70 அகவை இளைஞர்!
எம்.ஜி.ஆர்., காமராஜர், என்.டி.ஆர்., என, மூன்று முதல்வர்களிடம் விருது பெற்ற, 70 வயதிலும் விளையாடி வரும், மாரிமுத்து: எனக்கு, 70 வயது ஆனாலும், 20 வயது இளைஞனை ப் போல் விளையாட்டுகளில் வெற்றி
பெற்று, பரிசு மற்றும் பதக்கங்கள் வாங்கி வருகிறேன். சீர்காழியில்,
பள்ளியில் படிக்கும் போதே, வன்தட்டு
எறிவதில், நன்கு பயிற்சி பெற்றேன். 18 வயதிலேயே, மாநில அளவிலான போட்டியில்
பங்கேற்று, வன்தட்டு எறிதலில் முதலிடம் பிடித்து, என் வெற்றியை
துவக்கினேன். தனியார் நிறுவனத்தில்,
1964ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்த போது, விளையாட்டு மீதான என் ஆர்வத்தை
பார்த்து, "ஸ்பான்சர்ஷிப்' வழங்கியதால், மாநில, தேசிய மற்றும் சர்வதேச
அளவிலான போட்டிகளில் பங்கேற்று,
வெற்றி பெற்றேன். தமிழகத்தில், காமராஜர், எம்.ஜி.ஆர்., ஆந்திராவில்,
என்.டி.ஆர்., என, மூன்று முதல்வர்களின் கையால், முதல் பரிசுகளை பெற்றது
பெருமையாக உள்ளது. இதில், எம்.ஜி.ஆர்., கையால் பரிசு பெற்ற புகைப்படத்தை,
இன்னும் நினைவாக வைத்துள்ளேன். "ஆசிய மூத்தோர் தடகள போட்டி'களில் இந்தியா சார்பில் பங்கேற்று, குண்டு எறிதலில் மலேசியாவில்
முதலிடமும், சிங்கப்பூரில் இரண்டாமிடமும் பெற்று சாதித்துள்ளேன். 2003ல்
நடந்த விபத்தால், இடது தொடை முற்றிலும் முறிந்து, நான்கு ஆண்டுகளாக நடக்கக்
கூட முடியாமல் இருந்தேன். கால்களுக்கு அழுத்தம் தரக்கூடாது என,
மருத்துவர்கள் சொன்னாலும், விளையாட்டின் மீது எனக்கிருந்த ஆர்வத்தை
கட்டுப்படுத்த முடியாமல், உடலை சற்று பின்னுக்கு தள்ளி, குண்டு, வன்தட்டு
எறிவதில் பயிற்சி பெற்று, சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த,
மூத்தோருக்கான தேசிய போட்டியில், இரண்டு பதக்கங்கள் பெற்று சாதித்தது
மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில் நடக்க இருக்கும், ஆசிய மூத் தோர் தடகள
போட்டியில், மீண்டும் பங்கேற்க, தீவிர பயிற்சி எடுத்து வருகிறேன். ஏனெனில்,
விளையாட்டு வீரனுக்கு, சாகும் வரை ஓய்வு என்பதே இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக