சனி, 16 பிப்ரவரி, 2013

சிங்கப்பூர் விமான நிலையத்தில் மறைந்து விட்ட "தமிழ்மொழி'

சிங்கப்பூர் விமான நிலையத்தில் மறைந்து விட்ட "தமிழ்மொழி'
 
திருப்புத்தூர் : சிங்கப்பூர் "சாங்கி' பன்னாட்டு விமான நிலைய அறிவிப்புப் பலகைகளில், "தமிழ்' மொழி நீக்கப்பட்டது. இது குறித்து தமிழக பயணிகளை கவலையடையச் செய்துள்ளது. சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு தமிழர்களின் பங்கு, இங்கிலாந்து ஆட்சி காலத்திலும், தற்போதும் அளவில்லாதது. அந்நாட்டின் அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில், நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும், தமிழர்கள் அதிகம் உள்ளனர். அங்கு சுற்றுலா செல்பவர்களிலும் தமிழர்களே அதிகம்.

வேலைக்கு செல்பவர்களுக்கு வழங்கப்படும் "தற்காலிக அனுமதி கடிதம்' கூட தமிழில் இருக்கும். அரசின் அலுவலக மொழிகளாக தமிழ், ஆங்கிலம், சீனா, மலாய் உள்ளதால், நகரின் பெரும்பாலான அறிவிப்பு பலகைகளில் நான்கு மொழிகளுமே காணப்படும்.

மேலும், சேமநலநதி,பொது பயன்பாட்டு பில்கள், மின் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து அரசு பரிமாற்ற அச்சிதழ்களும் 4 மொழிகளில் இருக்கும். சிங்கப்பூருக்கு சென்னையிலிருந்து தினமும் 25 விமானங்களும், திருச்சியிலிருந்து 4 விமானங்களும் இயக்கப்படுகின்றன.

அங்குள்ள "சாங்கி' பன்னாட்டு விமான நிலையத்தில், இந்த 4 மொழிகளிலும் அறிவிப்புப் பலகைகள் காணப்பட்டன. ஆனால், அண்மை காலமாக, அந்த விமான நிலைய புதிய அறிவிப்பு பலகைகளில், தமிழ் தவிர மற்ற 3 மொழிகளும் இடம்பெறுகின்றன. இதனால் தொடர்ந்து சிங்கப்பூர் சென்று, வரும் தமிழர்கள் விமான நிலையத்தில் "தமிழ்' மறைக்கப்பட்டதைப் பார்த்து, கவலை தெரிவிக்கின்றனர்.

1 கருத்து:

  1. சிங்கப்பூர் தமிழர்கள் என்ன செய்கிறார்கள்? என்ன சொல்கிறார்கள்? சிங்கப்பூர் விமான பரப்புக்களை புறக்கணித்தால் என்ன? உலகில் 8 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு