தோற்றமும், பாவனையுமே பேசும்
சென்னை, டாடா லயோலா சமுதாயக் கல்லூரியில், "சாப்ட் ஸ்கில்'
பயிற்சியாளராகவும், முதல்வராகவும் உள்ள, ஏ.பி.அருண் கண்ணன்:கல்வியில், அதிக
மதிப்பெண்களில் வெற்றி பெற்றாலும், "கம்யூனிகேஷன் ஸ்கில்' எனப்படும்,
பிறருடனான தகவல் பரிமாற்றத்தில், நல்ல திறமை இருப்பது அவசியம். ஏனெனில்,
நாம் பேசுவதற்கு முன்னரே, நமது தோற்றம், நம்மை பற்றி பிறரிடம்
பேசிவிடுகிறது. "பாடி லாங்குவேஜ்' எனப்படும் உடல் மொழியிலும், கவனம்
செலுத்துவது அவசியம். பிறர் நம்மை பற்றி அறியாமலேயே, நம்மை பற்றி
முடிவெடுப்பதற்கு, உடல் மொழி தான், முக்கியக் காரணம். நாம் கலந்து கொள்ளும்
கூட்டம் மற்றும் அதன் தேவைகளை பொறுத்து, நமது உடையும், அலங்காரமும்,
இருப்பது அவசியம். ஏனெனில், நாம் அறிந்த செய்திகளை, பிறருக்கு தெரிவிப்பதை
விட, உடல் மொழி விரைவாக செயல்படுகிறது. முகபாவனை தான், உடல் மொழியில்,
முக்கியப் பங்கு வகிக்கிறது. நம்முடைய பதற்றம், தவிப்பு இவற்றை, நம்
கண்களே, அடுத்தவருக்கு எடுத்துக் காட்டிவிடும். அதற்காக, நாடக பாணியிலான
முகபாவம் தேவையற்றது. இருக்கும் சூழலையும், அதில் நம் பங்கையும், நன்கு
உள்வாங்கியிருந்தாலே போதுமானது. குழந்தைகளிடம் பேசும் போது, குழந்தையாக,
எளிமையான வார்த்தைகளை, பேச வேண்டும். யார் முன்பாகப் பேச வேண்டும், எது
தொடர்பாகப் பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்கிற, முன் தயாரிப்போடு,
தன்னம்பிக்கையும் அவசியம். நாம் சொல்ல வரும் கருத்துக்களை, ஒரு சீரான
வரிசையாகத் தெரிவித்தால், மற்றவர்களுக்கு எளிதில் புரியும். மற்றவர்களை
கூர்ந்து கவனித்தாலே, அவர்கள் வெளிப்படுத்தும் திறன், உடல் மொழியில் பிறரை
கவரும் அம்சங்களையும், எதிர்மறையான குறைபாடுகளையும் குறித்து வைத்து,
நம்மிடமிருந்து நீக்கி, தெளிவு பெறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக