ஞாயிறு, 5 மே, 2013

குழந்தைகளுக்குத் தனியாக ஒரு நூலகம்

குழந்தைகளுக்கு த் தனியாக ஒரு நூலகம்

ஓர் இனத்தை அழிக்க வேண்டும் என்றால் முதலில் மொழியை அழிக்க வேண்டும் என்றார் ஹிட்லர். மொழியே சமுதாயத்தின் அடையாளம். மொழியைமேம்படுத்தும் இடம் நூலகம்.

நூலகத்தை அமைப்பது சாதாரணமல்ல. மொழியின் மீதும், சமுதாயத்தின் மீதும் தீராத காதலும், அக்கறையும் கொண்ட மனிதர்களால் தான், நூலகத்தை அமைக்க முடியும். தனி மனிதராய், சமுதாயத்தின் மீது கொண்ட ஆதங்கத்தால், சேதுராமன்,40, மடிப்பாக்கத்தில் "ரீடர்ஸ் கிளப்' என்ற பெயரில் குழந்தைகளுக்காகவே ஒரு நூலகத்தை உருவாக்கியுள்ளார்.
அவரோடு உரையாடியதில் இருந்து..

குழந்தைகளுக்கு என தனியாக ஒரு நூலகம் அமைக்க காரணம்?

நான் கார்ப்பரேட் கம்பெனியில், 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினேன். நிம்மதியான வாழ்க்கை, கை நிறைய சம்பளம், சொகுசான கார் என, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தேன்.

சம்பளம்... சம்பளம்... என பந்தய குதிரை போல் ஓடிக்கொண்டே இருந்தேன். ஒருநாள் குழந்தைகள் படிப்பு பற்றி யோசிக்கும் போது தான், அவர்கள் இணையதளம், வீடியோ கேமில் மூழ்கியிருந்தது தெரிந்தது.குழந்தைகளின் கவனத்தை திருப்ப, புத்தக வாசிப்பை முறைப்படுத்தினோம். ஆரம்பத்தில் புத்தகம் படிப்பது போல், நடித்து வீடியோகேம்விளையாடினர்.

தொடர்ந்து கண்காணித்தால், புத்தக வாசிப்பில் மூழ்கினர். அவர்களின் வயதுக்கேற்ப, தேவையான புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிக்க கொடுத்தோம்.பின், தினசரி இதழ்கள், வரலாற்று புத்தகங்கள் என, வாசிப்பு பழக்கம் அதிகரித்தது. என் குழந்தைகள் போன்ற சமவயது குழந்தைகளோடு பேசியதில், குழந்தைகளின் உலகம் பற்றி அறிந்தோம். குழந்தைகளுக்கான நூலகம் அமைக்க வேண்டும் என, தோன்றியது.

தற்போது, 10 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய நூலகத்தை உருவாக்கிஉள்ளேன். குழந்தைகள், மாணவர்கள், பெரியோர் என, அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற புத்தகங்கள் உள்ளன.

உங்கள் நூலகத்தின் சிறப்பு என்ன?

புத்தக வாசிப்பாளர்களுக்காக, www.readersclub.co.in தனி இணைய தளத்தை உருவாக்கியுள்ளோம். எங்கள் இணையதளத்தில் பதிவு செய்து, தேவையான புத்தகத்தை தேர்ந்தெடுத்து, வாசிப்பாளர்களின் முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை அனுப்பினால் போதும். அடுத்த இரு நாட்களுக்குள், வீடு தேடி புத்தகம் வரும். அதற்காக, தனி கட்டணம் கிடையாது. வாசித்து முடித்ததும், வீடு தேடி வந்து பெற்று கொள்வர். நூலகத்தை தேடி எங்கும் செல்ல வேண்டியதில்லை.

இதற்காக, மாத சந்தா, 100 ரூபாய் வரை வாங்கப்பட்டது. தற்போது, புத்தக வாசிப்பு தினத்தை ஒட்டி, குழந்தைகளுக்கு 60 ரூபாயும், பெரியவர்களுக்கு 75 ரூபாயும் மாத சந்தாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், வாரம் ஒரு புத்த கம் என்றமுறையில், புத்தக வாசிப்பை முறைப்படுத்த உள்ளோம்.

புத்தக வாசிப்பு பற்றிய உங்கள் கருத்து என்ன?

புத்தக வாசிப்பு மூலம், சமுதாயத்தின் பிரச்னைகள், சம்பவங்களை அறிந்து கொள்ள முடியும். படிப்பதை காட்டிலும், படித்ததை நண்பர்கள் வட்டத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய, தனி மனித கடமை உள்ளது.அதை அறிந்து, தனிப்பட்ட வாழ்க்கையோடு, சமுதாயத்திற்கும் பயனுள்ள வகையில், ஏதாவது செய்ய வேண்டும். இன்றைய இளைய சமுதாயம், புத்தக வாசிப்பில் பெரிதளவு அக்கறை காட்டுவதில்லை. இது, ஆரோக்கியமான வளர்ச்சி அல்ல.

மேலும், ஒருவர் படித்த புத்தகங்களை மற்றவர்களுக்கு கொடுத்து படிக்க உதவ வேண்டும். உங்களிடம், ஏதாவது படித்து முடித்த புத்தகங்கள் இருந்தால், என் நூலகத்திற்கு கொடுங்கள். உங்கள் புத்தகங்கள், பலருக்கும் பயன்பட இது ஒரு வாய்ப்பாக அமையட்டும்."ரீடர்ஸ் கிளப்' தொடர்புக்கு: 99621 00032/ 93806 55511

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக