புதன், 26 ஜூன், 2013

ஒரே இரத்தம் ஒத்துப் போகுமா!

ஒரே இரத்தம் ஒத்துப் போகுமா!

இரத்த த் தானம் பற்றி, புதிய தகவல்களை தரும், எழும்பூர் அரிமா ரத்த வங்கி சேர்மன், பி.ஜி.சுந்தரராஜன்: சென்னை எழும்பூரில், "லயன்ஸ் பிளட் பேங்' என்ற, ரத்த சேமிப்பு வங்கியை, 29 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். எங்களின் இச்சேவையை, அன்னை தெரசா, நேரில் பார்த்து பாராட்டியுள்ளார். பெயர் தெரியாத நோய்களால், இன்று, ரத்தத்தின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், ரத்த வங்கிகளில், போதுமான ரத்த இருப்பு இல்லை. ஏப்ரல், மே போன்ற விடுமுறை மாதங்களில், ரத்தம் கிடைக்காமல், உயிரிழப்பும், அதிகம் ஏற்படுகிறது. ரத்தத்தின் தேவை அதிகரிப்பதால், ஒருவரிடம் பெற்ற ரத்தத்தை, தொழில்நுட்பம் மூலம் ரெட் செல்ஸ், பிளாஸ்மா, பிளேட்லெட்ஸ் என, மூன்று பகுதிகளாக பிரித்து, மூன்று நபர்களுக்கு பயன்படுத்துகிறோம். ஒருவரின் ரத்தம், மூன்று உயிர்களை பிழைக்க வைக்கிறது.
சினிமாவில் காட்டுவது போல், ஹீரோவும், ஹீரோயினும் பக்கத்து பக்கத்து படுக்கையில் படுத்து, ரத்தம் ஏற்றுவது, நடக்காத காரியம். ஏனெனில், ஒருவரிடம் எடுக்கப்பட்ட ரத்தமானது, என்ன குரூப், மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினை, எச்.ஐ.வி., போன்ற நோய்கள் மற்றும் ஏதேனும் கிருமிகள் உள்ளதா என, பல கட்ட பரிசோதனை செய்யப்பட்டு, பாதிப்பு இல்லாத நிலையில் தான், ரத்தம் தேவைபடுபவர்களுக்கு ஏற்றப் படுகிறது. எனவே, தேவைப்படும் போது கொடுக்கப்படும் ரத்தத்தை விட, தேவைக்கு முன்பாகவே ரத்த வங்கிகளுக்கு கொடுக்கப்படும் ரத்தத்துக்கு, மதிப்பு அதிகம். ஒரே ரத்த பிரிவை சேர்ந்த, இரண்டு நபர்களின் ரத்தம், ஒன்றாக ஒத்துப்போகும் என, எல்லாரும் நினைக்கிறோம்; இது, முற்றிலும் தவறு. ஒரே ரத்த பிரிவுள்ள இருவரின் ரத்தம் ஒத்துப் போகலாம்; ஒத்துப் போகாமலும் இருக்கலாம். இதில், எவ்வித கட்டுப்பாடும் இல்லை."ஜெல் டெக்னாலஜி' என்ற, அதிநவீன தொழில்நுட்பம் மூலம், இருவரின் ரத்தமும் ஒத்துப்போகிறதா என, "கிராஸ் மேட்ச்' செய்து பார்ப்பதால், முன் கூட்டியே, பல பிரச்னைகளை தடுக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக