வெள்ளி, 4 ஜனவரி, 2013

கழிவுகளில் இருந்து மின்சாரம்

சொல்கிறார்கள்

மாசு ஏற்படுவதை தடுக்கிறது!கழிவுகளில் மின்சாரம் தயாரிக்கும், துணைப் பேராசிரியர் சந்தோஷ்: தென்னிந்தியாவிலேயே, முதன் முறையாக, தஞ்சை பல்கலைக் கழகம், சுற்றுப்புற சூழல் மாசுபடாமல், தேவையின்றி வீணாகும் கழிவுகளை, முறையாக சுழற்சி செய்து, "உயிரி எரிவாயு' தொழில் நுட்பம் மூலம், தூய மின்சாரத்தை உற்பத்தி செய்கிறோம். மனிதக் கழிவுகள், கால்நடைக் கழிவுகள், உணவுக் கழிவுகள், மாட்டுச் சாணம் என, வீண் கழிவுகளை மறுசுழற்சி செய்து, மின்சாரம் சேகரிப்பதற்கு, "உயிரி எரிவாயு' மின் உற்பத்தி தொழில்நுட்பம் என்று பெயர். பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள, 500 கழிவறைகளை ஒருங்கிணைத்து, கிடைக்க கூடிய மனிதக் கழிவுகள், மின் உற்பத்தி நிலையத்திற்கு, குழாய்கள் மூலம், கொண்டு செல்லப்படுகின்றன. மனிதக் கழிவுகள், கலவை கலனை அடைந்ததும் அரைக்கப்படுகிறது. காய்கறிக் கழிவுகளும், உணவுக் கழிவுகளும், "ரேஸ்பர்' அரவையில், தண்ணீர் சேர்த்து அரைக்கப்படுகிறது. மாட்டுச் சாணத்தில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை, சல்லடை அமைப்பு மூலம் நீக்கி, கிடைக்கும் சாண கழிவுகளுடன், தண்ணீர் சேர்த்து அரைக்கப்படுகிறது. மூன்று விதமாக அரைக்கப்பட்டதை, தனித்தனியே நொதி கலனுக்குள் கழிவு கூழ்களாக விடப்படுகிறது. கழிவு கூழ்கள் நொதி கலனுள் கொதிப்பதால், எரிவாயு உருவாகிறது. இயந்திரம் மூலம் அதை உறிஞ்சி, "பவர் ஜெனரேட்டர்' வாயிலாக மின்சாரம் உற்பத்தியாகிறது. பல்கலைக் கழக மெஸ், தஞ்சை நகராட்சி, வல்லம் பேரூராட்சி, நீலகிரி ஊராட்சியிலிருந்து, தேவையான கழிவுகள் கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையத்திற்கு, ஒரு மேற்பார்வையாளர், இரு ஊழியர்கள் போதுமானது. சுழற்சி கலன், கொதி கலன், ஸ்கரப்பர் குழாய், ஜெனரேட்டர் என, திட்டச் செலவு, 61 லட்சம். மத்திய அரசின் எரிசக்தி அமைச்சகம், 21 லட்ச ரூபாய் மானியமாகவும், மீதித் தொகையை பல்கலை துணைவேந்தரும் தந்து உதவினர். தினசரி, 500 யூனிட் மின்சாரம் உற்பத்தியாகிறது. நொதி கலனில் வெளிவரும் கழிவு, தொட்டியில் சேமிக்கப்பட்டு, மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டை விட, 50 சதவீதம் குறைந்த விலையில் உரம் விற்கப்படுகிறது. 2.50 ரூபாயிலேயே, தூய மின்சாரம் உற்பத்தி செய்வதோடு, சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுவதையும் தடுக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக