குடியரசுத் தலைவர் இணைய த் தளத்தில் இருந்து கருணை மனு ப் பிரிவே நீக்கம்!
குடியரசுத் தலைவரின் அதிகார பூர்வ இணையதளத்தில்
இருந்து, கருணை மனு போடக்கூடிய பிரிவே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கான பொதுத்தகவல் வழங்கும் விவகாரம், இனி மத்திய உள்துறை
அமைச்சகத்தின் எண்ணப்படி செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் இதுவரை குடியரசுத் தலைவர் முன் காத்திருக்கும் கருணை
மனுக்கள் குறித்த விவரங்கள், அவற்றை கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்ற பிறகு
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி எப்போது சரிபார்த்து கையெழுத்திட்டு
அனுப்பி வைத்தார் போன்ற தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
உயிருடன் பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல்
கசாப்பை தூக்கிலிட்ட உடனே, இந்தப் பிரிவு குடியரசுத் தலைவரின் அதிகார
பூர்வ இணையப் பக்கத்தில் இடம்பெற்றது.
இந்நிலையில், இந்தப் பிரிவு காணாமல் போனது குறித்து கேட்டதற்கு,
குடியரசுத் தலைவர் மாளிகை அளித்த விளக்கத்தில், “கருணை மனு விவகாரங்கள்
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருவதால், இந்தப் பிரிவை பொதுவில்
வைப்பதைத் தவிர்க்கலாம் என்று யோசனை கூறப்பட்டது. அதன் அடிப்படையில் இந்தப்
பிரிவுப் பக்கம் நீக்கப்பட்டது. கருணை மனு குறித்த பிரிவையும்
எதிர்காலத்தில் உள்துறை அமைச்சகமே கையாளும்” என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 11ம் தேதி இது குடியரசுத் தலைவரின் அதிகார பூர்வ
இணையதளத்தின் ஒரு பக்கமாக குடியரசுத் தலைவரின் செயலர் கட்டுப்பாட்டில்
உள்ளீடு செய்யப்பட்டிருந்தது. சாய்பன்னா நிங்கப்பா நடிகார் என்ற நபர், தனது
மனைவி, மகளைக் கொன்ற விவகாரத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத்
தகவலுக்குப் பின்னர் கருணை மனு குறித்த பக்கம் இவ்வகையில் இணையதளத்தில்
இடம் பெற்றிருந்தது. இருந்தபோதும், பிப்.9ம் தேதி அப்சல் குரு தூக்கில்
இடப்பட்ட பிறகு இந்தப் பிரிவு புதுப்பிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் செயலகம் இன்னொரு புதிய பிரிவையும்
இந்த இணையதளத்தில் அறிமுகப் படுத்தியுள்ளது. 1958ஆம் ஆண்டுக்குப் பிறகு
குடியரசுத் தலைவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட நாடுகள், அந்தப்
பயணங்களின் போது, அவருடன் பயணம் செய்த பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள்
ஆகியோரின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இதுவும், அண்மையில் தற்போதைய
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட
நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்தபோது, அவருடன் சென்ற பத்திரிகையாளர்கள்
விவரங்களை வெளியிட்டு, அதன் பின்னரே இந்தப் பக்கத்தையும் துவக்கியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வந்த கேள்வியின் அடிப்படையில்
இந்தப் பிரிவுப் பக்கம் புதிதாக இணையதளத்தில் ஏற்றப்பட்டுள்ளதாக குடியரசுத்
தலைவர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக