உன்னால் முடியும் பெண்ணே!
பெண்களுக்கான சீருந்து ஓட்டும் பயிற்சி ப் பள்ளியை த் துவக்கி, வறுமையிலிருந்து மீண்ட, பூங்கொடி: நான், ஈரோடு மாவட்டத்தில் உள்ள, ஒரு குக்கிராமத்தில் பிறந்தவள். திருமணமான பின், கணவரோடு திருச்சியில் வசித்து வருகிறேன். பள்ளி பருவத்திலிருந்தே, வாகனம் ஓட்டுவதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு. அதனால், என் வீட்டை சுற்றியுள்ள சில பெண் தோழிகளுக்கு, "டூ வீலர்' ஓட்ட கற்று தந்துள்ளேன். ஒரு மில்லில், மெக்கானிக் வேலை செய்த என் கணவருக்கு, திடீரென வேலை இழப்பு ஏற்பட்டது. இதனால், பிறந்த இரண்டு பெண் குழந்தைகளை வளர்க்க, மிகுந்த சிரமப்பட்டேன்.கஷ்டமான இச்சூழ்நிலையில், வாகனத்தை எப்படி ஓட்ட வேண்டும் என, பயிற்சி தரும் திறமை உள்ளதால், நாம் ஏன் பெண்களுக்கான, "டிரைவிங் ஸ்கூல்' துவங்கக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது. 2005ல், ஒரு பெண் உதவியுடன், பழைய பியட் காரை வாங்கி, "அபிராமி டிரைவிங் ஸ்கூல்' ஆரம்பித்தேன். பல பெண்களுக்கு, ஸ்டைலா கார் ஓட்ட ஆசையாக இருந்தாலும், டிராபிக் மற்றும் குண்டும் குழியுமான சாலையை பார்த்தவுடன் ஏற்படும் பயத்தால், கார் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையே போய்விடும்.இக்குறையை தீர்க்க, சென்னை, மும்பை நகரங்களில் உள்ளதைப் போன்று, "கார் சிம்லேட்டர்' கருவியை, 4 லட்சம் ரூபாய்க்கு வாங்கினேன். இக்கருவி மூலம், ஒரு அறைக்குள்ளேயே டிரைவிங் கற்றுத்தர முடியும் என்பதால், திருச்சியை சுற்றியுள்ள, 4,000 பெண்களுக்கு, என் டிரைவிங் ஸ்கூல் மூலம் கார் ஓட்டும் பயிற்சி தந்து, "டிரைவிங் லைசென்ஸ்'சும் வாங்கி தந்துள்ளேன். சிம்லேட்டர் கரு வியை இயக்குவது, நிஜ காரை ஓட்டுவது போன்ற உணர்வை உருவாக்குவதால், பயமின்றி காரை ஸ்டைலாக சாலையில் ஓட்டுகின்றனர். என் கஷ்ட காலத்தில் தூண்டுதலாக அமைந்த, "உன்னால் முடியும் பெண்ணே' என்ற வாசகத்தை, டிரைவிங் ஸ்கூலுக்காக வாங்கும், ஒவ்வொரு காரின் பின்னாலும் எழுதி வைத்துள்ளேன். ஒரு பெண்ணாக, பெண்களுக்கான ஓட்டுனர் பயிற்சி பள்ளியை வெற்றிகரமாக நடத்தி வருவதில் மகிழ்ச்சியும், மன நிறைவும் கிடைத்துள்ளது.