ஞாயிறு, 30 டிசம்பர், 2012

அறிவுரை பெறத் தயங்காதீர்!'

அறிவுரை பெறத் தயங்காதீர்!'
மருத்துவர் தேவாம்பிகை: பெண் வாழ்க்கையில் பருவம் அடைவது இயல்பானதும், முக்கியமானதும் கூட; அதே போல் உரிய சமயத்தில், "மெனோபாஸ்' வருவதும் இயற்கையானது."மெனோபாஸ்' என்றால், மாத விலக்கு நின்று விடும் என்று மட்டும், எல்லாருக்கும் தெரியும்; சிலர், நோய்கள் வரத் துவங்கி விடும் என்று பயப்படுவர். பயப்படவும் வேண்டாம்; அதை, உதாசீனப்படுத்தவும் வேண்டாம்.முன்பு, 45 வயதில், "மெனோபாஸ்' வரும்; இப்போது, 55 வயதிற்கு மேல் தான், "மெனோபாஸ்' வருகிறது.இந்த காலகட்டத்தில், "ஓவரி' என்ற சூலகத்தின் செயல்பாடு குறைந்து, மாத விலக்கு சுழற்சி முறையற்றதாக மாறி, சில காலம் கழித்து, முற்றிலுமாக நின்று விடும்.ஆனால், சிலருக்கு, 35 வயதில் கூட, "மெனோபாஸ்' வந்து விடும். இது அபூர்வம் தான். இதை, "ப்ரிமெச்சுர் மெனோபாஸ்' என, குறிப்பிடுவர்."ஓவரி'யில் கட்டி போன்ற பிரச்னைகள் இருந்தாலோ, "ஓவரி'யை அறுவை சிகிச்சை மூலம், அகற்றி இருந்தாலோ அல்லது கீமோதெரபி, ரேடியோதெரபி போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டு இருந்தாலோ, "ப்ரீமெச்சூர் மெனோபாஸ்' வரலாம்.அதற்கான அறிகுறிகளாக, மாதவிலக்கு சுழற்சி முறையில் ஒழுங்கின்மை ஏற்படும்; மாதக்கணக்கில் தள்ளிப் போகும். அதிகமாக வியர்க்கும்; தூக்கமின்மை, அடிக்கடி சோர்வு, மறதி போன்றவை ஏற்படும். ஓராண்டு காலம் வரவில்லை என்றால், "மெனோபாஸ்' என, எடுத்து கொள்ள வேண்டும். பெண்களின் உடலில் சுரக்கும், "ஈஸ்ட்ரோஜன்' என்ற ஹார்மோன் குறைந்து விடுவதால், தாம்பத்திய உறவின் போது, அசவுகரியமும், வலியும் உண்டாகும். இதனால், கருத்தரிக்க முடியாது.சிலருக்கு, முகத்தில் ரோமங்கள் வளரக்கூடும். தலைமுடி உதிர்வு, எடை அதிகரித்தல் போன்ற தொல்லை எல்லாருக்கும் ஏற்படாது; ஆனால், சிலருக்கு வரலாம்.வயது, 45க்கு மேல் ஆகிவிட்டால், "மெனோபாஸை' எதிர்கொள்ள மனதளவில் தயாராகுங்கள். இது, இயற்கையாக நிகழக் கூடியது. ஓர் ஆண்டுக்கு ஒருமுறை, "ஹெல்த் செக்-அப்' செய்து கொள்ளுங்கள். மகப்பேறு மருத்துவரை அணுகி, ஆலோசனை பெறத் தயங்காதீர்.
"மணல்கொள்ளைவேட்டை தொடரும்!'

மணல் கொள்ளையரை வேட்டையாடும், சுடலைக்கண்ணு:தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள, அனவரதநல்லூர் கிராமம் தான், என் சொந்த ஊர். பிளஸ் 2 வரை படித்திருக்கேன். எனக்கு, 50 ஏக்கர் நிலம் இருக்கு. காலங்காலமாக விவசாயம் செய்திட்டிருக்கோம்.முத்தாலங்குறிச்சியில், 2005ல் மணல் குவாரி அமைக்க, அரசு அனுமதி கொடுத்தது. அதோடு நிற்கவில்லை; பக்கத்தில் இருக்கிற கிராமம் முழுவதும், 20, 25 அடி ஆழத்தில் தோண்டி மணல் எடுத்தனர்.இதுகுறித்து, கலெக்டரிடம் மனு கொடுத்தும் பலனில்லை.மதுரை கோர்ட்டில் மனு கொடுத்து, ஆதாரங்களை சேகரிக்க, கேமராவை வாங்கி, இரவும் பகலும், வயல்களில் பதுங்கி இருந்து, போட்டோ எடுத்தேன். ஆதாரங்களை வைத்து, கோர்ட், முத்தாலங்குறிச்சி குவாரியை மூட உத்தரவிட்டது. இது தான், என் முதல் வெற்றி. இதைப் போல், மற்ற ஊரையும் காப்பாற்ற வேண்டும் என்ற ஆதங்கம், எனக்கு இருந்தது.இரண்டு பொக்லைன் மட்டும் பயன்படுத்த வேண்டும்; 1 மீட்டர் ஆழத்துக்கு மேல் அள்ளக் கூடாது; காலை, 7:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை தான் ஓட்டணும்; ஆற்றுக்குள் தடம் போடக் கூடாது என, கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இது, எனக்கு கிடைத்த பெரிய வெற்றி.திருச்சியில், 20 கி.மீ., தூரத்திற்கு, ஆற்றுக்குள் கிராவல் ரோடு போட்டிருந்தனர். ரோட்டை அகற்ற, மனு போட்டு, உத்தரவு வாங்கினேன்.தாமிரபரணியை விட, காவிரி மணல் கொள்ளை அதிகம். கரூர் முதல், நாகப்பட்டினம் வரை, காவிரி கரையிலேயே, 10 நாட்கள் கண்காணித்தேன். ஒவ்வொரு குவாரியிலும், திருவிழா கூட்டம் போல், 20, 30 பொக்லைன்கள் நின்றன.இதைத் தடுக்க, அரசு உத்தரவு பெற்ற குவாரிகள் குறித்து, ஒவ்வொரு மாவட்டமாக, லிஸ்ட் எடுத்தேன். கையில் தூக்கு சட்டி, அதற்குள் கேமரா வைத்து, போட்டோ எடுப்பேன்.உள்ளூர் மக்கள் துணையுடன், 43 குவாரிகளுக்கும் ஆதாரத்தை சேகரித்தேன்."காவிரி நீர்வள ஆதார அமைப்பு' உருவாக்கி, அதன் மூலம் கோர்ட்டுக்கு போனேன். வெற்றி கிடைத்தது. இதையடுத்து, மக்கள் எனக்கு பாராட்டு விழா நடத்தினர். பணம் தரவும் முன்வந்தனர்.எனக்கு, பணம் முக்கியம் இல்லை. மணல் என்பது, இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் சொத்து; அதை அழிய விடக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக