ஞாயிறு, 23 ஜூன், 2013

ஆவின் என்ன ஆங்கிலேயன் நிறுவனமா?

ஆவின் என்ன  ஆங்கிலேயன் நிறுவனமா?  விவரம் தெரியாமல் மக்கள் புலம்பல்
ஆவின் நிறுவனம், விற்பனை செய்யும் உணவுப் பொருட்கள், பாக்கெட் மீது, அனைத்து விவரங்களும், ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளதால், ஆங்கிலம் தெரியாதவர்கள், உள்ளே இருப்பது என்ன என்ன பொருள் என்ற விவரம் தெரியாமல், தவிக்கின்றனர்.

தமிழக அரசு, "ஆவின்' வணிக சின்னத்தின் கீழ், பால், வெண்ணெய், நெய், பால் பவுடர், பாதாம் பவுடர், மைசூர்பா, பால்கோவா, பன்னீர், தயிர், மோர், ஐஸ்கிரீம், "மில்க்' சாக்லெட், "மில்கி' மற்றும், "நட்டி' சாக்லெட், நறுமண பால் உள்ளிட்ட பால் உப பொருட்களை விற்பனை செய்து வருகிறது. அரசு அலுவலகங்கள், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில், விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் மூலம், "ஆவின்' பால் பொருட்கள் விற்கப்படுகின்றன. தமிழகத்தில், அனைத்து உணவுப் பொருட்கள் விற்பனையில், தனியார் கோலோச்சி இருந்தாலும், பால் மற்றும் பால் பொருட்களில்,"ஆவின்' நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கே, பொது மக்களிடம் அமோக வரவேற்பு காணப்படுகிறது. கடந்த ஆண்டு, 10,333 டன் பால் பவுடர் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. வெண்ணெய், 7,100 டன், நெய், 2,250 டன், கோவா, 2.40 லட்சம் கிலோ, ஐஸ்கிரீம், 6,500 லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இவற்றிற்கான தேவை அதிகரித்துள்ளதால், நடப்பாண்டில் இதன் உற்பத்தி இன்னும் அதிகரிக்கும்என, எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ஆவின் நிறுவனம், விற்பனை செய்யும் உணவு பொருட்கள், பாக்கெட் மீது, அனைத்து விவரங்களும், ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இதனால், ஆங்கிலம் தெரியாதவர்கள், அது, என்ன பொருள், என்ற விவரம் தெரியாமல், அவற்றை வாங்க தயங்குகின்றனர்.

இதுகுறித்து, நுகர்வோர் சிலர் கூறியதாவது: தற்போது, உணவு பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில், பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதனால், உள்நாட்டை சேர்ந்த, பல நிறுவனங்கள் அழிந்து போயுள்ளன. தமிழகத்தில், பெரும்பாலான மக்கள் கிராமங்களில் வசிக்கின்றனர். ஆவினில் விற்கப்படும் உணவு பொருட்களின் விவரங்கள் எளிதாக புரியும் வகையில், தமிழில் அச்சடித்து விற்பனை செய்தால், இதன் விற்பனை, கிராமங்களில் அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, ஆவின் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பால் பொருட்களின் தமிழ் பெயர் நீண்டதாக உள்ளது. இதை அச்சிடுவதற்கு இடம் போதவில்லை. எனவே, தான் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக