வியாழன், 27 ஜூன், 2013

சவுதியில் வாழும் தமிழர்களின் நலன் காக்க கருணாநிதி கோரிக்கை

சவுதியில் வாழும் தமிழர்களின் நலன் காக்க கருணாநிதி கோரிக்கை

சவுதியில் வாழும் தமிழர்களின் நலனைக் காக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சவுதி அரேபியாவில்  "நிதாகத்"  என்ற  சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது.   அந்தச் சட்டம் கடுமையாக நடைமுறைக்கு வருமேயானால்,  அந்த நாட்டில் உள்ள எல்லா நிறுவனங்களிலும்  பத்து சதவிகித இடங்களை  சவுதி அரேபியர்களைக் கொண்டு தான் நிரப்ப வேண்டுமென்ற அடிப்படையில், இப்போதே அதனை அமல்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.   அவர்கள் நாட்டைச் சேர்ந்த பத்து சதவிகிதத் தினரை  பணிக்கு அமர்த்துகின்ற காரணத்தால்,  அந்த இடங்களிலே இதுவரை பணியாற்றி வந்த  வெளிநாட்டினரையெல்லாம்  திரும்ப அனுப்பும் நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு தொடங்கிவிட்டது.  இதன் காரணமாக வரும் ஜுலை மாதம் 3ஆம் தேதிக்குள், அதாவது இன்னும் ஒரு வார காலத்திற்குள்ளாக  60 ஆயிரம் இந்தியர்கள் அந்த நாட்டிலே பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் இந்தியாவுக்குத் திரும்ப அனுப்பப்பட இருக்கிறார்கள்.   60 ஆயிரம் இந்தியர்களில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தமிழர்கள்.    இதைக் காரணமாகக் கொண்டு மேலும் அங்கே பணியாற்றிக் கொண்டிருப்பவர்களையும்  வெளியேற்ற முயற்சிகள் தொடங்கிவிட்டதாகச் செய்திகள் வருகின்றன.   அதைப் போலவே  குவைத் நாட்டிலே பணிபுரியும்  ஒரு இலட்சத்து 20 ஆயிரம் தமிழர்களில் பலர் வெளியேற்றப்படும் நிலைமை உருவாகியுள்ளது.
அந்த நாடுகளில் பணியாற்றும் தமிழர்கள் பல்லாண்டு காலமாக தங்கள் குடும்பத்தோடு அங்கே குடியேறி அந்த நாடுகளோடு ஐக்கியமாகி விட்டவர்கள்.   அவர்கள் தொடர்ந்து அங்கேயே பணியாற்ற இந்திய அரசும், தமிழ் மாநில அரசும் உதவிட முன் வர வேண்டுமென்று விரும்புகிறார்கள்.   எனவே மத்திய, மாநில அரசுகள் இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு,  அவர்கள் தொடர்ந்து அந்த நாடுகளில் வாழவும், அவர்களுடைய வாழ்வாதாரத்தைக் காப்பாற்றவும், தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக