காஞ்சிபுரம்: ஆரியம்பாக்கத்தில் புதைந்து
கிடந்த, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர்கள் கால, ஈஸ்வரன் கோவிலை,
தொல்லியல் துறையினர் கண்டெடுத்து உள்ளனர். காஞ்சிபுரத்தில் இருந்து
ஸ்ரீபெரும்புதூர் சாலையில் உள்ளது ஆரியம்பாக்கம் கிராமம். இக்கிராமத்தின்
வடக்குப் பகுதியில், தரை மட்டத்தில் இருந்து 20 அடி உயரத்திற்கு, மண் மேடாக
இருந்து. இதன் மீது 5 அடி உயரம் கொண்டு சிவலிங்கமும், மூன்றரை நீளமும்,
ஒன்றரை அடி உயர நந்தி சிலையும் இருந்தது. இதன் அடியில் பழமையான கற்கோவில்
இருக்கும் என, கிராம மக்களின் நம்பிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில்,
இக்கிராமத்தை சேர்ந்த கண்ணன், சுரேஷ் ஆகியோர், தொல்லியல் துறை ஆணையருக்கு
தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஆய்வு பணி நடந்தது. இதுகுறித்து,
தொல்லியல் துறை காப்பாட்சியர் லோகநாதன் கூறியதாவது: ஆரியம்பாக்கத்தில்
உப்புக்கற்களால் கட்டப்பட்ட சிவன்கோவில் புதைந்து கிடப்பது
கண்டெடுக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், கருவறையும்,
அர்த்த மண்டபமும் உள்ளது. கட்டடத்திற்கு பக்கவாட்டில் கூழாங்கற்களும்
பதிக்கப்பட்டுள்ளன. நில நடுக்கம் மற்றும் இயற்கை சீற்றங்களால் கோவில்
கட்டங்கள் சேதமடையாமல் இருக்க, கூழாங்கற்கள் பயன்படுத்தப் பட்டிருக்கலாம்.
இக்கோவில் பல்லவர்கள் காலத்தின் இறுதியிலும், சோழர் காலத்தின்
துவக்கத்திலும் கட்டப்பட்டிருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக