புதன், 13 பிப்ரவரி, 2013

வீட்டில் முடங்கிய முதியவரின் கண்டுபிடிப்புகள்


வீட்டில் முடங்கிய முதியவரின் கண்டுபிடிப்புகள் : அரசின் ஊக்குவிப்பும் இல்லை

உடுமலை: நூற்பாலைகளில் தரத்தை மேம்படுத்துவதற்கு கண்டறிந்த கருவியை உற்பத்தி செய்ய, மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டங்கள் கைகொடுக்காததால், கண்டுபிடிப்பாளர் வேதனையில் உள்ளார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை எஸ்.வி., புரம் பகுதியில் வசிப்பவர் கனகராஜ், 71; ஸ்பின்னிங் மில் பிட்டர். ஸ்பின்னிங் மில்களில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவத்தில், நூலின் தரத்தை மேம்படுத்த "நியு மோட் நைப் செபரேட்டர்' எனும் எளிய கருவியை உருவாக்கினார்.கருவியை, மைய விலக்கு விசை தத்துவத்தில் வடிவமைத்து, ஸ்பின்னிங் இயந்திரத்தின் ஸ்பிண்டில்களில் பொருத்துமாறு அமைத்துள்ளார். இக்கருவி நூற்பாலையில், வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.இதை அதிகளவில் உற்பத்தி செய்ய மத்திய, மாநில அரசுகளின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகளிடம் ஊக்குவிப்பு நிதிக்காக விண்ணப்பித்தார்.மத்திய அரசின் தொழில் நுட்ப தொழில் முனைவோர் ஊக்குவிப்பு திட்ட அதிகாரிகளிடம் இக்கருவி குறித்து தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

கோவை தனியார் கல்லூரியில் நடந்த நேர் காணலில், கருவி உற்பத்தி குறித்த திட்ட கருத்துருவை அளித்தார். இது ஏற்கப்பட்டு, மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் ஊக்குவிப்பு திட்டத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது.இக்கருவியை உற்பத்தி செய்ய, 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை ஒதுக்கீடு செய்வதாகவும், இந்நிதி கோவையிலுள்ள தொழில் முனைவோர் ஊக்குவிப்பு திட்ட மையத்திற்கு அனுப்பப்படும்; அம்மையத்தில் கனகராஜ் கருவியை உற்பத்தி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால், இவரது கண்டுபிடிப்புகள் செயல்பாட்டிற்கு வராமல் முடங்கியுள்ளன.இதே போல், புவியீர்ப்பு விசையை அடிப்படையாக கொண்டு மின் உற்பத்தி மற்றும் மனித வள மேம்பாட்டிற்கான கருவியை தயாரிக்கும் முயற்சியில் இவர் ஈடுபட்டு வருகிறார்.

இது குறித்து கனகராஜ் கூறுகையில், ""பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் போதிய ஊக்குவிப்பு இல்லாமல் வெளியுலக பயன்பாட்டிற்கு வருவதில்லை. பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்ட கருவியை உற்பத்தி செய்ய பத்தாண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறேன். முதியோர் உதவி தொகை ஒன்றே எனக்கு வருவாயாக உள்ளது. போதிய நிதி உதவி அளித்தால், எனது கண்டுபிடிப்பு கருவிகள் அனைவருக்கும் பலனளிக்கும் வகையில் செயல்பாட்டிற்கு வரும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக