ஞாயிறு, 26 மே, 2013

ஆங்கிலவழிப் பயிற்சி ஏடு, தேர்வுகளை ஏற்கக் கூடாது: வைகோ

ஆங்கிலவழிப் பயிற்சி ஏடு, தேர்வுகளை ஏற்கக் கூடாது: வைகோ

இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
அரசு பள்ளிகளில் தமிழ்வழிப் பிரிவுகளை, ஆங்கில வழிப் பிரிவுகளாக மாற்றும், தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்புத் தோன்றியது. தாய்மொழி கல்விக்கு எதிரான இந்த திட்டம் கூடாது என்று நாம் வலியுறுத்தும் பொழுது, தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் தற்போது செய்துள்ள பரிந்துரை, தமிழ்நாட்டிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் இனி தமிழ்மொழிக்கு இடம் இல்லை என்ற நிலையை உருவாக்குகின்ற பெரும் விபரீதம் ஏற்படும். தாய்த் தமிழகத்திலேயே தமிழுக்கு அழிவு நேரும். தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில், வரும் கல்வி ஆண்டிலிருந்து மாணவர்கள் எழுதும் பயிற்சி ஏடுகள் மற்றும் கல்லூரித் தேர்வுகளை இனி தமிழில் எழுதக்கூடாது, ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும் என்ற பரிந்துரையை  அரசு முற்றிலும் நிராகரிக்க வேண்டும். தமிழக மாணவர்கள் ஆங்கிலப் புலமை மற்றும் அறிவாற்றலை வளர்த்துக்கொள்ள ஆங்கில வழியில் பயிற்சி ஏடுகளையும், தேர்வுகளையும் எழுத வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏனெனில், தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் தமிழ் வழியில்தான் இவற்றை எழுதி வருகின்றனர்.
திடீரென்று ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்றால், கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அரசுக் கல்லூரிகளில் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய கிராமப்புற மாணவர்கள்தான் பயின்று வருகின்றார்கள். தமிழ் வழியில் பயின்ற தமிழ்நாட்டு மாணவர்கள் தங்களது ஆங்கிலப் புலமையை வளர்த்துக்கொண்டு, கணினித்துறையில் உலகெங்கும் வெற்றிகரமாக பணியாற்றுகின்றனர். எனவே, தாய்மொழியில் கல்வி கற்பது எந்த வகையிலும் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்காது. பட்டப் படிப்பை தமிழ்வழிக் கல்வி மூலம் மேற்கொள்வோருக்கு ஊக்கம் அளித்து, அரசுப் பணிகளில் முன்னுரிமை கொடுத்து, தாய்மொழி தமிழை, கல்வி மொழியாக பயிற்று மொழியாக முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய கடமையைச் செய்யாமல், தமிழ் மொழியை முற்றாக புறக்கணிக்க தமிழக உயர்கல்வி மன்றம் முனைப்பு காட்டுவது வேதனை அளிக்கிறது.
உலகப் பொருளாதாரத்தில் போட்டியிடுகின்ற அளவுக்கு அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்றுள்ள சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் தாய்மொழி கல்விக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. அந்நாடுகளில் ஆங்கிலவழிக் கல்வி என்பதே இல்லை என்பதையும் நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். எனவே, தமிழ்வழிக் கல்விக்கு ஊக்கம் அளிக்கவும், கிராமப்புற மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டும், வருங்காலத்தில் வளரும் தலைமுறையினர், குறிப்பாக மாணவர்கள் தமிழ் மொழியையே அறியாத நாசகார இருளுக்குள் தமிழ் நாட்டை வீழ்த்தும் என்பதால், தமிழக அரசு உயர்கல்வி மன்றத்தினுடைய அக்கிரமமான பரிந்துரையை நிராகரித்துவிட்டு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையையே தமிழக அரசு தொடந்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

1 கருத்து:

  1. தமிழ்நாட்டில் இனி யாரும் தமிழில் பேசவோ,எழுதவோ கூடாது.யாரும் தமிழில் நாளிதழ்கள்,வாரந்திர இதழ்கள்,மாதந்திர இதழ்கள் வெளியிடக்கூடாது. அனைத்து கோயில்களிலும் கண்டிப்பாக சம்ஸ்கிருத மொழியில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும்.வணிக நிறுவனங்களில் உள்ள விளம்பர போர்டுகள் கண்டிப்பாக ஆங்கிலத்தில்தான் எழுதி இருக்க வேண்டும்.குறிப்பாக தமிழக மக்களுக்கு இந்த அரசு உணர்த்துவது ஏன்னவெனில் தமிழில் பேசுவது,எழுதுவது கொஞ்சம்,கொஞ்சமாக குறைத்துக் கொள்ள வேண்டும்.ஆனால் முதல் அமைச்சர் அவர்களை மட்டும் எல்லோரும் வயது வித்தியாசம் பாராமல் "அம்மா,அம்மா"என்று தமிழில் அழைக்க வேண்டும்.இது மட்டும் எல்லோருக்கும் விதிவிலக்கு என்று தமிழக அரசு அறிவித்தாலும் அறிவிப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு