வியாழன், 14 பிப்ரவரி, 2013

இலங்கையில் மனித உரிமை மீறல்: நவநீதம் பிள்ளை வலியுறுத்தல்


இலங்கையில் மனித உரிமை மீறல்: நவநீதம் பிள்ளை வலியுறுத்தல்

செனிவா : ""இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து, சர்வதேச அளவில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும், '' என, ஐ.நா.,வுக்கான, சர்வதேச மனித உரிமை கமிஷனர் நவநீதம் பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில், 2009ல், விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதி கட்ட சண்டையில், பிரபாகரன் கொல்லப்பட்டார். இதையடுத்து, ஏராளமான விடுதலை புலிகள், அரசு படைகளிடம் சரணடைந்தனர்.இந்த சண்டையின் போது, போர் குற்றம் நடந்ததாக, ஐ.நா., குற்றம் சாட்டியிருந்தது. இது குறித்து விசாரிக்க வேண்டும், என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வற்புறுத்தின. இலங்கை போருக்கு பின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அதிபர் ராஜபக்ஷே தலைமையில், நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

இந்த குழு ஏராளமான பரிந்துரைகளை அளித்தது. ஆனால், பெரும்பாலான பரிந்துரைகளை, இலங்கை அரசு நிறைவேற்றவில்லை, என, ஐ.நா.,மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது, 16 பக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது:குடிபெயர்ந்த மக்களை குடியேற்றுவதில் முன்னேற்றம் காணப்பட்டாலும், மனித உரிமை மீறல் குறித்து, நல்லிணக்க ஆணைக்குழு அளித்த பரிந்துரையின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.போர் முடிந்த பின்பும், தமிழர்கள் பலர் கடத்தப்பட்டுள்ளனர்; சிலர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் பலரை காணவில்லை. இந்த விஷயத்தில் அரசு மெத்தனமாக செயல்பட்டு வருகிறது."நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படும்' என, இலங்கை அரசு உறுதியளித்துள்ளது. ஆனால், இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை, சர்வதேச அளவில், நம்பிக்கைக்குரிய, பாகுபாடு அற்ற விதத்தில் சுதந்திரமாக இருக்க வேண்டியது அவசியம்.இவ்வாறு நவநீதம் பிள்ளை, தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக