புதன், 26 ஜூன், 2013

அஞ்சலகங்களில் தொலைவரிக்கு மாற்றாக மின்மடல் பணி

இப்பொழுதும் நடைமுறையில் இவ்வசதி உள்ளது. எனினும் மிகச் சில அஞ்சலகங்களில்தான் உள்ளது. மயிலாப்பூரில் உள்ள அஞ்சலகம்  கணிணி பயன்பாடு உள்ள பெரிய அஞ்சலகம்தான். அங்கேயே  மின்மடலில் அனுப்ப முயன்ற பொழுது இராயப்பேட்டை அஞ்சலகத்திற்குச் செல்லுமாறு தெரிவித்தனர். எனவே, அனைத்து அஞ்சலகங்களிலும் கணிணியை நிறுவி இவ்வசதி்யை எல்லா அஞ்சலகங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

 

தபால் நிலையங்களில் தந்திக்கு மாற்றாக இ-போஸ்ட் சேவை

தந்தி சேவை நிறுத்தப்படவுள்ள நிலையில், இ-போஸ்ட் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தபால் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு தபால் துறை தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவின் மிகப் பழமையான தகவல் தொடர்பு சேவைகளுள் ஒன்றான தந்தி சேவை ஜூலை 15-ஆம் தேதி முதல் நிறுத்தப்படவுள்ளது.
தந்தி சேவையைப் போன்றே இ-போஸ்ட் சேவையை இந்திய தபால்துறை வழங்குகிறது. இச்சேவையில், ஏ4 பக்க அளவிலான செய்திக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மின்னஞ்சலின் வேகத்துடன் இணைந்து இச்சேவை வழங்கப்படுகிறது.
கணினிமயமாக்கப்பட்ட அனைத்து தபால் நிலையங்களிலும் இச்சேவை அளிக்கப்படுகிறது.
அச்சடிக்கப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட தகவலை, இ-போஸ்ட் மையத்தில் கொடுத்தால், அது ஸ்கேன் செய்யப்பட்டு இணையம் மூலம் மின்னஞ்சல் செய்யப்படும். விநியோகிக்கப்படும் மையத்தில் அத்தகவல் பிரின்ட் எடுக்கப்பட்டு, உறையிலிடப்பட்டு தபால்காரர் மூலம் உரிய முகவரியில் சேர்க்கப்படும்.
தபால் முகவரி தவிர, உலகின் எந்தப்பகுதியில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல் கொண்டு சேர்ப்பதற்கும் இச்சேவையைப் பயன்படுத்தலாம்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக இ-கார்ப்பரேட் எனும் சிறப்புத் திட்டம் அமலில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒரே சமயத்தில் 9,999 முகவரிகளுக்கு தகவல் அனுப்பலாம். இதற்கு ஏ4 பக்க அளவிலான தகவலுக்கு ரூ.6 கட்டணமாக வசூலிக்கப்படும். ஒரே முறை குறைந்தது 50 அல்லது அதற்கு அதிகமான முகவரிக்கு தகவல் அனுப்பும் நிறுவனங்களுக்கு ஒரு பக்கத்துக்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும்.
பொதுமக்களும், வர்த்தக நிறுவனங்களும் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக