலில் விசாரித்துள்ளார். அவர் வாதிகள்
முகமதியர்கள்தான் என்றும், எனவே மசூதியில் தொழுகை நடத்த உரிமையுள்ளவர்கள்
என்றும் தன் முடிவைத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து
எதிர்வாதிகள் மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள். வழக்கை
விசாரித்த மாவட்ட நீதிபதி, வாதிகள் சன்னிபிரிவு முகமதியர்களாக இருந்தாலும்
இரண்டு காரணங்களுக்காக வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டார். வழக்குரை
கோயிலில் இமாம் அனீபா அவர்களைப் பின்பற்றுவோர் மட்டும் தொழுகை நடத்தலாம்
என்று தனது தீர்ப்பில் கூறிய நீதிபதி, சன்னிபிரிவு முசுலிம்கள் சில
சிறப்பான காரணங்களால் எந்த இமாமையும் பின்பற்றுபவர்கள் அல்லர் என்று
இரண்டாவது ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டார்.
இந்த வழக்கில் என் முன் இரண்டு
வினாக்கள் எழுந்துள்ளன. கடவுளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ள ஒரு மசூதி
சன்னிபிரிவு முசுலிம்களின் ஒரு குழுவினருக்கு மட்டும்தான் உரிமையுடையதா
என்பது என் முன்னால் உள்ள முதல் கேள்வி. சில சடங்குகளில் வேறுபடுகிறார்கள்
என்பதற்காக வாதிகளை சன்னிபிரிவு முசுலிம்களே என்று சொல்வது சரியானதா
என்பதுதான் என் முன்னால் உள்ள இரண்டாவது கேள்வி.
முதல் கேள்வி, இறைவனுக்கு
ஒப்படைக்கப்பட்ட ஒரு மசூதியின் மீது சன்னிபிரிவு முசுலிம்கள் மட்டும் உரிமை
கோரலாமா என்பது. நான் புரிந்து கொண்டவரை, ஒரு மசூதி என்பது மசூதிதான்.
நிபந்தனையுடன் அது இறைவனுக்கு ஒப்படைக்கப்பட்டதல்ல. சில குறிப்பிட்ட
சடங்குகளைப் பின்பற்றக்கூடியவர்களுக்கு மட்டுமே இந்த மசூதியில் தொழுகை
நடத்த உரிமையுண்டென்று கோரமுடியாது. நான் புரிந்துகொண்ட வரை மசூதி என்பது
அனைத்து முகமதியர்களும் சென்று தங்கள் மனசாட்சியின் படி தொழுகை
நடத்தக்கூடிய ஓரிடம்.” புகழ்பெற்ற இந்தத் தீர்ப்பை அடியொட்டி இலாகூர்
உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த மற்றொரு முசுலீம் நீதிபதி கீழ் வருமாறு
கருத்தைத் தெரிவித்துள்ளார்.
முகமதியர்களின் சட்டப்படி
தொழுகைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ள எந்த ஓரிடத்தையும் மசூதி என்று கூறலாம்.
இந்த வழக்கில் அது ஒரு வீடு. அந்த இடத்தில் கூர் கோபுரங்கள் இருக்கவேண்டிய
அவசியமில்லை. வக்பு எனப்படும் இசுலாமிய அறக்கட்டளைகள், அவற்றுக்குச்
சொந்தமான சொத்துக்களை ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் தனிப்பட்ட
பயன்பாட்டிற்காக ஒதுக்கலாம் என்ற ஒரு கருத்து இருக்கிறது. முசுலிம்களின்
சட்டப்படி அது செல்லத்தக்கதல்ல. இரண்டு: ஆவணங்களில் வக்புவின் விருப்பம்,
அல்-ஈ-குர்ஆன் குழுவினர் மட்டுமே அந்த இடத்தில் தொழுகை நடத்தவேண்டும் என்று
உள்ளது. இறைவனுக்காக ஒப்படைக்கப்பட்ட வக்பு, முசுலிம்களின் சொத்து வக்பு
நாமாவின் அந்த வக்பு ஒரு பிரிவினருக்கு மட்டுமே என்பதில் ஐயமுமில்லை. ஆனால்
அந்த நிபந்தனை செல்லத்தக்கதல்ல. 1890 ஆம் ஆண்டுவாக்கில் முசுலிம்
வழக்கறிஞர்கள், மசூதிகள் அனைத்து முசுலிம்களின் தொழுகைக்குரிய இடம் என்பதை
இசுலாமியச் சட்டப்படி தெளிவாக நிலை நிறுத்திவிட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக