சனி, 4 பிப்ரவரி, 2012

Learning thamizh is compulsory in schools : பள்ளிகளில் தமிழ் பயில்வது கட்டாயம்

பள்ளிகளில் தமிழ்  இலங்க வேண்டிய நிலைப் பாட்டிற்குப் பாராட்டுகள். படிப்படியாக என்னும் முந்தைய அரசின் தவறான நிலையை மாற்றி இக்கல்வியாண்டிலிருந்தே எல்லா நிலைகளிலும் தமிழ் என்னும் நிலையைக் கொண்டு வர  வேண்டும். முதல்வர் முயன்றால் முயாதது என ஒன்று உண்டோ?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
 
பள்ளிகளில் தமிழ் பயில்வது கட்டாயம்

First Published : 04 Feb 2012 01:24:16 AM IST


சென்னை, பிப். 3: பள்ளிகளில் தமிழ் பயில்வது கட்டாயம் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதிபடத் தெரிவித்தார்.சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேரவை காங்கிரஸ் குழு தலைவர் கோபிநாத் (ஓசூர்) வெள்ளிக்கிழமை பேசும் போது நடந்த விவாதம்:கோபிநாத்: திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிகளில் கட்டாயத் தமிழ் என்கிற சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால், உருது, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படிக்கும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். திமுக ஆட்சிக் காலத்தில் எனது கோரிக்கையை பலமுறை எடுத்துக் கூறியும் பதில் கிடைக்கவில்லை.அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சிறுபான்மையின மக்கள் வாழும் பகுதிகளில் அவர்கள் விரும்பிப் பார்க்கும் தனியார் தொலைக்காட்சி சேனல்கள் கேபிள் டி.வி.க்களில் வரவில்லை. இது தொடர்பாக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் சி.வி.சண்முகம்: 2006-ம் ஆண்டு கட்டாய தமிழ் சட்டம் கொண்டு வரப்பட்டது. பள்ளி மாணவர்கள் கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும் என்கிற நோக்கில் அந்தச் சட்டத்தை கொண்டு வந்தனர். 2006-ம் ஆண்டில் முதலாம் வகுப்பில் தமிழில் முதல் பாடமாக படிக்கும் மாணவர்கள் இப்போது ஆறாம் வகுப்பில் தமிழை முதல் பாடமாக படித்துக் கொண்டிருப்பர். இந்தச் சட்டம் படிப்படியாக ஒவ்வொரு வகுப்பாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. 2016-ல் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பிரதான மொழிப் பாடமாக தமிழ் இருக்கும். பகுதி 4-ல் விருப்பப் பாடம் கொண்டு வரப்பட்டு அதற்கான மதிப்பெண், தேர்ச்சிக்கு கட்டாயமாக்கப்படாது.கோபிநாத்: கட்டாயச் சட்டம் கொண்டு வரும் போது, அரசுக்கு அதிகாரிகள் சார்பில் தவறான தகவல்கள் தரப்பட்டுள்ளன. சிறுபான்மைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மற்றும ஆசிரியர்கள் இல்லை. இதனால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அறிவியல் தமிழ் என்கிற திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதை மீண்டும் வர வேண்டும். அதைப் படிக்கிறோம். பிரதான மொழி பாடத்தை எங்களது மொழிகளிலேயே படிக்கிறோம்.முதல்வர் ஜெயலலிதா: தமிழகத்தில் படிக்கின்ற மாணவர்கள் கட்டாயம் தமிழ் படித்தாக வேண்டும் என்பதில் எந்த மாற்றமுமில்லை. கர்நாடகத்தில் கன்னட மொழியிலும், ஆந்திரத்தில் தெலுங்கு மொழியிலும்தான் படித்தாக வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

1 கருத்து: