சனி, 1 ஜூன், 2013

உடல் நலம் முதன்மை!

உடல்  நலம் முதன்மை!

சிறுவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, 65 ஆண்டுகளாக இலவச, "ஜிம்' நடத்தி வரும், குழந்தைசாமி: நான், கோவை மாவட்டத்தில் உள்ள, புலியகுளத்தை சேர்ந்தவன். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க எண்ணி, "சுப்பாராவ் ஜிம்'மில் பாரம்பரிய விளையாட்டுகளை, 17 வயதில் கற்க ஆரம்பித்தேன். இவ்விளையாட்டில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, என் ஆசிரியருக்கு பின், இப்பயிற்சி ஜிம்மை, நானே இலவசமாக நடத்தி வருகிறேன். ஏனெனில், பாரம்பரிய விளையாட்டால், உடல் திறனும், நம் பாரம்பரியமும் காக்கப்படுகிறது. சுவர் இருந்தால் தான், சித்திரம் வரைய முடியும். சுவர் என்கிற உடல், ஆரோக்கியமாக இருந்தால் தான், சித்திரம் என்கிற கல்வி அறிவை, மாணவர்களிடம் ஊட்ட முடியும். எனவே, மாணவர்களின் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, வசதி மிகுந்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று, அங்குள்ள மாணவர்களுக்கு, சிலம்பு, மல்யுத்தம் என, விளையாட்டுகள் மூலம், அவர்களின் உடல் திறனையும், மனதை ஒருநிலைபடுத்தும் தன்மையையும் மேம்படுத்தினேன். இப்பள்ளி மற்றும் கல்லூரிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தில், ஜிம்மிற்கு வரும், ஏழை மாணவர்களிடம் பணம் வசூலிக்காமல், இலவசமாக பயிற்சி தருகிறேன். டென்னிஸ், கிரிக்கெட், நீச்சல் போன்ற விளையாட்டுகளை முறையாக கற்க, ஏழை மாணவர்களால் முடிவதில்லை என்பதால், தினமும், 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இங்கு வந்து இலவசமாகவே பயிற்சி எடுத்து, தங்கள் உடல் திறனை மேம்படுத்துகின்றனர். வாள் சண்டையில் முக்கிய வகைகளான, அரேபியன் கோடு, ஜப்பான் தால்வார், ரோமானிய காடு, பஞ்சின் வாள், குச்சி வாள், சுருள் வாள் வீச்சு போன்றவற்றை கற்று தருகிறேன். மூங்கில் வளையங்களை உடலில் புகுத்தி, சாகசங்கள், சிலம்பம், மல்யுத்தம் என, 3 வயது குழந்தைகள் முதல், கல்லூரி இளைஞர்கள் வரை, இலவசமாகவே கற்று தருகிறேன். மாணவர்களுக்கு தினமும் நானே பயிற்சி தருவதால், இதுவரை எனக்கு எந்த நோய்நொடியும் வந்ததில்லை. கடந்த, 65 ஆண்டுகளாக, நடத்தப்படும் சுப்பாராவ் ஜிம் மூலம், 500க்கும் மேற்பட்டோர், மாநில மற்றும் தேசிய அளவில் சாம்பியன்களாக உருவாகியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக