வியாழன், 27 ஜூன், 2013

வெளிநாட்டில் ஆடு மேய்த்தவன்!

வெளிநாட்டில் ஆடு மேய்த்தவன்!

வெளிநாட்டில், இலட்சத்தில் சம்பாதிக்கலாம் என, பாமரர்கள் ஏமாற்றப்படு வதை தடுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களை மீட்கும் சேரன்: நான், கடலூர் மாவட்டம், திட்டக்குடியை சேர்ந்தவன். தமிழ் இலக்கியத்தில், பி.ஏ., முடித்து, "டெய்லரிங்' வேலையில் நல்ல வருமானம் ஈட்டி, சந்தோஷமாக வாழ்ந்தேன். 1995ல், ஊரில் உள்ள சிலர், வெளிநாட்டில் டெய்லரிங்கிற்கு நல்ல வரவேற்பு உள்ளதாகவும், இரண்டே ஆண்டில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்றும், ஆசை வார்த்தை கூறினர்.நானும் ஏமாந்து, 80 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி, ஏஜன்டிடம் கொடுத்து, விமானம் மூலம், வளைகுடா நாட்டிற்கு சென்றேன். அங்குள்ள முதலாளியோ, "உனக்கு ஆடு மேய்க்கிற வேலை, மாதம், 5,000 சம்பளம். அதுவும், ஆறு மாதத்திற்கு பின்' என்றார். கேட்டதும், தலையில் இடி விழுந்தது போல் இருந்தது.டெய்லர் வேலைக்கு வந்ததாக சொல்லிய போது, "உன்னை மூன்றாண்டுக்கு ஆடு மேய்க்க ஒப்பந்தம் செய்துள்ளேன். அதுவரை நீ எங்கேயும் போக முடியாது' என, பாஸ்போர்ட்டை பிடிங்கிக் கொண்டார். தகர கொட்டகையில் தங்கியே, 60 ஆடுகளை மேய்த்தேன். காலையில், 8:00 மணிக்கு ஓட்டி சென்றால், மாலை, 7:00 மணிக்கு திரும்புவேன்.சம்பளம், சாப்பாட்டுக்கே சரியாக இருந்தது. வாங்கிய அடி, உதை தான் மிச்சம். மூன்றாண்டுக்கு பின் ஊர் திரும்பியதும், அவமான உணர்வால் குடிப் பழக்கம் வந்தது.

பின் தெளிவு பெற்றதும், "என்னை போல் இனி யாரும் ஏமாறக் கூடாது' என, விழிப்புணர்வு ஏற்படுத்த எண்ணி, "வெளிநாட்டில் ஆடு மேய்த்தவன்' என, என் சூட்கேஸ் மீது, மொபைல் நம்பருடன் எழுதி, பொது மக்கள் மத்தியில் வலம் வந்தேன்.கடந்த, 1998ல் தனி மனிதனாக ஆரம்பித்த பிரசாரம், வெளிநாடு போய் நொந்து வந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் என, பலர் இணைந்து இன்று, "மீட்பு அறக்கட்டளை'யாக மாறி, அதன் தலைவராக இருக்கிறேன். வெளிநாட்டில் சிக்கித் தவிப்பவர்கள் குறித்து, தகவல் வந்தவுடன், அவர்களை மீட்க, களத்தில் இறங்கி விடுவோம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை ஓய மாட்டோம். வளைகுடா நாடுகளில் அன்னிய தொழிலாளர்கள் வெளியேற்றப்படும் சூழலில் நாம், விழிப்பாய் இருப்பது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக