செவ்வாய், 28 மே, 2013

தனித்திறமையை வளர்க்கும் படிப்புகள்!

தனித்திறமையை வளர்க்கும் படிப்புகள்!

ஓவியம், கவிதை என, மாணவர்களின் தனித் திறமையை வளர்க்கும் படிப்புகளை கற்றுத் தரும், கல்லூரி முதல்வர் சந்திரசேகர்: நான், சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியின், முதல்வராக பணியாற்றுகிறேன். இன்றைய இளம் தலைமுறையிடம், கவிதை, ஓவியம் என, படைப்புகள் சார்ந்த தனித் திறமைகள் புதைந்துள்ளன. இவர்கள், தங்களின் தனித் திறமைக்காக படிக்காமல், பொறியியல், மருத்துவம் என, வழக்கமான பாதையில் சென்று, தனித் திறமைகளை புறக்கணிக்கின்றனர். மாணவர்களின், தனித் திறமை மற்றும் கலை தாகத்தை ஊக்கப்படுத்த, இந்தியாவிலேயே முதல் முறையாக, 1850ம் ஆண்டு கலைப் பள்ளியாக தொடங்கப்பட்டு, இன்று, சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியாக உருவெடுத்துள்ளது. இங்கு, இளநிலை மற்றும் முதுநிலை நுண்கலை பட்ட படிப்புகளை பயிற்றுவிக்கிறோம். தமிழகத்தில், சென்னை மற்றும் கும்பகோணத்தில் மட்டுமே, இக்கல்லூரிகள் உள்ளன. பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றவர், இளநிலை பிரிவில் சேரலாம். நுழைவுத் தேர்வு மூலம், மொத்தமுள்ள, 90 இடங்களில், 80 சதவீதம், அரசின் இட ஒதுக்கீட்டிலும், 20 சதவீதம், கட்டண அடிப்படையிலும் நிரப்புவர். அரசு மாணவர்கள், 1,000 ரூபாயும், மற்ற மாணவர்கள், 10 ஆயிரம் ரூபாயும், ஆண்டு பயிற்சி கட்டணமாக கட்ட வேண்டும். இளநிலையில், ஓவியம், காட்சித் தொடர்பியல், சிற்பம், ஆடை, செராமிக் போன்றவற்றை வடிவமைப்பது மற்றும் அச்சு உருவாக்கம் என, ஆறு துறைகளில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. தனித் திறமைகளை தேர்ந்தெடுத்து படிக்கும் மாணவர்கள், தான் சார்ந்த துறையில் சாதிப்பது நிச்சயம். இன்றைய நவீன உலகில், குளியல் சோப்பில் ஆரம்பித்து, விமானங்கள் வரை, படைப்புகள் என்பது தான் பிரதானம். ஆனால், இப்படைப்புகள் பற்றிய கல்வி குறித்து, மாணவர்களிடம், போதிய விழிப்புணர்வு இல்லாததால், யாரும் இதை கண்டு கொள்வதில்லை. தகுதியான மாணவர்கள் இதை பயன்படுத்தினால், நல்ல சம்பளத்தில், பெரிய நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக