புதன், 2 ஜனவரி, 2013

சிறுமியர், பெண்களுக்குச் "சாட்டையடி' :கொடுமையான நேர்த்திக் கடன்

சிறுமியர், பெண்களுக்குச்  "சாட்டையடி' : வினோத நேர்த்திக்  கடன்
ஓசூர்: ஓசூர் அருகே, கோவில் திருவிழாவில், பெண்கள் மற்றும் சிறுமியர் மீது பேய் நெருங்காமல் இருக்க, சாட்டையால் அடித்தும், ஆண்கள் தலையில் தேங்காய் உடைத்தும், வினோத வழிபாடு செய்தனர்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில், குரும்பர் இன மக்கள் அதிகம் வசிக்கின்றனர். தற்போது, சொந்த ஊர்களில் வசிப்பவர்கள், ஆடு மேய்ச்சல் தொழிலை செய்து வந்தாலும், வேலை வாய்ப்புக்காக, இடம் பெயர்ந்தவர்கள், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.இவர்களின், குல தெய்வமான, வீரபத்திர சுவாமிக்கு விழா எடுத்து, ஆண்கள் தலையில் தேங்காய் உடைத்தும், பெண்களை சாட்டையால் அடித்தும், வினோத முறையில் நேர்த்தி கடன் செலுத்துவதை, வழக்கமாக செய்து வருகின்றனர். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா எலவம்பட்டி, குறும்பேரி கிராமங்களை சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், ஓசூர் அடுத்த மூக்கண்டப்பள்ளி பகுதியில் வசிக்கின்றனர்.
இவர்கள் ஆண்டுதோறும், புத்தாண்டையொட்டி, ஓசூர் மூக்கண்டப்பள்ளி தோப்பம்மா தேவி கோவில் வளாகத்தில், தங்கள் குலதெய்வமான வீரபத்திர சுவாமி கோவில், திருவிழாவை கொண்டாடுவர். நேற்று, புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு பூஜை செய்தனர். குறும்பர் இன பராம்பரிய நடனமான, சேவாட்டம் நடந்தது.அதன் பின், தேங்காய் உடைக்கும் பக்தர்கள், கைளை மேலே உயர்த்தி, தங்கள் குலதெய்வத்தை வணங்கினர். அவர்கள் தலை மீது, கோவில் குருசாமி தேங்காய்களை உடைத்தார். வீரபத்திர சுவாமி சத்தியா வந்து தேங்காயை உடைப்பதால், தங்கள் தலைக்கு வலி ஏற்படவில்லை என, பக்தர்கள் தெரிவித்தனர்.சிறுமியர் மற்றும் பெண்களை, பேய் நெருங்காமல் இருக்க, சாட்டையால் அடிக்கும் வினோத வழிப்பாடும் நடந்தது. சிறுமியர், பெண்கள் வரிசையாக நிற்க, அவர்கள் கைகள், முதுகில், கோவில் குருசாமி சாட்டையால் அடித்தார்.இதுகுறித்து, கோவில் குருசாமி, வீரபத்திரப்பா கூறியதாவது;எல்லா தெய்வங்களுக்கும், குழந்தை பருவ காலம் உண்டு. ஆனால், எங்கள் தெய்வமான, வீரபத்திர சுவாமிக்கு, குழந்தை பருவ காலம் கிடையாது. வீரத்தில் பிறந்த எங்கள் சுவாமிக்கு, தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையடி வாங்கியும், வழிப்பாட்டால், தங்கள் உடல் ஆரோக்கியம் பெருகும். வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது, எங்களுடைய நம்பிக்கையாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக