தன்னம்பிக்கை தான் என் மூலதனம்!'
வெற்றி பெறுவது குறித்து, வகுப்பெடுக்கும், கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளி இளங்கோ: நான் பி.ஏ., ஆங்கிலம் மற்றும் எம்.ஏ., ஒலியியல் பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளேன். கடந்த மூன்று ஆண்டுகளில், 300 கூட்டங்களில் பேசியிருக்கிறேன். நான் பேசிய இடங்கள் எல்லாம் அரசியல் கூட்டமோ, பட்டிமன்றக் கூட்டமோ அல்ல; பள்ளி, கல்லூரி மற்றும் பெரிய நிறுவனங்களில், ஆளுமையை வளர்க்கும் பயிற்சி வகுப்பு மேடைகளில் தான். நான் தங்கப் பதக்கம் பெற்ற போது ஏற்பட்ட மகிழ்ச்சி யை விட, மாணவர்களிடம் தன்னம்பிக்கை பற்றி பேசும் போது அதிக உற்சாகம் ஏற்படுகிறது. என் வகுப்பின் பிரதான நோக்கமே, உணர்ச்சிகளை புத்திசாலித்தனமாக்கி, அதை வெற்றிக்கான காரணி ஆக்குவது எப்படி என்பது குறித்து தான் இருக்கும். அதன் பின், ஆங்கிலத் திறன் வளர்ப்பது பற்றி மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பேன். காரணம், இன்றைய மாணவர்கள் அதிகம் தடுமாறுவது ஆங்கிலத்தில் தான்; இதனால், தன்னம்பிக்கை குறைந்துவிடும். வேகமாக ஆங்கிலம் பேசினால் தான், திறமை என்பது மிகப் பெரிய அபத்தம் என்பதிலிருந்து என் வகுப்பு தொடங்கும்; தன்னம்பிக்கை குறைந்தவர்கள் தான் வேகமாக ஆங்கிலம் பேசுவர். என் வாழ்க்கையில், ரோல் மாடலாக எடுத்துக் கொள்வது, ஐ.ஜி., சைலேத்திரபாபுவை தான். அவர் நடத்தும் போலீஸ் துறை வகுப்புகளில், என் பேச்சு ஒலிபரப்பப்படுவதை நான் பெருமையாக நினைக்கிறேன். எனக்கு பார்வையில்லாததால், செவியும், தன்னம்பிக்கையும் தான், என் வெற்றிக்கான மூலதனம். அதையே தான் இன்றைய மாணவர்களுக்கும் அறிவுரையாகக் கூறுகிறேன்; தன்னம்பிக்கை உள்ளவன் உலகை வெல்வான்!
"சந்தர்ப்பம் கிடைத்தால் சாதிக்கலாம்!'
ஓவியர் மேனகா: என் அப்பா, திருச்சி பெல் நிறுவனத்தில் பணிபுரிந்தார். பெல் குடியிருப்பு வளாகத்திலேயே எங்களின் வீடு இருந்தது. அங்கு கிடைக்கும் களிமண்ணை பிடித்து, சிறு பொம்மைகள் செய்ய கற்றுக் கொண்டேன். பொதுவாக குழந்தைகள், ஆரம்பப் பள்ளியில், முதலில் எழுத்தை கற்றுக் கொண்ட பின், ஓவியத்தை கற்றுக் கொள்வர். ஆனால், நான், "ங' என்ற ஆங்கில எழுத்தை, யானையின் ஓவியமாக புரிந்து கொண்டேன். நான் குழந்தை பருவத்தில் வரைந்த ஓவியங்களுக்கு, பாராட்டுக்களை விட, திட்டுக்களே அதிகம் கிடைத்தது. கல்லூரியில், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் போது, கல்லூரி முதல்வரை தத்ரூபமாக வரைந்து, அவருக்கே பரிசாக கொடுத்தேன். அப்போது, அவர் பாராட்டியதை, என்னால் மறக்கவே முடியாது. நான் வரைந்த, "பேஸ் பெயின்டிங்' ஓவியத்தில், ஒரு பெண் முகத்தில் பாதியை 20 வயது தோற்றத்தையும், மறுபாதியை 80 வயது தோற்றத்துடன் வரைந்துள்ளேன். அழகு நிரந்தரமல்ல, மாறக் கூடியது என்று உணர்த்திய அந்த ஓவியம், மாநில அளவில் பரிசு பெற உதவியது. ஒரு ஓவியனுக்கு, சமூகம், இயற்கை, வரலாறு போன்ற விஷயங்களில் அக்கறையும், உற்று நோக்குதலும் அவசியம். ஆண்களை விட, பெண்கள் மிகச் சிறந்த ஓவியங்கள் வரைவது, கோலம் போடுவது, வீட்டை சுத்தமாக வைத்து, பொருட்களை அதனதன் இடங்களில் அடுக்குவது என, அனைத்து விஷயங்களையுமே கற்பனையோடு தான் செய்கின்றனர். பெண்ணிற்கு வாய்ப்பும், சந்தர்ப்பமும் கிடைத்தால், ஓவியத் துறையில் பெரிய அளவில் சாதிப்பாள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக