திங்கள், 31 டிசம்பர், 2012

கூடங்குளம் : கலைநிகழ்ச்சிகள் மூலம் கொண்டு செல்லும் திட்டம்

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தைக் கலைநிகழ்ச்சிகள் மூலம் இந்தியா முழுவதும் கொண்டு செல்லும் திட்டம்
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை கலைநிகழ்ச்சிகள் மூலம் இந்தியா முழுவதும் கொண்டு செல்லும் திட்டம்
 
இராதாபுரம், டிச.31-

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அணுஉலை எதிர்பாளர்கள் ஒரு ஆண்டுக்கும் மேலாக இடிந்தகரை கிராமத்தில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதுமட்டுமின்றி ஏராளமான மக்களை திரட்டி மேலும் பல போராட்டங்களையும் நடத்தி உள்ளனர்.

அணுஉலைக்கு எதிராக போராட்டம் தொடங்கிய நாள் முதல் இதுவரை இடிந்தகரை மக்கள் எந்த ஒரு விழாவையும் ஆடம்பரமாக கொண்டாடவில்லை. திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள்கூட மிகவும் எளிமையாகவே நடத்தப்பட்டன.

இந்நிலையில் 2013 புத்தாண்டை முன்னிட்டு கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா, மராட்டியம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், டெல்லி, ஒடிசா ஆகிய மாநிலங்களை சேர்ந்த அணுஉலை எதிர்ப்பாளர்கள், இயற்கை வளங்கள் பாதுகாப்பு அமைப்பினர், மீனவ மக்கள் 250பேர் நேற்று இடிந்தகரை வந்தனர்.

அவர்களை இடிந்தகரை பங்குத்தந்தை ஜெயக்குமார், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் வரவேற்றனர். பின்பு அவர்களுக்கு அணுஉலைக்கு எதிரான போராட்டத்தின் போக்கு குறித்தும், விளைவுகள் குறித்தும் விளக்கப்பட்டது.

இடிந்தகரை வந்துள்ள வெளிமாநில அணுஉலை எதிர்ப்பு குழுவினர், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை பாடல்கள், நாடகங்கள் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் மூலமாக இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனை புத்தாண்டு தினத்தில் இடிந்தகரையில் இருந்து தொடங்குகின்றனர்.

அதேநேரத்தில் அந்த குழுவினர், விடுதலையை உறுதிப்படுத்துவோம், எதிர்ப்பை கொண்டாடுவோம் என்ற கருத்தை மையப்படுத்தி இங்கு இன்று காலை முதல் நள்ளிரவு 12மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தி புத்தாண்டை கொண்டாடுகிறார்கள்.

இதன் முன்னோட்டமாக இடிந்தகரையில் நேற்று (30-ந்தேதி) கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை கலைநிகழ்ச்சிகள் மூலம் இந்தியா முழுவதும் கொண்டு செல்லும் திட்டத்தை வெளி மாநில அணுஉலை எதிர்ப்பு குழுவினர் இடிந்தகரையில் இன்றுகாலை தொடங்கினர்.

அணுஉலை எதிர்ப்பு போராட்டங்களை விளக்கும் வகையில் பாடல்கள், நாடகங்கள், நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் இக்குழுவினர் பல்வேறு கடற்கரை கிராமங்களுக்கும் சென்று கலைநிகழ்ச்சிகளை இன்று நடத்துகிறார்கள்.

இதில் டாக்டர் வினாயக்சென், வக்கீல் பிரசாந்த் பூஷன், முன்னாள் கடற்படை தளபதி ராம்தாஸ், அஜின் வினாயக், வக்கீல் காலின் கொன் சால்வ்ஸ், பிரபுல் பிட்வாய், லலிதா ராம்தாஸ், அனில் சவுத்ரி, அஜிதா ஜார்ஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக