ஞாயிறு, 26 மே, 2013

நம்பிக்கையோடு புதுப்பித்தேன்!

நம்பிக்கையோடு புதுப்பித்தேன்!

கடந்த, 38 ஆண்டுகளாக, வேலைவாய்ப்பு பதிவை, நம்பிக்கையோடு, முறைப்படி புதுப்பித்து, அரசு வேலை பெற்ற, 57 வயதுள்ள கீதா: நான், சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில், குடும்பத்தோடு வசிக்கிறேன். 1975ம் ஆண்டு, பி.யூ.சி., முடித்தேன். என்னுடன் படித்த நண்பர்களோடு இணைந்து, அரசு வேலை கிடைக்க, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பதிவு செய்தேன். திருமணமானதும், குடும்பத்தின் ஏழ்மை நிலை காரணமாக, ஒரு தனியார் நிறுவனத்தில், கணவர் செக்யூரிட்டியாகவும், நான் தட்டச்சராகவும் என, இருவரும் வேலைக்கு சென்றோம். இருந்தாலும், இரு பெண்களையும், பி.இ., மற்றும் பி.காம்., படிக்க வைக்க, கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.தட்டச்சராக, தொடர்ந்து அதே தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாலும், ஒரு நாள், எனக்கு கட்டாயம் அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததை, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை என, தொடர்ந்து, 38 ஆண்டுகளாக புதுப்பித்து வந்தேன்.அரசு வேலைக்காக, 40 வயதை தாண்டியும், தொடர்ந்து புதுப்பித்து வருவதை கவனித்து வந்த உறவினர் பலர், சலிப்பாகவும், சிரிப்பாகவும் பேச ஆரம்பித்தனர். "உனக்கு, எங்கே இனி, அர” வேலை கிடைக்கப் போகுது' என, அறிவுரையும் வழங்கினர். நான், அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், நம்பிக்கையோடு என் கடமையை சரிவர செய்தமையால், 57 வயதான எனக்கு, அரசு வேலை கிடைத்துள்ளது. தற்போது, நானும் ஒரு அரசு ஊழியர் என்ற மதிப்பு, மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது.சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள, நில உடமை பிரிவில், வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், தற்போது கிடைத்துள்ள அரசு வேலை, காலாகாலத்தில் கிடைக்கவில்லையே என, மனதிற்குள் ஒரு வருத்தமும் உள்ளது. மற்றவர்களின் பேச்சைக் கேட்டு, "40 வயதுக்கு மேல், இனி நமக்கு அரசு வேலை எங்கே கிடைக்க போகுது...' என எண்ணி, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததை புதுப்பிக்காமல் இருந்திருந்தால், இன்றைக்கு அனைவருக்கும் முன்உதாரணமாக, நம்பிக்கையான, ஒரு அரசு ஊழியராக இருந்திருக்க முடியாது.

சம்பங்கி பூவைபயிரிடலாம்!

நீர் பற்றாக்குறையால், சம்பங்கி செடியை பயிரிட்டு, மாதம், 50 ஆயிரம் சம்பாதிக்கும், விவசாயி கென்னடி: நான், தஞ்சாவூரில் உள்ள, பர்மா காலனியை சேர்ந்தவன். டிப்ளமோவில், "ஏசி' மெக்கானிக் படிப்பு படித்து, நான்கு ஆண்டுகள், வெளிநாடுகளில் வேலை செய்து திரும்பினேன். விவசாயம் மீது ஆர்வம் இருந்தாலும், என்னிடம் சொந்த நிலம் இல்லாததால், லீசுக்கு நிலத்தை வாங்கி, சம்பங்கி செடி பயிரிட முயற்சித்தேன்.
சம்பங்கி செடியை, களிமண்ணாக இருக்கும் என் நிலத்தில் பயிரிட முடியாததால், செடி நன்றாக வளர, செம்மண் கலந்த வண்டல் மண்ணாக மாற்றினேன். நுண்ணூட்ட சத்தைப் பெற, நவதானியம், தக்கைப்பூண்டை விதைத்து, பூக்கும் நேரத்தில் அவற்றை அப்படியே மடக்கி, இரண்டு முறை நன்கு உழுது, நிலத்தை சீர்செய்தேன்.சம்பங்கி செடி விதைகள், தனியாகக் கிடைக்காது. வெங்காயம் போன்ற வடிவில் கிழங்காக கிடைக்கும். மூன்று ஆண்டுகளுக்கான கிழங்குகளை வாங்கி, இரண்டு மாதங்கள் நன்கு காய வைத்த பின், பாத்திகளாக பிரித்து, முக்கோண முறையில் நட வேண்டும். இம்முறையால், களைகள் வளர்வது அதிக அளவில் தவிர்க்கப்படும்.தெளிப்பு நீர் பாசன முறையில், ஒரு நாள் விட்டு ஒரு நாள், நீர் தெளித்தால் போதும். ஒரு செடியின் இலைகளில், "இலைப் பேன்' நோய் வந்தால், தொற்று நோய் போல், பயிரிடப்பட்ட அனைத்து செடிகளின் இலைகளிலும், பரவ வாய்ப்பு உள்ளது. இதனால், பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிப்பது முக்கியம். 80 சதவீத இயற்கை உரங்கள் மற்றும் 20 சதவீத செயற்கை உரங்கள் என, இரண்டையும் கலந்தே பயன்படுத்துகிறேன்.
நடவு செய்த, ஐந்தாம் மாதத்திலிருந்து, சம்பங்கி பூக்கள் பூக்க ஆரம்பித்தாலும், ஏழு மாதங்களுக்கு பிறகே, வணிக ரீதியிலான விற்பனைக்கு தயாராகும். அதிலிருந்து, மூன்று ஆண்டுகள் வரை, தினமும் பூக்கும் தன்மை கொண்டது. ஒரு ஏக்கர் பயிரிடப்பட்ட நிலத்தில், தினமும், 50 கிலோ பூக்கள் பறிக்கலாம். ஒரு கிலோ சம்பங்கி பூ, 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால், ஏக்கர் ஒன்றுக்கு, மாதம், 50 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம். தொடர்புக்கு: 99764 05612

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக