First Published : 01 Feb 2012 10:43:21 AM IST
Last Updated : 01 Feb 2012 01:10:01 PM IST

சென்னை, பிப்.1: 13-வது சட்டத் திருத்தத்தை தனது அரசு நிறைவேற்றும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் உறுதி அளித்துவிட்டு பின்னர் தாம் அவ்வாறு சொல்லவில்லை என்று கூறுவது விருந்து சோறு போட்டுவிட்டு கன்னத்தில் அறைந்த செயலாகும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய அரசும், சிங்கள அரசும் நடத்திய மோசடி நாடகம் ஒரு ஏமாற்று வேலை என்பது அம்பலத்திற்கு வந்துவிட்டது. ஜனவரி 17 ஆம் தேதி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தனது இலங்கை பயணம் குறித்து தெரிவிக்கையில், ராஜபட்ச அரசு தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை தரும் என்றும், 13 ஆவது அரசியல் சட்ட திருத்தத்தை நிறைவேற்றும் என்றும், ஏன் அதற்கும் ஒருபடி மேலே சென்று அதிகாரங்களை வழங்கும் என்றும் தன்னிடம் உறுதி அளித்திருப்பதாக கூறினார். ஆனால், ஜனவரி 30 ஆம் தேதி இலங்கை அதிபர் ராஜபட்சவிடம் இதுகுறித்து நிருபர்கள் கேட்டதற்கு அவ்விதம் நான் சொல்லவே இல்லை என்றும், இலங்கை நாடாளுமன்றம் தான் இதுபற்றி முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.இது இந்திய அமைச்சருக்கு விருந்து சோறு போட்டுவிட்டு கன்னத்தில் அறைந்துள்ள செயலாகும். தொடர்ந்து இந்திய அரசு தமிழக மக்களையும், ஈழத் தமிழர்களையும் ஏமாற்றுவதற்காக 13 ஆவது அரசியல் திருத்தத்தை சிங்கள அரசு நிறைவேற்றும் என்று கூறி வருகிறது.2011 ஆம் ஆண்டு மே மாதத்தில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் தில்லியில் வெளியிட்ட அறிக்கையில் 13 ஆவது அரசியல் சட்ட திருத்தம் நிறைவேற்றப்படும் என்று ஒரு பொய்யை வெளியிட்டார்கள்.13 ஆவது திருத்தம் என்பதையே ஈழத்தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதில் உண்மையான அதிகாரப் பகிர்வு கிடையாது. 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைப்புக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பை, ஒப்பந்தம் கையெழுத்தான பத்து நாட்களுக்குள் அன்றைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா மறுத்தது மட்டும் அன்றி, அதனை எதிர்த்து பிரச்சாரம் செய்வேன் என்றும் கூறினார். அப்பொழுதும் இந்திய அரசு ஊமையாக இருந்தது. பின்னர் 2007 ஆம் ஆண்டில் கொழும்பு உச்சநீதிமன்றத்தில் இணைப்பு கூடாது என்று சிங்கள அரசு தரப்பில் சொல்லப்பட்டதையும் உச்ச நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்டு, வடக்கு-கிழக்கு இணைப்பு கிடையாது என்று தீர்பபளித்ததையும் இந்திய அரசு கண்டுகொள்ளாமல் அப்போதும் வாய்திறக்கவில்லை.தொடர்ந்து ஈழ தமிழர்களுக்கு துரோகம் இழைத்து வரும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசையும் தமிழ் இனப்படுகொலை நடத்தி, தொடர்ந்து இன அழிப்பு வேலையில் ஈடுபட்டு வரும் சிங்கள அரசையும், இந்த இரு அரசுகள் நடத்தும் கபட நாடகத்தையும், தாய்த் தமிழகத்தில் உள்ளோரும், ஈழத்தமிழர்களும், உலகெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும் நன்றாகவே உணர்ந்துள்ளனர். இனியும் இந்திய அரசின் செய்யும் மாய்மால ஏமாற்று வேலைகள் ஒருபோதும் எடுபடாது.இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்


By மறவன்
2/1/2012 8:48:00 PM
2/1/2012 8:48:00 PM


By வரதராஜ் k
2/1/2012 7:34:00 PM
2/1/2012 7:34:00 PM


By நல்லரசு
2/1/2012 6:28:00 PM
2/1/2012 6:28:00 PM




By பழனிசாமி T
2/1/2012 2:31:00 PM
2/1/2012 2:31:00 PM


By பழனிசாமி T
2/1/2012 2:26:00 PM
2/1/2012 2:26:00 PM

